வெற்றிப் பட இயக்குநர் சரண் இயக்கத்தில் வெளிவந்த ‘பார்த்தேன் ரசித்தேன்’, ‘ஜெமினி’, ‘ஜே.ஜே’ போன்ற வெற்றி படங்களில் இணை இயக்குநராகவும், தெலுங்கு படவுலகில் ‘நா ஊப்பிரி’, ‘கால் செண்டர்’, ‘சீனோடு’ மற்றும் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பீருவா’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் கண்மணி முதன் முறையாக இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார்.
‘பேய்கள் ஜாக்கிரதை’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் ஜீவரத்னம் கதாநாயகனாகவும், ஈஷான்யா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர் மேலும் தம்பி ராமையா, நரேஷ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மனோபாலா, ஜான் விஜய், ஆடுகளம் ஜெயபாலன், தருண் குமார், பிளாக் பாண்டி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இவ்வுலகில் பேய்கள் இருக்கின்றன என்று நம்பும் ஒரு கதாபாத்திரமும், பேய்கள் இல்லை என்று நம்பும் கதாபாத்திரமும் ஒரு கட்டத்தில் சந்திக்க நேர்கிறது. இவ்விருவரையும் இணைக்கும் வண்ணம் ஒரு சம்பவம் நடைபெறுகிறது. அந்த சம்பவம் எதனால் நடைபெறுகிறது..? அந்தக் குறிப்பிட்ட சம்பவத்திற்கு பின் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை நகைச்சுவை பின்னணியுடன் கலந்து கூறும் படமே இந்த “பேய்கள் ஜாக்கிரதை” திரைப்படம்.
இசை – மரிய ஜெரால்டு, ஒளிப்பதிவு – மல்லிகார்ஜின், படத்தொகுப்பு – சுரேஷ் ஆர்ஸ், கலை – வி. ராஜா BFA, பாடல்கள் – கபிலன் வைரமுத்து, விவேகா, நடனம் – அசோக் ராஜா, சண்டை – “டேன்ஜர்” மணி, மக்கள் தொடர்பு – நிகில், தயாரிப்பு நிர்வாகம் – வெங்கட் மாணிக்கம், ஸ்ரீசாய் சர்வேஷ் எண்டர்டைன்மெண்ட் சார்பாக ஜி.ராகவன் இப்படத்தை தயாரிக்கிறார்.
இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெறுகிறது.









