full screen background image

பதான் – சினிமா விமர்சனம்

பதான் – சினிமா விமர்சனம்

பாலிவுட் திரையுலகின் பாட்ஷாவான நடிகர் ஷாருக்கான் 4 ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர் ஹீரோவாக நடித்து வெளியாகியுள்ள படம் இது.

இப்படத்தை யாஷ்ராஜ் பிலிம்ஸ் சார்பில் ஆதித்ய சோப்ரா தயாரித்துள்ளார். சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ளார். ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம், டிம்பிள் கபாடியா மற்றும் ஒரு சிறப்புத் தோற்றத்தில் சல்மான்கானும் நடித்துள்ளனர்.

இப்படம் உலகமெங்கும் 7500-க்கும் மேற்பட்ட திரைகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது. இந்தப் படத்தின் பாடல் காட்சியொன்றில் தீபிகா படுகோனே காவி உடையில் நடித்திருந்தது பெரும் சர்ச்சையாகி, வட மாநிலங்களில் பா.ஜ.க. தொண்டர்கள் ‘பாய்காட் பதான்’ என்று ஹேஸ்டேக் போடும் அளவுக்கு எதிர்ப்பைக் காட்டியதால் இந்தப் படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவானது.

படத்தின் ஒன்லைன் என்னவெனில் நமது அண்டை நாடான பாகிஸ்தான், இந்தியாவில் கொரோனாவைவிட அதிபயங்கரமான ஒரு வைரஸை பரப்ப நினைக்கிறது, இதை இந்திய இராணுவத்தில் உளவாளியாக இருக்கும் ஷாருக்கான் எப்படி தடுக்கிறார் என்பதுதான்.

இந்திய ராணுவ உளவுத் துறையில் ஒரு அதிகாரியாக இருக்கிறார் ஷாரூக்கான். ஒரு ஆபரேஷின்போது காயம்பட்டதால் தற்போது ஓய்வில் இருக்கிறார். ஓய்வு முடிந்து மீண்டும் பணிக்குத் திரும்பும் ஷாரூக், துபாயில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகும் இந்திய ஜனாதிபதியை தீவிரவாதிகள் சிலர் கடத்தப் போவதாக செய்தியறிந்து தனது கூட்டாளிகளுடன் துபாய் செல்கிறார்.

ஆனால் அங்கே ஜனாதிபதியுடன் சென்ற 2 விஞ்ஞானிகள் மட்டுமே கடத்தப்படுகிறா்கள். அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபடும் ஷாரூக்கான் கடத்திய வில்லனைப் பற்றி அறிந்து அதிர்ச்சியாகிறார்.

இதே இந்திய ராணுவத்தில் ஒரு காலத்தில் சக உளவாளியாக இருந்த ஜான் ஆபிரகாம்தான் தற்போது இந்தியாவுக்கு எதிராக, எதிரிகளுடன் இணைந்து செயல்படுவதைக் கண்டறிகிறார் ஷாரூக்கான்,

இந்தியாவுக்குள் சின்னம்மையை தீவிரப்படுத்தும் வைரஸை புகுத்தி இந்தியாவை அழிக்க நினைக்கும் பாகிஸ்தான் ராணுவ ஜெனரலின் திட்டத்துக்குக் கை கொடுக்கிறார் ஜான் ஆபிரஹாம்.

ஜான் ஆபிரஹாமின் இந்த சதி வேலையை தீபிகா படுகோனேவின் உதவியுடன் ஷாரூக்கான் எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் மீதிக் கதை.  

காமெடி, ஆக்சன், செண்டிமென்ட் என்று அனைத்து பகுதிகளிலும் தனது ரசிகர்களுக்கு முழு விருந்து வைத்துள்ளார் ஷாருக்கான்.

57 வயதிலும் 25 வயது இளைஞனை போன்ற தோற்றத்தில் அசரடிக்கிறார் ஷாருக்கான். சிக்ஸ் பேக்கையும் தாண்டி எய்ட் பேக்ஸ் வைத்திருக்கும் அவரது உடற்கட்டு இன்னும் பல லட்சம் பெண் ரசிகைகளை அவருக்கு இந்தப் படத்தின் மூலமாகப் பெற்றுக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஒவ்வொரு ஆக்சன் காட்சிகளிலும் தனது உயிரை கொடுத்து நடித்துள்ளார். சண்டை காட்சிகளில் ரிஸ்க் எடுத்து தனது பராக்கிரமத் திறமைகளை அலட்சியமாகக் காண்பித்திருக்கிறார் ஷாரூக்கான்.

நாட்டிற்காக எந்தவிதமான தியாகத்தையும் செய்ய வேண்டும் என்று அவர் பேசும் வீர வசனங்கள் இந்தியர்களை நிச்சயமாகக் கவரும். கூடவே அதே நேரம் நடிப்பில் காமெடியையும் கலந்தடித்து சிரிக்கவும் வைத்திருக்கிறார்.

