full screen background image

பிரான்மலை – சினிமா விமர்சனம்

பிரான்மலை – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை வளரி கலைக்கூடம் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.பி.பாண்டியன் தயாரித்துள்ளார்.

படத்தில் வர்மன் நாயகனாக அறிமுகமாகிறார். இதேபோல் நேகா என்னும் நாயகியும் அறிமுகமாகியிருக்கிறார். மேலும் வேல.ராமமூர்த்தி, கஞ்சா கருப்பு, பிளாக் பாண்டி, அருளாந்தம், மணிமாறன் மற்றும் பல கிராமத்து மக்களும் இதில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – எஸ்.மூர்த்தி, இசை – பாஸ்கர் விஷ்கார், படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், பாடல்கள் – கவிஞர் வைரமுத்து, நடன இயக்கம் – அசோக்ராஜா, பாலகுமாரன், ரேவதி, சண்டை இயக்கம் – ‘நாக்அவுட்’ நந்தா, பாடியவர்கள் – உன்னி கிருஷ்ணன், ஹரிச்சரண், வேல்முருகன், முகேஷ் செந்தில்தாஸ், சின்னப் பொண்ணு, பிரியதர்ஷிணி, பிரியங்கா, எழுத்து, இயக்கம் – அகரம் கமுரா.

தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் பிரான்மலை என்னும் ஊரை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஊரின் பெரிய பிரமுகர் வேல.ராமமூர்த்தி. அனைத்துவித சண்டியர்த்தனங்களும் செய்யத் தெரிந்தவர். அவரிடம் கடன் வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்காதவர்களை குடும்பத்தோடு தூக்கி வந்து தன் வீட்டு மாடியில் அடைத்து வைக்கும் அளவுக்கு கல் நெஞ்சக்காரர். வீட்டில் இருக்கும் ஆட்டுக்குட்டி உடல் நலமில்லாமல் சுருண்டு படுத்துவிட மூன்றாவது நாளே அதனைக் கருணைக் கொலை செய்து குழம்பாக்கும்படி சொல்லும் அளவுக்கு கொடூரமானவர். லோக்கல் போலீஸே அண்ணனிடம் கை கட்டி நின்று பேசும். அந்த அளவுக்கு செல்வாக்கானவர்.

இவருடைய ஒரே மகன் துரைப்பாண்டி என்னும் வர்மன். படித்து முடித்துவிட்டு வேலைக்குப் போகாமல் உள்ளூரிலேயே பொழுதைக் கழித்து வருகிறார். சின்னப் பையன்களுடன் சேர்ந்து கொண்டு பூட்டியிருக்கும் வீட்டுக்குள் புகுந்து சமையலறையில் இருப்பதை சாப்பிட்டுவிட்டு எஸ்கேப்பாகும் கொஞ்சம் சின்ன வயசுத்தனமும் உண்டு. அதே நேரம் தவறு என்றால் தட்டிக் கேட்கும் தைரியமும் உண்டு.

ஒரு தொண்டு நிறுவனத்திலிருந்து அந்த ஊருக்கு வரும் ஹீரோயின் நேகா ஊரில் இருக்கும் ஒரு மன நோயாளியை அக்கறையுடன் அணுகி அவரைக் குளிப்பாட்டி புதிய டிரெஸ் கொடுத்து கவனிப்பதைப் பார்க்கும் ஹீரோ இந்த ஒரு காரணத்துக்காகவே ஹீரோயினிடம் தன் மனதைப் பறி கொடுக்கிறார். அதே நேரம் ஹீரோயினை வம்பிழுக்க வரும் மணிமாறனை கொஞ்சம் ‘கவனித்து’ அனுப்பவும் செய்கிறார். இது ஹீரோயினுக்கும், ஹீரோ மீது ஒரு ‘இது’வை ஏற்படுத்துகிறது.

