கிராமத்து சாதி எதிர்ப்பு காதல் கதையுடன் வருகிறது ‘பரஞ்சோதி’ திரைப்படம்..!

கிராமத்து சாதி எதிர்ப்பு காதல் கதையுடன் வருகிறது ‘பரஞ்சோதி’ திரைப்படம்..!

ஐ.பி.எல். சினிமாஸ் நிறுவனம் சார்பில் என்.லட்சுமணன் தயாரித்திருக்கும் திரைப்படம்  ‘பரஞ்சோதி’.

கிராமத்து காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள  இப்படத்தின் கதை 1990-களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. காதல், உறவுகளை எப்படியெல்லாம் சிதைக்கிறது என்பதையும், உறவுகள், காதலையும், காதலர்களையும் எப்படியெல்லாம் சிதைக்கிறார்கள் என்பதையும்,  மையமாக வைத்து அழகியலோடு கூடிய திரைக்கதையோடு எதார்த்த தன்மையை மீறாத கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தில் சாரதி, நாயகனாக அறிமுகமாகியுள்ளார். நாயகியாக ‘திரிஷ்யம்’ புகழ் அன்சிபா நடிக்கிறார். கஞ்சா கருப்பு முக்கிய வேடம் ஏற்றிருக்கும் இப்படத்தில், விஜயகுமார், கீதா, மயில்சாமி, சிங்கமுத்து, முத்துக்காளை, ஷகிலா, சங்கர்குரு ராஜா, மீராகிருஷ்ணன், போஸ் வெங்கட், பாலாசிங், சண்முகசுந்தரம் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சபேஷ்-முரளி இசையமைத்திருக்கும் இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். எஸ்.சந்திரசேகரன் ஒளிப்பதிவு செய்யும்  இப்படத்திற்கு சுதாகர் படத்தொகுப்பு செய்துள்ளார். வினோத் கலை இயக்கம் செய்கிறார். என்.கோபாலகிருஷ்ணன், என்.தமிழ்செல்வன், என்.மணிகண்டன் ஆகியோர் இணை தயாரிப்புப் பணியை மேற்கொள்ள,  ஐ.பி.எல். சினிமாஸ் நிறுவனம் சார்பில் என்.லட்சுமணன் இப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி கோபு பாலாஜி இயக்கியுள்ளார்.

‘பரஞ்சோதி’ படத்தின் பாடல்கள் மெகா ஹிட் பாடல்களாக அனைவரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நா.முத்துக்குமாரின் வரிகளில், சபேஷ்-முரளியின் இசையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள 5 பாடல்களும்,  ஒவ்வொன்றும் ஒரு ரகமாக ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. தற்போது, இளசுகளின் ரிங்டோனாகவும்,  தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் கேட்கும் பாடல்களாகவும் வலம் வருகின்றன.

 படத்தின் முதல் பாடலான “மானே பொன் மானே…” எனத் தொடங்கும் பாடலை பின்னணி பாடகர் வேல்முருகனும், அனிதாவும் இணைந்து பாடியுள்ளனர்.  இந்தப் பாடல் கோவில் திருவிழாவை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

இதில் சாரதி, கஞ்சா கருப்பு, தேஜாஸ்ரீ, ஷகிலா ஆகியோருடன்  பாரம்பரிய நடனக் கலைஞர்களான மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்ற பெரிய நடன குரூப்பை வைத்து மிக பிரம்மாண்டமாக அதிக பொருட்செலவில், சிதம்பரம் அருகேயுள்ள சிவபுரி கிராமத்தில், பொதுமக்களின் பரிபூரண ஒத்துழைப்புடன் படம் பிடித்துள்ளனர்.

இரண்டாவதாக, “வெண்ணிலவே…” என தொடங்கும் மனதை வருடும் மெலோடி பாடலை பாடகர் ஹரிசரண் பாடியுள்ளார். இந்தப் பாடலை சிதம்பரம் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றிலும், மூங்கில் காடுகளிலும் சாரதி, அன்சிபா இருவரையும் வைத்து மிக சிரமப்பட்டு இரவு நேரங்களில் படம் பிடித்துள்ளனர். இந்தப் பாடலுக்கு ராதிகா நடனம்  அமைத்துள்ளார்.

மூன்றாவது பாடலாக வரும் “இந்தப் பறவைகள் போவது எங்கே…” என தொடங்கும் பாடலை பின்னணி பாடகர் கிருஷ்ணராஜ்  பாடியுள்ளார்.  ‘மான்டேஜ்’ காட்சிகளாகப் படம் பிடிக்கப்பட்டுள்ள இந்த பாடல் வரிகளும், படமாக்கப்பட்டவிதமும் அனைவரையும் சிந்திக்கத் தூண்டும்விதத்தில் அமைந்துள்ளது.

நான்காவதாக வரும் “இடி மின்னலோடு….”  என தொடங்கும் பாடலை பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் மற்றும் சத்ய பிரகாஷ் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இதில் நாயகன் சாரதி, நாயகி அன்சிபா இருவரும் கொட்டும் மழையில் நனைந்தபடி நடித்துள்ளனர். இருவரும் காட்டிய நெருக்கத்தில் படக் குழுவினர்அசந்து போனார்களாம்.

ஐந்தாவது பாடலான, “அம்மா அம்மம்மா…” என்ற அம்மா சென்டிமெண்ட் பாடல், நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ்ச் சினிமாவில் இடம் பெற்றுள்ள அம்மா செண்டிமெண்ட் பாடலாக ஹிட்டாகியுள்ளது. இப்பாடலை விஜய் யேசுதாஸ் மனம் உருகி, கண் கலங்கி பாடியுள்ளார். இதில் அம்மாவாக கீதா நடித்துள்ளார். இந்தப் பாடலில் தாய்மையின் மரணத்தை மான்டேஜ் காட்சிகளாகப் படம் பிடித்துள்ளனர். இந்தப் பாடலைப் பார்ப்போரும், கேட்போரும் மனம் உருகுவது நிச்சயம்.

இப்படி காதல், அம்மா செண்டிமெண்ட், மெலோடி, ஆட்டம் போடவைக்கும் குத்து பாடல், என அனைத்து ரகங்களிலும் ஒவ்வொரு பாடல் என்றவிதத்தில், ‘பரஞ்சோதி’ படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

Our Score