தீபிகாவுடனான காதல் காட்சிகளில் மொத்த இந்தியாவின் இளைஞர்களையும் பொறாமைப்பட வைத்துள்ளார். செண்டிமெண்ட் காட்சிகளிலும் நம்மை உருக வைத்திருக்கிறார். 

வில்லனான ஜான் ஆபிரகாமும் தனது வில்லத்தனத்தின் குறையில்லாமல் நடித்து தானும் ஒரு சிறந்த நடிகன்தான் என்பதை நிரூபித்திருக்கிறார். அவருடைய மரணத்தின்போதும் “பாரத மாதாவை கேட்டதாகச் சொல்” என்று சொல்லிவிட்டு சாவதெல்லாம் மிரட்டலின் உச்சக்கட்டம்..!

இவர்கள் இருவருக்கும் நான் சளைத்தவள் இல்லை என்று சொல்வதைப் போல நாயகி தீபிகா படுகோனே படம் முழுவதும் வியாபித்திருக்கிறார். பிகினி உடையில் அவர் தரும் தரிசனம், மொத்த இந்தியாவையும் இன்றைக்கு உச்சுக் கொட்ட வைத்திருக்கிறது.

பாடல் காட்சிகளில் சற்றே பிசகினாலும் எல்லை தாண்டிய பயங்கரவாதமாகிவிடும் என்ற சூழலில் உடையணிந்து ஆடியிருக்கிறார் தீபிகா. சண்டை காட்சிகளில் தீப்பொறி பறக்க.. ஷாருக்கான் மற்றும் ஜான் ஆபிரஹாமுக்கு நிகராக சண்டை போட்டு நம்மை மிரள வைக்கிறார்.

இடையே ரஷ்யாவில் நடக்கும் டிரெயின் சண்டை காட்சியின்போது திடீரென்று வந்து ஷாரூக்கானைக் காப்பாற்றும் சல்மான்கானின் கதாப்பாத்திரம், மிகப் பெரிய அளவில் படத்தில் வெற்றியடைந்துள்ளது. சல்மான் – ஷாருக் ஒன்றாக அமர்ந்து பேசும் காட்சியில் வசனங்களின் உள்ளர்த்தம் புரிந்து தியேட்டர்களில் விசில் சத்தம் பறக்கிறது.

உயரதிகாரியாக நடித்திருக்கும் டிம்பிளின் ஸ்கிரீன் பிரசன்ஸை ஒளிப்பதிவாளர் பாதி இருட்டிலேயே பதிவாக்கி நம்மை ஏமாற்றியுள்ளார். ஆனாலும் கடைசியில் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்யும் டிம்பிள், ரொம்பவே பரிதாபங்களைப் பெறுகிறார்.

ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் இடம் பிடிக்கும் அளவுக்கு இந்தப் படம் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. அந்த அளவுக்கு பிரம்மாண்டத்துடன், பல்வேறு நாடுகளில் படமாக்கியுள்ளார்கள்.

படத்துக்கு மிக பெரிய பலம் ஒளிப்பதிவுதான். கண்ணுக்குக் குளிர்ச்சியை தந்திருக்கிறது படத்தின் ஒளிப்பதிவு. அதே போல மிரள வைக்கும் சண்டை காட்சிகளும் நம்மை பிரமிக்க வைக்கிறது. தமிழில் வசனம் எழுதியவரை நிச்சயமாகப் பாராட்ட வேண்டும். அந்த வசனங்களே படத்தில் கை தட்டலையும், சிரிப்பலையையும் ஏற்படுத்துகிறது.

இயக்குநர் சித்தார்த் ஆனந்தின் விறுவிறுப்பான திரைக்கதையும், அழுத்தமான இயக்கமும் சேர்ந்து இந்தப் படத்தை ஹாலிவுட் படமாக்கியிருக்கிறது.

இதுவொரு முழுக்க, முழுக்க ஒரு ஆக்ஷ்ன் திரில்லர் படம். அதோடு  தேச பக்தியை கலந்து கொடுத்திருக்கும் படமும்கூட. இளைஞர்களின் திருவிழா என்றும் சொல்லலாம்.

தேசப்பற்று என்னும் மருந்தை போதிய அளவில் மட்டுமே கொடுத்து, அதையும் கமர்ஷியல் விஷயங்களுடன் கலந்து கொடுத்திருப்பதால் பார்க்க சுவாரசியமாகத்தான் இருக்கிறது இந்தப் பதான்’ படம்.

எதற்கெடுத்தாலும் பாகிஸ்தான்தானா என்ற நமது வழக்கமான லேசான முணுமுணுப்பை ஓரங்கட்டி வைத்துவிட்டு ஒரு முறை ஜாலியாக பார்த்துவிட்டு வரலாம்..!

RATING : 3.5 / 5

Our Score