மகன் ஊருக்குள் இருந்தால் வில்லங்கத்தை வீட்டுக்கே கொண்டு வருகிறான் என்று கருதும் வேல.ராமமூர்த்தி மகனை கரூரில் இருக்கும் தனது உறவினர் வீட்டுக்கு போய் ஏதாவது வேலை பார்க்கும்படி சொல்கிறார். மகன் வர்மனோ அப்பா பேச்சைத் தட்ட முடியாமல் ஊரைவிட்டுக் கிளம்பியவர், கரூருக்குப் போகாமல் கோவைக்கு வருகிறார்.

அங்கே பெண்கள் விஷயத்தில் கையை, காலை நீட்டி தினமும் தர்ம அடி வாங்கிக் கொண்டிருக்கும் பிளாக் பாண்டியிடம் அடைக்கலமாகிறார் நாயகன் வர்மன். பிளாக் பாண்டியுடன் சும்மா சுற்றித் திரியும் வர்மனின் கண்ணில் அவரது ஹீரோயின் நேகா படுகிறார். கோவையில் இருக்கும் ஒரு அனாதை விடுதியில் நேகா இருப்பதை அறியும் வர்மன் அங்கேயே அவருக்கு ‘பிராக்கெட்’ போடுகிறார்.

நேகாவும், வர்மனை காதலிக்கத் துவங்க.. இங்கே அப்பா வேல.ராமமூர்த்திக்கு விஷயம் தெரிகிறது. மகனை உடனேயே ஊருக்குக் கிளம்பி வரச் சொல்கிறார். கையோடு பையனுக்கு தனது சொந்தத்திலேயே பெண் தேடும் படலத்தையும் ஆரம்பிக்கிறார்.

இந்த நேரத்தில் ஒரு நாள் நேகா தான் தங்கியிருக்கும் அனாதை விடுதியில் நடக்கும் பாலியல் தொல்லைகள் பற்றி அறிகிறார். இதை அவர் வர்மனிடம் சொல்ல.. இருவரும் இணைந்து அந்த பாலியல் தொல்லை சம்பந்தப்பட்ட விஷயத்தை செல்போனில் படம் பிடித்து போலீஸிடம் கொடுக்க.. போலீஸ் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்கிறது.

இதையடுத்து அந்த அனாதை விடுதியை இழுத்துமூடிவிட்டு அங்கேயிருப்பவர்களை ஹைதராபாத்துக்கு மாற்றுகிறது தலைமை நிர்வாகம். இதனால் இருக்கும் ஒரு நாள் இடைவெளியில் திருமணம் செய்து கொண்டால் மட்டுமே நேகாவை பக்கத்தில் வைத்திருக்க முடியும் என்ற நிலைமைக்கு ஆளாகிறார் வர்மன். வேறு வழியில்லாமல் அன்றைக்கே அருகில் இருக்கும் சர்ச்சில் நேகா-வர்மன் திருமணம், வர்மனின் குடும்பத்தாருக்குத் தெரியாமல் நடைபெறுகிறது.

இது தெரிந்த பிளாக் பாண்டி வேல.ராமமூர்த்தியால் ஊரில் இருக்கும் தனது குடும்பத்தாருக்கு ஏதாவது பிரச்சினை வரும் என்று சொல்லி தன்னால் அவர்களுக்கு அடைக்கலம் தர முடியாது என்று மறுத்துவிடுகிறார்.

தம்பதிகள் இருவரும் அலையாய் அலைந்து கடைசியில் ஆளுக்கொரு இடத்தில் வசிக்கிறார்கள். மனைவி நேகா லேடீஸ் ஹாஸ்டரில் சேர வர்மன் கஞ்சா கருப்புவின் கடையில் தங்குகிறார். இதைத் தொடர்ந்து பிழைப்புக்கு வழியைப் பார்க்க வேண்டும் என்பதால் வர்மன் கோவையிலேயே வேலை தேடுகிறார்.

இதே நேரம் ஊரில் வேல ராமமூர்த்தியின் உறவினர்கள் வர்மனின் திருமண விஷயம் அறிந்து கொதிக்கிறார்கள். சொந்தத்தில் திருமணம் செய்ய பெண் காத்திருந்தும் வர்மன் செய்த காதல் திருமணம் அவர்களைக் கோபக் கனலில் ஆட்டுகிறது. சொந்தமும், சொத்துக்களும் தங்களை விட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காக அவர்கள் ஒரு சதித் திட்டம் தீட்டுகிறார்கள்.

