full screen background image

பழகிய நாட்கள் – சினிமா விமர்சனம்

பழகிய நாட்கள் – சினிமா விமர்சனம்

தயாரிப்பாளர் ராம்குமாரின் ராம்தேவ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் மீரான், மேக்னா, செந்தில் கணேஷ், ஸ்ரீநாத், வின்சன்ட் ராய், நெல்லை சிவா, சிவக்குமார் மற்றும் சுஜாதா என்று பல நடிகர், நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் – ராம்தேவ், இசை – ஜான் ஏ.அலெக்ஸ், ரூபேஷ், ஷேக் மீரா, பின்னணி இசை – ஷேக் மீரா, ஒளிப்பதிவு – பிலிப் விஜயக்குமார், மணிவண்ணன், படத் தொகுப்பு – துர்காஷ், நடன இயக்கம் – எடிசன், பாடல்கள் – ராம்தேவ், கபிலன், மக்கள் தொடர்பு – வெங்கட்.

சின்ன பட்ஜெட் படங்களுக்கே உரித்தான பிரச்சினைகளை சந்தித்து பல முறை வெளியீட்டுத் தேதி குறிக்கப்பட்டும், வெளியிட முடியாமல் தத்தளித்து… கடைசியாக இந்த வாரம்தான் இத்திரைப்படம் தமிழகமெங்கும் வெளியாகியிருக்கிறது.

காதலை மயமாக வைத்து தமிழில் இதுநாள்வரையிலும் பல திரைப்படங்கள்  வெளிவந்துள்ளன..! ஆனால்,  இந்தப் பழகிய நாட்கள்’ திரைப்படம்  காதலின்  பல குணாதிசயங்களையும், காதல்  வயப்படும்  ஜோடிகளின்  மனப்போக்கையும்  மாறுபட்ட  கண்ணோட்டத்தில்  சொல்லியிருக்கிறது..!

காதலிப்பது என்பது இரு வகைப்படும். ஒன்று – இளம் வயதில் ஏற்படும் இனக் கவர்ச்சி எனப்படும் முதல் காதல், இரண்டாம் வகை – உரிய வயதில் ஏற்படும் பக்குவப்பட்ட முதிர்ந்த காதல்.

இந்த  இரு  வகையான  காதல்களைப்  பற்றியும்  இயக்குர் ராம்தேவ் மிக யதார்த்தமாகவும், இயல்புத் தன்மை மீறாமலும்,  ஒரு  காதல்  ஜோடியை  மையமாக  திரைக்கதையில்  அமர்த்தி,  சுவைபட,  துளிகூட  விரசமின்றி இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்.

ஒரே பள்ளியில் படிக்கும் மாணவர்களான நாயகன் மீரானும், மேக்னாவும் காதலிக்கிறார்கள். இருவரின் காதலையும் கேள்விப்படும் இருவரது பெற்றோர்கள் அவர்களைக் கண்டிக்கிறார்கள். இருவரையும் பிரிக்கவும் முயல்கின்றனர்.

அது முடியாமல் போக வேறு வழியில் இவர்களைப் பிரிக்க நினைத்த மேக்னாவின் அப்பா தான் டெல்லிக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு குடும்பத்தை அழைத்துக் கொண்டு செல்கிறார். மேக்னா டெல்லிக்குக் குடி போனவுடன் அவருடன் தொடர்பு கொள்ள முடியாமல் தவிக்கிறார் மீரான்.

பல வருடங்கள் கழித்து மேக்னா ஒரு மருத்துவராகி மீண்டும் தங்களது சொந்த ஊருக்கே, தனது அம்மாவுடன் குடி வருகிறார். இங்கே மீரானோ தனது காதலையும், காதலியையும் மறக்க முடியாமல் சரியாகப் படிக்காமல் முழு நேர குடிகாரனாக, வாழ்க்கை மீது ஒரு பிடிப்பே இல்லாதவனாக மாறிவிட்டான்.

மீரானின் குடிகாரத் தோற்றம் மேக்னாவுக்கு பயத்தைக் கொடுக்கிறது. அவனுடன் திரும்பவும் காதலுடன் இருக்க முடியாது என்கிறாள். அவளுக்காகத்தான் இத்தனை நாட்கள் தான் காத்திருந்ததாக மீரானும் சொல்கிறான். ஆனாலும், காதல் கை கூடாமல் இருக்கிறது.

மேக்னா மீரானைத் திருத்த முயற்சிக்கிறாள். இந்த முயற்சி வெற்றி பெற்றதா..? இல்லையா..? இறுதியில் காதலர்கள் இணைந்தார்களா.. இல்லையா..? என்பதுதான் இந்த 100 சதவிகித உண்மையான காதலைச் சொல்லும் படத்தின் திரைக்கதை.

