full screen background image

பார்த்திபனின் முறையற்ற செயல் – கண்டிக்கும் படத் தயாரிப்பாளர்..!

பார்த்திபனின் முறையற்ற செயல் – கண்டிக்கும் படத் தயாரிப்பாளர்..!

இது அடுத்தப் பஞ்சாயத்து..!

நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் கதை, திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தில் சுதர்சன் என்னும் படத் தொகுப்பாளரை தான் அறிமுகம் செய்வதாக அறிவித்தார். இது பற்றி செய்தியையும் வெளியிட்டார். படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும், பத்திரிகையாளர் சந்திப்பிலும் இதையேதான் கூறியிருந்தார்.

Kathai Thiraikadhai Vasanam Iyakkam Press Meet Stills (2)

ஆனால் இந்த சுதர்சன் என்னும் படத் தொகுப்பாளர் ஏற்கெனவே இயக்குநர் மணிவண்ணன் அவர்கள் இயக்கிய அமைதிப்படை இரண்டாம் பாகம் படத்தின் எடி்ட்டராக இருந்தவர். அந்தப் படத்தில்தான் சுதர்சன் எடிட்டராகவும் அறிமுகமானார். அமைதிப்படை இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் முறைப்படி சுதர்சனை அறிமுகப்படுத்தி வைத்தார் மணிவண்ணன்.

ஆனால் இப்போது எதற்காக பார்த்திபன் விளம்பரங்களில் தான்தான் முறையாக சுதர்சனை எடிட்டராக அறிமுகப்படுத்துவதாக சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை..

இதனைப் பார்த்து கோபப்பட்டுவிட்ட அமைதிப்படை இரண்டாம் பாகம் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி இன்றைக்கு பார்த்திபனை கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

அது இங்கே :

மறைந்த அய்யா மணிவண்ணன் அவர்கள் இயக்கிய ‘நாகராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ'(அமைதிப்படை இரண்டாம் பாகம்) படத்தின் எடிட்டராக சுதர்சன் என்பவரை அறிமுகப்படுத்தினார். அப்போது கிரீன் பார்க்கில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குனர் மணிவண்ணன் அவர்கள் சுதர்சனை அறிமுகப்படுத்தி பேசியும் உள்ளார். அதன் பிறகு அதைத் தொடர்ந்து இரண்டு மூன்று படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர்தான் சுதர்சன்.

இப்பொழுது பார்த்திபன் தான் இயக்கி வெளிவர இருக்கும் ‘கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா அழைப்பிதழில் மணிவண்ணன் அறிமுகப்படுத்திய எடிட்டர் சுதர்சனை, தான் ‘முறையாக’ அறிமுகப்படுத்துவதாக அழைப்பிதழில் அச்சடித்திருக்கிறார்.

CYMERA_20140530_110319

அப்படியென்றால் மணிவண்ணன் அய்யா சுதர்சனை முறையாக அறிமுகப்படுத்தவில்லையா? 50 படங்களை இயக்கிய மணிவண்ணன் அறிமுகப்படுத்திய ஒரு தொழில் நுட்ப கலைஞனை மீண்டும் முறையாக அறிமுகப்படுத்துகிறேன் என்று அழைப்பிதழில் அச்சிட்டிருப்பது மணிவண்ணன் அவர்கள் சுதர்சனை முறை தவறி அறிமுகப்படுத்திவிட்டதாக குறிப்பிடுகிறது.

இது பார்த்திபனின் முறையற்ற செயல். பெருமைக்காக மாரடிப்பதில் பார்த்திபனை மிஞ்ச ஆள் இல்லை. ஓதுவது வேதம்: இடிப்பது பிள்ளையார் கோயில் என்பதாகத்தான் இருக்கும் அவர் நடத்தை போலும். வெளியில் தன்னை ஒரு அறிவாளியாகவும், மனிதாபிமானமுள்ளவராகவும் காட்டிக் கொள்ளும் பார்த்திபனுக்கு ஏன் இந்த வேலை? இது முழுக்க முழுக்க அவரது கசட்டு எண்ணத்தைத்தான் பதிகிறது. அதை இந்த ‘முறையாக’ என்ற ஒரு வார்த்தை காட்டிக் கொடுத்து விட்டது.

இன்றைய காலகட்டத்தில் 50 படங்களை இயக்குவது என்பது சாமானியமான விஷயம் அல்ல… எவ்வளவு பெரிய விஷயம்…? மணிவண்ணன் தனது 50 வது படத்தில் அறிமுகப்படுத்திய ஒரு கலைஞனை… இயக்குவதில் 20 படத்தைக் கூட இன்னமும் எட்டாத பார்த்திபன் முறையாக அறிமுகப்படுத்துகிறேன் என்பது முறையா? அடுத்தவரின் அறிமுகத்தை தனது அறிமுகம் என பறைசாற்றி கொள்வது முறையா?

பார்த்திபனுக்கு தைரியம் இருந்தால் ஒரு உதவி படத்தொகுப்பாளரை அவர் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும். ஏற்கனவே படத் தொகுப்பாளராக வேலை செய்து அனுபவம் வாய்ந்த ஒருவரை தான் ‘முறையாக’ அறிமுகப்படுத்துகிறேன் என்று கூறுவது மறைந்த இயக்குநர் திரு. மணிவண்ணன் அவர்களை அவமானப்படுத்துவதாகும். அதற்கு எங்கள் நிறுவனம் சம்மதிக்காது. இது தவறு என்பதை உணர்ந்து பார்த்திபன் தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.

தாம் எதையாவது புதுமையாக செய்கிறோம், எழுதுகிறோம் என்பதற்காக இந்த விசயத்தையும் சாதாரணமாக அல்லது புதுமைக் கிறுக்குகளில் இதையும் ஒன்றாக எடுத்துக் கொண்டாரோ என்னவோ? அவர் வேண்டுமானால் எது வேண்டுமானாலும் புடிச்சித் திரியட்டும். ஆனால் அந்த கிறுக்கு புதுமைக் கிறுக்கு படிக்கும் வாசகர்களையும் படம் பார்க்கும் ரசிகர்களையும் கிறுக்கு பிடிக்க வைக்காமல் இருந்தால் சரிதான்!!..”

– இவ்வாறு வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

“முறையாக” என்ற ஒரு வார்த்தையினால் பார்த்திபன் இப்போது சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார்.. பொழுது விடிஞ்சு பொழுது போனா திரையுலகில் கட்டப் பஞ்சாயத்துகள்தான் அதிகமாகிக்கிட்டே போகுது..

இதுக்கு பார்த்திபனின் விளக்கம் வந்தாலும் வரலாம்.. வந்தால் சொல்கிறோம்..!

Our Score