இது தெரியாமல் கிடைத்த வேலையில் சேர்ந்து ஒரு நல்ல குடும்பஸ்தனாக மாறுகிறார் வர்மன். இந்த நேரத்தில் உறவினர்கள் இவர்களைப் பிரிக்கப் பார்க்க.. இன்னொரு பக்கம் ஜெயிலுக்குப் போன அனாதை விடுதியின் முன்னாள் நிர்வாகி இவர்களை கொலை செய்யப் பார்க்கிறார். கடைசியில் என்னதான் நடந்தது என்பதுதான் இந்தப் படத்தின் மீதமுள்ள கதை.

நாயகன் வர்மனுக்கு இதுதான் முதல் படம். குறையில்லாமல் நடித்திருக்கிறார். அவருடைய முழுமையான நடிப்பு கிளைமாக்ஸில்தான் தெரிகிறது. இது ஒன்றுதான் இவரைப் பற்றிய ஒரே குறை. இயக்குநர் இன்னும் நன்கு இயக்கியிருந்தால் இவரது நடிப்பு சிறப்பாக வெளிப்பட்டிருக்கும்.

அப்பாவிடம் பணிவு, குழந்தைகளுடன் சேட்டை, வில்லன்களுக்கு எதிரி, காதலிக்குப் பிடித்தக் காதலன் என்று பல இடங்களிலும் தன்னால் முடிந்த நடிப்பைக் காட்டியிருக்கிறார் வர்மன்.

நாயகி நேகாவுக்கும் இது முதல் படம். சினிமா முகமாக தெரிகிறார். அசப்பில் சிநேகாவுக்குத் தங்கை போலவே தோற்றமளிக்கிறார். அதிகமாக நடிக்க வாய்ப்பில்லை என்றாலும் கிளைமாக்ஸில் பேசவே முடியாத சூழலில் அவர் இருக்கும் கோலம் அவருடைய மெளன அசைவுகளாலேயே பரிதாபத்தை ஈர்க்கிறது. பாடல் காட்சிகளில் இருவரையும் மிக அழகாகக் காட்டி, நடனமாட வைத்திருக்கிறார்கள்.

அப்பாவான வேல.ராமமூர்த்தி எப்போதும்போல் கிராமத்து நாட்டாமை கேரக்டரை கச்சிதமாகச் செய்திருக்கிறார். தனது மகனை கொன்றுவிடலாம் என்று சொல்லும் தனது மைத்துனரை சட்டென்று எட்டி உதைத்து கோபவேசத்துடன் பேசும் இடத்தில் வெகுவாக ரசிக்க வைக்கிறார் வேல.ராமமூர்த்தி. ஆனால் இன்னும் எத்தனை படங்களில்தான் ஐயா இதே நாட்டாமையாகவே வருவார்..? கெட்டப்பை மாத்துங்க பெரிசு..!

சித்தியாக வருபவர், “ஒரு நாள்கூட அந்தக் காரில் போகும் பாக்கியம் எனக்குக் கிடைக்கலை…” என்கிற அங்கலாய்ப்பிலும்.. வளர்ப்பு மகன் காதலிக்கும் விஷயம் தெரிந்து வீட்டு வேலைக்காரியிடம் புலம்பித் தள்ளும் பாங்கிலும் கவனிக்க வைத்திருக்கிறார்.

வர்மனின் உற்றார் உறவுகளில் பலரும் நாக்கில் தேன் குழைத்து பேசும் வித்தையை கச்சிதமாகப் பேசியிருக்கிறார்கள். அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் அந்தக் கிழவியின் நடிப்பு மிக, மிக அற்புதம். பாராட்டுக்கள் அந்தக் கிழவியம்மாவுக்கு..!

பிளாக் பாண்டி, கஞ்சா கருப்பு காமெடி எடுபடவில்லை. தனியாக எடுத்து திரைக்கதையில் சேர்ப்பிக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால் ஒட்டவில்லை.

