பொதுவாகப் புதிய திரைப்படங்கள் உருவாகும்போது, அதன் முதல் பிரதியைப் பிரபலங்களுக்குத் திரையிட்டுக் காட்டுவார்கள். அது ‘செலிபிரிட்டி ஷோ ‘என்று அழைக்கப்படும். திரையீட்டுக்குப் பிறகு படத்தைப் பார்த்த பிரபலங்கள் சொல்கிற கருத்தை விளம்பரங்களுக்குப் பயன்படுத்துவார்கள்.
ஆனால் ஒரு திரைப்படம் என்பது சாமான்ய பார்வையாளர்களை எந்த அளவிற்குப் போய் சேர்கிறது… எந்த அளவுக்கு ரசிக்கப்படுகிறது என்பதை யாரும் கவனிப்பதில்லை.
வெகுஜன மக்களின் மன நிலை என்ன என்பதை யாரும் கண்டு கொள்வதில்லை. இப்படிப்பட்ட நிலையில் ‘பரிசு’ திரைப்படத்தைக் கல்லூரி மாணவிகளுக்குத் திரையிட்டுக் காட்டியுள்ளனர் அந்தப் படக் குழுவினர்.
சமூகத்தின் அனைத்து இடையூறுகளையும், தடைகளையும், புறக்கணிப்புகளையும் ,நிராகரிப்புகளையும் கடந்து ஒரு பெண் நினைத்தால் சாதிக்க முடியும். எடுத்த காரியத்தில் வெற்றி பெற முடியும் என்று சொல்கிற கதை இது. சின்னச் சின்ன சலனங்களுக்கும், பருவக் கவர்ச்சிகளுக்கும் இடம் தராமல் லட்சியத்தை நோக்கிச் சென்று அடையும் ஒரு பெண்ணின் கதை இது.
படத்தின் கதை மையம் கொள்ளும் பிரதான பாத்திரத்தில் ஜான்விகா நடித்துள்ளார். இந்தப் படத்தில் கல்லூரி மாணவி, விவசாயம் செய்யும் பெண், ராணுவ வீரர் என்று மூன்று மாறுபட்ட விதங்களில் தனது நடிப்புத் திறமையைக் வெளிப்படுத்தியுள்ளார் ஜான்விகா.
ஜான்விகாவுக்கு சினிமா மீது அபரிமித ஆர்வம். ஏராளமான முன் தயாரிப்புகளுடன் முழு ஈடுபாட்டுடன் நடித்ததுடன் சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளார்.
மேலும் படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் ஜெய் பாலா, கிரண் பிரதீப், நடித்துள்ளார்கள். மேலும் ஆடுகளம் நரேன், மனோபாலா, சென்ராயன், சச்சு, அஞ்சலிதேவி, சின்ன பொண்ணு, பேய் கிருஷ்ணன், ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்த ‘பரிசு’ திரைப்படத்தை எழுதி, இயக்கியுள்ளார் கலா அல்லூரி. இவரே தனது ஸ்ரீகலா கிரியேஷன்ஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரித்தும் இருக்கிறார். இவர் திரைப்படக் கல்லூரியில் திரைக்கலை படித்தவர்.
ஒளிப்பதிவு – சங்கர் செல்வராஜ், இசை – ராஜீஷ், பின்னணி இசை – சி.வி. ஹமரா, பாடல்கள் – கே.ராஜேந்திர சோழன், படத் தொகுப்பு – சி.எஸ்.பிரேம்குமார், ராம் கோபி, நடனம் – சுரேஷ்சித், சண்டைக் காட்சிகள் கோட்டி – இளங்கோ எனத் தொழில் நுட்பக் கலைஞர்களை இணைத்துக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
இந்தப் ‘பரிசு’ திரைப்படத்தை தனலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவிகளுக்குச் சிறப்புக் காட்சியாகத் திரையிட்டுக் காட்டியுள்ளனர்.
திரையீட்டுக்குப் பின் படத்தின் நாயகியாக நடித்திருக்கும் ஜான்விகா மாணவிகளிடையே பேசும் போது, “பல்வேறு திறமைகள் கொண்ட ஒரு பெண்ணாக இதில் நான் நடித்து இருக்கிறேன். பெற்றோருக்குப் பிடித்த மகளாக, கல்லூரி மாணவியாக, விவசாயம் செய்யும் பெண்ணாக, தந்தையிடம் ஊக்கம் பெறும் மகளாக, துப்பாக்கி சுமந்து ஒரு ராணுவ வீரராக இப்படி பல்வேறு விதமான பாத்திரங்களுக்கு உரியதை ஒரே பாத்திரத்தில் எனக்கு அளித்து வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். அதற்கு இயக்குநருக்கு நன்றி.
இந்தப் படம் இன்று இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்குப் பிடிக்கும். படக் குழுவினரும், உடன் நடித்தவர்களும் ஒரு குடும்பப் படம் போல் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அனைவருக்கும் நன்றி” என்றார்.
தொடர்ந்து படக் குழுவினரிடம் மாணவிகள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தினர். அவர்கள் ஆண் மையமாக இருக்கும் திரையுலகத்தில் பெண்மையம் கொண்டுள்ள ‘பரிசு’ படத்தின் கதையையும் படத்தின் பேசு பொருளையும் பாராட்டினார்கள்.
மிகவும் மன ஊக்கம் தந்தது. என் தந்தையின் நினைவும் வந்தது. ஆண்களும் பார்க்க வேண்டிய படம் இது. எனக்கு தந்தை இல்லை. ஆனால் தந்தையின் அருமை புரிந்தது. இது பெண்களுக்கு ஒரு பாடம், அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
பெண் என்பதில் பெருமையாக உணர்கிறோம் என்று பலவாறு கருத்துகள் கூறினார்கள். பிரபலங்களோ, விமர்சகர்களோ மட்டுமல்ல. படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கும் கருத்து சொல்லும் கௌரவத்தை வழங்கியுள்ளது இந்த முயற்சி..” என்றார்.
திரைப்படக் கலை மக்களை நோக்கிச் செல்லும் இந்த புதுவித முயற்சியைத் திரையுலகினர் வியப்போடு பார்க்கிறார்கள். பாராட்டுகிறார்கள்.
இந்த ’பரிசு’ திரைப்படம் வரும் அக்டோபர் 31-ம் தேதி வெளிவர உள்ளது.









