full screen background image

‘அஞ்சான்’ சூர்யாவுடன் போட்டியிடுகிறார் பார்த்திபன்..!

‘அஞ்சான்’ சூர்யாவுடன் போட்டியிடுகிறார் பார்த்திபன்..!

புதுமை இயக்குநரான பார்த்திபன், நீண்ட வருடங்கள் கழித்து பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார் தனது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தை..!

ஆகஸ்ட் 1-ஆம் தேதி வெளியாக வேண்டிய திரைப்படம்.., வேலையில்லா பட்டதாரிக்காக ‘ஜிகர்தண்டா’ ஒரு வாரம் தள்ளிப் போய் அதுவும் ஆகஸ்ட்-1-ம் தேதி ரிலீஸ் என்றாகிவிட்டது. அன்றைக்கு ‘ஜிகர்தண்டா’ தவிர ‘சரபம்’ மற்றும் ‘சண்டியர்’ போன்ற படங்களும் ரிலீஸுக்கு வருவது உறுதியாக இருக்க.. என்னடா இது நமக்கு வந்த சோதனை என்று தவித்துப் போன பார்த்திபன், படத்தை ஆகஸ்ட் 29 விநாயகர் சதுர்த்திக்கு ஒத்தி வைத்தார்.

ஆகஸ்ட் 29 அன்று இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த ‘சலீம்’ திரைக்கு வர காத்திருக்கிறது. கூடவே ‘வானவராயனும் வல்லவராயனும்’ வந்தாலும் வரலாம் என்கிற செய்தியும் அவருக்குக் கிடைக்க, வேறு பாதுகாப்பான தேதிகளை பார்க்கத் துவங்கிவிட்டார்.

இப்போது அதிரடி முடிவாக தனது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தை வரும் ஆகஸ்ட் 15 சுதந்திரன தினத்தன்றே-ரிலீஸ் செய்ய முடிவு செய்துவிட்டார் பார்த்திபன். அதே நாளில்தான் சூர்யாவின் ‘அஞ்சான்’ படம் ரிலீஸாகவிருக்கிறது. கூடவே ‘சிநேகாவின் காதலர்கள்’ படமும் வெளிவர இருக்கிறது.

சூர்யா படத்திற்கு போட்டியாக தன் படத்தை களமிறக்குவது குறித்தும் பார்த்திபன் ஸ்டைலில் ஒரு கதையிருக்கிறதாம்.. “கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’ படம் வெளியான அன்றுதான் எனது ‘புதிய பாதை’ படமும் வெளியானது. அன்றைய விளம்பர போஸ்டர்களில் ‘எல்லாரும் அபூர்வ சகோதரர்கள் படம் பார்க்கப் போங்க… டிக்கெட் கிடைக்காதவங்க என் புதிய பாதை படத்துக்கு வாங்க’ என்று போட்டிருந்தோம்.

அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. அதையேதான் தற்போது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்திற்கும் சொல்கிறேன். ‘எல்லோரும் சூர்யாவின் அஞ்சான் படத்திற்கு போங்க. டிக்கெட் கிடைக்காதவங்க என் படத்துக்கு வாங்க” என்கிறார் பார்த்திபன். இதையேதான் அன்றைய விளம்பரங்களில் போடப் போகிறாராம்..!

இந்த போட்டில நாம மறக்கக் கூடாத ஒரு விஷயம்.. சூர்யாவின் அடுத்தப் படத்தில் பார்த்திபனும் ஒரு வெயிட்டான ரோலில் நடிக்கப் போகிறார் என்பதுதான்..!

சரி.. பார்ப்போம்.. அந்தக் காலக்கட்டம்போல் இன்றைக்கு பார்த்திபன் ஜெயிப்பாரா என்று..?

Our Score