படத்தில் குறிப்பிடத்தக்க அம்சம் ஒளிப்பதிவும், இசையும்தான். ‘படையப்பா’, ‘அவ்வை சண்முகி’, ‘வில்லன்’ ஆகிய மிகப் பெரிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எஸ்.மூர்த்தி இந்தப் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அந்தப் படங்களுக்கு நேரெதிரான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில் வேலை செய்யத் துணிந்த அவருக்கு நமது பாராட்டுக்கள்.

கொடுக்கப்பட்ட பட்ஜெட்டிற்குள் கச்சிதமாகப் படமாக்கியிருக்கிறார்  ஒளிப்பதிவாளர். பாடல் காட்சிகளை மட்டும் கொஞ்சம் கொடைக்கானல் லெவலுக்கு அழைத்துச் சென்று அழகுற படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். டூயட் காட்சிகள் கலர்புல்லாக காட்சியளிக்கின்றன.

இசையமைப்பாளர் பாரதி விஷ்கருக்கு இதுதான் முதல் படமாம். அழகான, இனிமையான இசையமைப்பு. அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்துவே எழுதியிருக்கிறார். அனைத்தும் மிக மிக இனிமையானவை. மீண்டும், மீண்டும் கேட்கத் தூண்டும்வகையில்தான் இசையமைக்கப்பட்டுள்ளது.

‘என்னைப் பெத்தத் தாயி’ பாடல் ‘அம்மா என்றழைக்காத’ பாடலைப் போல புகழ் பெற வேண்டிய திரைப்பாடல். சின்ன பட்ஜெட் படங்களுக்கே உரித்தான கவன ஈர்ப்பு இல்லாததால் இப்படியொரு பாடல் இருப்பதே படத்தை பார்த்த பிறகுதான் தெரிகிறது. அம்மா பாசத்திற்கு ஏங்கும் மகனின் உணர்வுகளை மிக அழகாக வார்த்தைகளால் வடித்திருக்கிறார் வைரமுத்து. அதை வேல்முருகன் தனது குரலில் மெருகேற்றி அழகாக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளையும் மனதைத் தொடும்வகையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.

‘முத்த செலவுக்கு’ பாடல் ஆட வைக்கிறது என்றால் ‘காதல் ஒரு புன்னகை’ பாடல் புன்னகையுடன் காதலிக்க வைக்கிறது. ‘ஒரு சிறுவாணி’, ‘புத்தம் புது நிலா’, ‘என்னை நம்பி’ ஆகிய பாடல்களும் இசைத் தரத்துடனும், எழுத்துத் தரத்துடனும் வைரமுத்துவுக்கும், இசையமைப்பாளருக்கும், இயக்குநருக்கும் பெயரை பெற்றுத் தந்திருக்கின்றன.

பெரிய படங்களின் செல்லப் பிள்ளையான படத் தொகுப்பாளர் சுரேஷ் அர்ஸ் இந்தச் சின்னப் படத்துக்கும் அழகாக படத் தொகுப்புப் பணி செய்து படத்துக்குப் பெரிதும் உதவியிருக்கிறார். ஒரேயொரு சண்டை காட்சி மட்டுமே படத்துடன் ஒட்டாமல் இருக்கிறது. அதனை சரியாகச் செய்திருக்கலாம்.

இயக்கத்தில்கூட சிற்சில இடங்களில் கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். பிளாக் பாண்டியின் அறிமுகக் காட்சியில் அவர் ஓடிக் கொண்டே பேசும் காட்சி ரசனையானது. அதேபோல் இன்ஸ்பெக்டரும், வேல.ராமமூர்த்தியும் பேசும் காட்சிகள் ஆண்டான், அடிமை கலாச்சாரம் இப்போதும் இருக்கிறது என்பதை போல் படமாக்கியிருக்கிறார்.

கணவரின் ஊருக்குள் முதன்முதலாக வரும் நாயகி ஊரின் எல்லையில் இருக்கும் பெயர்ப் பலகையைப் பார்த்தவுடன் காரை விட்டுறங்கி மண்டியிட்டு வணங்கி செல்லும் காட்சியை வைத்து, இயக்குநர் பாராட்டைப் பெறுகிறார்.

