பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே – சினிமா விமர்சனம்

பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் ராஜ்கமல், மது, ஸ்வேதா பண்டி, விஜய் டிவி ராமர், ஜெயச்சந்திரன், கிரீஸ் பெப்பி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – வரதராஜ், ஒளிப்பதிவு – சதீஷ்குமார், கர்வா மோகன், இசை – விவேக் சக்ரவர்த்தி, கலை இயக்கம் – ஜனார்த்தனன், படத் தொகுப்பு – ஜி.என்.சரவணன், பாடல் இசை  – சந்திரசேகர், ஜவார் ராஜ், பாடல்கள் – ஜதா சாண்டி, நடன  இயக்கம் – அர்ச்சனா ராம், வசந்தகுமார், இணை தயாரிப்பு – வினோத்,. டி.சங்கர், அணில், வெளியீடு – ஜெனீஷ், மக்கள் தொடர்பு – சக்தி சரவணன்.

ஆண்ட்ராய்டு செல்போனே உலகம் என்று சொல்லித் திரிந்து கொண்டிருக்கும் இன்றைய இளைய சமுதாயத்தை அதே செல்போன் எந்த அளவுக்கு நாசமாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை இந்தப் படம் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

கேமிரா போன் வந்ததில் இருந்து பல்வேறுவிதமாக பெண்களுக்கு எதிரான வன் செயல்கள் நடந்து வருகின்றன. அதில் ஒன்று பெண்களுக்கே தெரியாமல் அவர்களது அந்தரங்க விஷயங்களை வீடியோவில் பதிவு செய்து அதை வைத்து அவர்களை பிளாக்மெயில் செய்து துன்புறுத்துவது. இது போன்ற ஒரு கதையைத்தான் இந்தப் படமும் சொல்கிறது.

நகரில் தொடர்ச்சியாக இரண்டு இளம் பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இருவரின் தற்கொலைகளும் ஒரே மாதிரியாக இருப்பதும், இரண்டிற்கும் ஒரே மாதிரியான காரணம் இருப்பதையும் போலீஸ் கண்டறிகிறது.

இன்னொரு பக்கம் நாயகன் அரவிந்த் பெண்களுக்கு காதல் வலை வீசி அவர்களை காதலிப்பதுபோல் நடித்து அவர்களுடன் நெருக்கமான உறவு வைத்துக் கொண்டு அதை படம் பிடித்து இணையத்தில் பதிவேற்றம் செய்யும் கொடூர செயலைச் செய்து வருகிறான்.

ஏற்கெனவே இரண்டு பெண்களிடம் இதேபோல் நடந்து கொண்டவன், தற்போது மூன்றாவதாக நந்தினியை காதலிக்க ஆரம்பிக்கிறான் அரவிந்த்.

தனது திட்டத்தின் முதல் படியாக நந்தினியை கொடைக்கானலுக்கு அழைத்துச் செல்லும் அரவிந்த் அந்த இடத்தில் நந்தினி தன் மீது வைத்திருக்கும் உண்மையான காதலைப் புரிந்து கொண்டு இனிமேல் தான் நல்லவனாக வாழ வேண்டும் என்று நினைத்து மனம் மாறுகிறான்.

ஆனால், அந்த நேரத்தில்தான் அரவிந்த் கெட்டவன் என்பது நந்தினிக்கு தெரிய வருகிறது. அதே சமயம் போலீஸும் அரவிந்தை கைது செய்ய நெருங்குகிறது. இறுதியில் நந்தினி அரவிந்தை விட்டு சென்றாளா? அரவிந்த் போலீஸில் சிக்கினானா என்பதுதான் இந்தப் படத்தின் மீதமான திரைக்கதை.

சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்திருக்கும் ராஜ்கமல்தான் இந்தப் படத்தில் அரவிந்த்’ என்ற நாயகன் பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். வில்லன் கதாபாத்திரம் என்றாலும் தைரியமாக நடித்திருக்கிறார். இதற்காக பாராட்டுகிறோம்.

அவரும் தன்னால் முடிந்த அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பெண்களிடம் காதல் வசனம் பேசிக் கவரும்போதும், தன் வலையில் சிக்கியவர்களை மிரட்டும்போதும் தனது இருவித முகங்களைக் காட்டி நடித்திருக்கிறார். 

தானும் ஒரு பெண்ணால் உண்மையாகவே காதலிக்கப்படுகிறோம் என்பதை அறிந்தவுடன் அவரும் காதல் பரவசத்தில் காதலியிடம் தனது காதலைச் சொல்லி மன்றாடும் காட்சியில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். வாழ்த்துகள்.

மற்றுமொரு பாராட்டு படத்தில் நாயகியாக நடித்த ஸ்வேதா பண்டிக்கு. மிக சிறப்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். தன்னை விடாமல் நச்சரிக்கும் செல்போன் கடைக்காரனை தவிர்க்கும் காட்சிகளில் தனது எரிச்சலை, உணர்வை அப்படியே காட்டியிருக்கிறார்.

அதேபோல் தான் குழப்பத்தில் இருப்பதை தனது காதலனிடம் காட்டுவதும், அவன்தான் ஒரிஜினல் வில்லன் என்று தெரிந்ததும் பதறுவதுமாக.. தனது நடிப்பின் மூலமாகத்தான் இடைவேளைக்குப் பின்னான காட்சிகளைக் கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறார் நாயகி.

மற்றைய நடிகர், நடிகைகளில் ஒரு சிலர் கவனத்துடன் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக போலீஸில் சிக்கிய ஒரு குற்றவாளி, “சாதாரணமான ஒரு பென் டிரைவின் விலை ஆயிரம் ரூபாய்தான் ஸார். அதை வைச்சுத்தான் லட்சம், லட்சமா சம்பாதிக்க முடியும்..” என்று கெத்தாக தனது வியாபார தந்திரத்தை பேசும் அந்த நடிப்பு, அந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்புடையதே..!

சின்ன பட்ஜெட் என்பதால் மிகக் குறைந்த லொகேஷன்களில், கிடைத்த வசதிகளை வைத்து படமாக்கியிருக்கிறார்கள். ஆனால் இடைவேளைக்கு பின்பான கொடைக்கானல் காட்சிகளில்தான் ஒளிப்பதிவாளர் சதீஷ்குமாரின் ஒளிப்பதிவு கவனிக்க வைத்திருக்கிறது. விவேக் சக்ரவர்த்தியின் இசையும், பின்னணி இசையும் சுமார் ரகம்.

படத் தொகுப்பாளர் கொஞ்சம் கவனக் குறைவாக இருந்துவிட்டார் போலும்.. சில காட்சிகளில் கன்டினியூட்டி பிறழ்கிறது.   

ஒரு சாதாரண செல்போன்களின் மூலமாக பெண்களின் வாழ்க்கை எப்படி பாதிக்கப்படுகிறது என்கிற விழிப்புணர்வை கொடுக்கும்விதமாகத்தான் இந்தப் படத்தை இயக்குநர் வரதராஜ் தயாரித்து, இயக்கியிருக்கிறார். இந்தச் செயலுக்காக அவருக்கு நமது பாராட்டுக்கள்.

எத்தகைய தொழில் நுட்ப வசதிகளும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளுக்கு உதவியாக இருந்தால் நல்லது. இல்லையேல் அது மனித குலத்திற்கே எதிரானது என்பதை இந்தப் படம் சொல்லிக் காட்டுகிறது. அதை இன்னும் கொஞ்சம் அழுத்தமான இயக்கத்தினால் சொல்லியிருந்தால் ஊரே கேட்டிருக்கும்..!

 RATING : 2.5 / 5

Our Score