தீபம் சினிமா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ்.கணேஷ், எம்.எஸ்.வினோத் குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘பஞ்சு மிட்டாய்’.
இத்திரைப்படத்தில் மா.கா.பா.ஆனந்த் ஹீரோவாகவும், நிகிலா விமல் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும், சென்ட்ராயன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஒளிப்பதிவு – மகேஷ் கே.தேவ், இசை – டி.இமான், படத் தொகுப்பு – ராம சுதர்சன், கலை இயக்கம் – ஏ.கே.முத்து, பாடல்கள் – யுகபாரதி, நடனம் – சிவசங்கர், ராதிகா, தனசேகர், பிரபு, தயாரிப்பு வடிவமைப்பு – வி.பி.பாபு, ஸ்டில்ஸ் – ஏ.எஸ்.அன்பு, மக்கள் தொடர்பு – நிகில், விளம்பர வடிவமைப்பு – நந்தன் ஜீவா, கிராபிக்ஸ் டிஸைனிங் – சீனிவாசன் மோகன், லைன் புரொடியூஸர் – கே.வி.ரமேஷ், தயாரிப்பு – எஸ்.கணேஷ், எம்.எஸ்.வினோத் குமார், எழுத்து, இயக்கம் – எஸ்.பி.மோகன்.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் எஸ்.பி.மோகன், “இத்திரைப்படம் மாய எதார்த்த திரை வடிவத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற திரைக்கதையில் வெளிவரும் முதல் தமழ்த் திரைப்படம் இதுதான்…” என்கிறார் சந்தோஷமாக.
அவர் மேலும் பேசும்போது, “முழுக்க, முழுக்க நகைச்சுவை கலந்த கமர்ஷியல் வெற்றிக்கான அனைத்து அடையாளங்களையும் தனக்குள் வைத்திருக்கும் திரைப்படம் இது.
படத்தில் ஹீரோவான மா.கா.பா. ஆனந்த், பரோட்டா மாஸ்டராகவும், ஹீரோயின் நிகிலா விமல், கிராமத்துப் பெண்ணாகவும், நடிகர் பாண்டியராஜன் ஒரு மருத்துவராகவும் நடித்துள்ளனர்.
மேலும், நடிகர் சென்ட்ராயன் இதில் கழுதையாக நடித்துள்ளார். கழுதைக்காக எல்லோரையும் பகைத்துக் கொள்ளும் ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் சென்ட்ராயன் கல்கியிருக்கிறார்.
சிறந்த இரண்டு சிறுகதைகளை தேர்வு செய்து அதனை ஒரே திரைப்படமாக உருவாக்கியுள்ளோம். இதன் திரைக்கதையை ஜே.பி.சாணக்யா, கோபாலகிருஷ்ணன், எழில் வரதன், கு.செந்தில்குமார் ஆகிய நான்கு எழுத்தாளர்கள் இணைந்து சிறப்பாக அமைத்து தந்துள்ளனர்.
முதல் முறையாக மாய எதார்த்தவாத யுக்தியை கையாண்டு, நடக்க முடியாத எதார்த்த நிகழ்ச்சிகளை மாய எதார்த்தவாதத்தில் இத்திரைப்படத்தில் சொல்லியிருக்கிறோம்.
இந்தியாவின் முதல் மாய எதார்த்தவாத திரைப்படம் இது என்பதால், கண்டிப்பாக இப்போது வரும் படங்களிலிருந்து இந்த ‘பஞ்சு மிட்டாய்’ வித்தியாசமாகத்தான் தெரியும்.
நம்ப முடியாத நிகழ்சிகளை நம்பக் கூடியவற்றுடனும், நடைமுறையுடனும் இணைத்து ஒரு மாய தோற்றத்தினை உருவாக்கும் போக்குதான் மாய எதார்த்தம். இதுபோல, இப்படத்தின் கதாநாயகன், தான் பார்க்கும் உண்மை நிகழ்சிகளை கற்பனையால் மிகைப்படுத்தி பார்க்கிறான். இதனால் என்ன நடக்கிறது என்பதுதான் இதன் திரைக்கதையின் சுவாரசியம்.
காற்றில் பறக்கும் இலேசான பஞ்சு போன்ற, அதேநேரத்தில் எல்லோருக்கும் பிடித்த பஞ்சு மிட்டாயை வாயில் போட்டவுடனே அது இலகி வயிற்றினுள் செல்வதுபோல இந்த படத்தின் உணர்வுகளும் நமக்குள் உடனேயே இலகிச் செல்லும்.
படம் பார்க்கும் ரசிகர்களை சுவாரசியப்படுத்தவும், செண்டிமெண்ட்டுக்காகவும்தான் கழுதையின் புகைப்படம் படத்தின் போஸ்டர்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. படம் பார்த்த பின்பு, இதன் அர்த்தம் ரசிகர்களுக்கு இன்னும் தெளிவாக புரியும்.
இந்தப் படம், வரிவிலக்கு வாங்கியிருப்பதால், கண்டிப்பாக எல்லா வயதினரையும் கவரும். அதுமட்டுமில்லாமல், இந்தத் திரைப்படத்தின் கரு, மொழியைத் தாண்டி அனைவராலும் ரசிக்கப்படும்.
சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட வேண்டிய கதை இது. ஆனால், மக்களுக்கு ஒரு வித்தியாசமான உனர்வை ஏற்படுத்த மாய எதார்த்தம் என்ற ஒரு திரைக்கதையை விரும்பியதால் படத்தின் மொத்த பட்ஜெட் ஐந்தரை கோடியைத் தொட்டுவிட்டது.
இந்தப் படம் மொத்தமாக 70 நாட்களில் படமாக்கப்பட்டுவிட்டது. ஆனால், மாய எதார்த்தவாத காட்சிகளை உருவாக்க எங்களுக்கு நிறைய நாட்கள் தேவைப்பட்டது. மொத்த படத்தில் பாதி நேரம், அதாவது 56 நிமிடங்களுக்கு மேல், கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கின்றன. இதற்கான கிரீன் மேட் வொர்க், செட் வேலைகள், கிராபிக்ஸ் வேலைகள் என இதற்கே ஒன்பது மாதங்களுக்கு மேல் செலவாகிவிட்டது.
இப்போதைக்கு தமிழின் ஹிட்டான இசையமைப்பாளரான D.இமான், இப்படத்திற்கான இசையை மிக அற்புதமாக தந்துள்ளார். படத்தின் SINGLE TRACK-ஐ VIJAY TV-ன் SUPER SINGER FINALE நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் வெளியிட்டோம். இது எதிர்பார்த்ததுபோலவே ஹிட் ஆகியுள்ளது. YOU TUBE, CALLER TUNE-லும் இந்தப் பாடல் அதிக ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. முறையான பாடல் வெளியீட்டிற்கு பிறகு, மற்ற பாடல்களும் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெறும் என்று நம்புகிறோம்.
கடைசியாக ஒன்று, படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவருமே இந்தப் படத்தை தங்களது மனைவிமார்களுக்கு காணிக்கையாக்குவார்கள். இது மட்டும் உறுதி..” என்றார் உறுதியாகவே..!