காதல் காட்சிகள் இருந்து எல்லை மீறாத காதலாகவும், இரட்டை அர்த்த வசனங்களே இல்லாமலும், கிராமத்துக் கதையாக இருந்தும் கேபரே கரகாட்டத்தைக் காட்டாமலும் ஒரு கண்ணியத்தைக் கடைசிவரையிலும் கட்டிக் காப்பாற்றியிருக்கிறார் இயக்குநர். பாராட்டுக்கள் ஸார்..!

சின்ன பட்ஜெட் படங்களுக்கே உரித்தான தோற்றத்தோடு “இன்னும் கொஞ்சம் நல்லா செஞ்சிருக்கலாமே..?” என்கிற ஆதங்கத்தையும் சேர்த்து வைத்து சொல்ல வைக்கிறது இத்திரைப்படம்.

2015-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு இப்போது கடைசியாக இந்த 2018-ம் வருடம், மூன்றாண்டு கால இடைவெளிக்குப் பின்பு இத்திரைப்படம் வெளிவந்துள்ளது. வருடக் கடைசியில் ஒரு நல்ல படம் என்றுதான் சொல்ல வேண்டும்.

வருடக் கடைசி என்பதால் வேறு வழியில்லாமல் கிடைத்தத் தியேட்டர்களில் படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இயக்கத்தில் மாயாஜால மந்திரமெல்லாம் செய்யாமல் தன்னால் என்ன செய்ய முடியுமோ அதையே இயக்குநரும், எவ்வளவுக்கு செலவு செய்ய முடியுமோ அவ்வளவுக்கு தயாரிப்பாளரும் இந்தப் படத்துக்காக உழைத்திருக்கிறார்கள். அது ஸ்கிரீனில் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

ஆணவக் கொலைகாரர்கள் கூலிப் படையினரை அனுப்பித்தான் கொல்வார்கள் என்று அதிகமாக படித்திருக்கலாம். ஆனால் இதில் குடும்பத்திற்குள்ளேயே முடித்துவிடும் ஒரு ஆணவப் படுகொலையை இந்தப் படத்தில் அப்பட்டமாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.  

கிளைமாக்ஸ் இப்படித்தான் இருக்கப் போகிறது என்பதை யூகித்தாலும் ‘ஜாதி’, ‘சொந்தம்’ என்கிற வார்த்தைகளெல்லாம் பெண்களைக்கூட கொலைகாரர்களாக்கிவிடும் என்பதை இந்தப் படத்தில் அழுத்தமாகவே சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

அந்தக் கொலைக் கருவியைத் தயார் செய்யும் ஹீரோவின் அத்தை.. அத்தையின் கணவர் காட்டும் குரூரம்.. கணவனை கொலை செய்வோம் என்று செண்டிமெண்ட் மிரட்டலால் நாயகி படும்பாடு.. என்று படத்தின் இறுதிக் காட்சி நமது குலையை அறுக்கின்றன. அத்தனை அழுத்தமாக கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.

ஜாதி, மத, பேதமற்ற சமூகத்தை அடுத்தத் தலைமுறைக்கு உருவாக்குவோம் என்று என்னதான் கூப்பாடுபோட்டுச் சொன்னாலும் இந்த ஆணவப் படுகொலைகளே ஜாதியையும், மதத்தையும் முன்னிறுத்தி அடுத்தத் தலைமுறையினரை பயமுறுத்துகின்றன. அதற்கு இது போன்ற படங்கள் விளக்காக இருக்கின்றன.

படத்தில் பங்கு கொண்ட அனைத்துக் கலைஞர்களுக்கும், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் நமது பாராட்டுக்கள். வாழ்த்துகள்..!

இந்த வாரத்தில் ‘ஒரு முறை பார்க்கலாம்’ என்கிற வகையில் தமிழில் மிக முக்கியமான சமூக அக்கறையிலான விஷயத்தைச் சொல்லும் ஒரு நல்ல படம் வந்திருக்கிறது. அவசியம் பார்க்கலாம் மக்களே..!

Our Score