நாயகன் மீரான் பள்ளி மாணவன் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். அந்த வயதுக்கேற்ற இன்பாச்சுவேஷன் என்ற இனக் கவர்ச்சிக்கேற்ப அவருடைய நடிப்பைக் காட்டியிருக்கிறார்.

காதலி மென்று துப்பிய பபுள்கம்மை நோட்டில் ஒட்டி வைத்து அதற்கொரு கவிதையையும் எழுதி வைக்கும் பைத்தியக்கார வேலையையும் செய்து காட்டுகிறார். தனிமையில் தலைகாணியை கட்டியணைத்து கனவு காணும் சராசரி காதலனாக வாழ்ந்திருக்கிறார்.

இந்த வாழ்க்கை போய்அடுத்தக் கட்ட வாழ்க்கையில் குடியில் மூழ்கி தனது சுயத்தை இழந்து பரிதாபத்தை வரவழைக்கிறார். மீண்டும் காதலைப் புதுப்பிக்க அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியடைய.. அந்தத் தோல்வியின் நாயகன் என்ற பிம்பத்தை உண்மையாக தன் நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார் நாயகன் மீரான். வாழ்த்துகள்.

நாயகி மேக்னா பல சின்ன பட்ஜெட் படங்களில் நாயகியாக நடித்தவர். பல படங்களில் நடித்த அனுபவம் இங்கே அவருக்குக் கை கொடுத்திருக்கிறது. பள்ளியில் காதல்வயப்பட்டு பேசுவதும்.. பின்பு பொறுப்பான மருத்துவராக வந்த பின்பு காதலரைத் திருத்த முயற்சித்து தோல்வியடைந்து.. விரக்தியின் உச்சத்தில் நின்று பேசும் சில காட்சிகளிலும் இவ்வளவு பெரிய படத்தைத் தாங்கியிருக்கிறார் என்றே சொல்லலாம்.

நாயகியின் தேர்வு பாராட்டுக்குரியது. இவர் போன்ற நடிகைகளுக்கு பெரிய பட்ஜெட் படங்களில் ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் மேக்னா.

மேலும் நாயகன் மற்றும் நாயகியின் பெற்றோர்களாக நடித்தவர்கள் தங்களது பதை, பதைப்பை உணர்ந்து காட்டியிருக்கிறார்கள். வின்சென்ட் ராயின் பக்குவமான நடிப்பு குறிப்பிடத்தக்கது.

இரண்டு பேர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். வித்தியாசம் பார்க்க முடியாமல் ரசிக்க முடிந்திருக்கிறது. படத்தின் மிகப் பெரிய பலம் இசையும், பாடல்களும்தான். ‘எனக்கு என்ன ஆச்சு’ பாடல் இந்தாண்டின் சிறந்த மெலடி பாடல்களில் ஒன்றாக இடம் பிடிக்கும். மேலும், ‘பழகிய பறவை’ பாடலும் அடுத்த இடத்தைத் தொடுகிறது. செந்தில் கணேஷ் பாடியிருக்கும் ‘காதல் ஒரு பேப்பர் போல’ பாடல் இன்றைய காதலர்களுக்கும், காதலுக்கும் இதமாக இருக்கிறது.

சில காட்சிகளை குறிப்பால் உணர்த்தியிருக்கிறார் இயக்குநர். நாயகியின் குடும்பத்தினர் திட்டமிட்டு டெல்லிக்கு டிரான்ஸ்பராகி செல்வதை முதலில் சொல்லாமல் நாயகனின் அப்பா மூலமாகச் சொல்ல வைப்பது.. வீட்டுக்கு வந்த நாயகனுக்கு முதலில் காபி கொடுக்காமல்.. நாயகியுடன் வேலை செய்யும் சக மருத்துவருக்குக் கையில் கொடுத்துவிட்டு.. நாயகனை காபியை டிரேயில் இருந்து எடுத்துக் கொள்ளும்படி நாயகியின் அம்மா சொல்வதெல்லாம் நயமான காட்சிகள். சிறப்பான இயக்கத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் ராம்தேவ்.

இளம் வயதில் ஏற்படும் காதல்  அவர்களின் வாழ்வில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்..? அதிலிருக்கும் போலித்தனமான காதலை உணர்ந்தவர்கள் எப்படி அதையும் தாண்டி வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள்..? என்பதற்கான பதில்களையும்… பக்குவப்பட்ட வயதில் ஏற்படும் காதல்தான் உண்மையானது… என்ற உண்மையையும் இந்தப் படத்தின் மூலமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராம்தேவ்.

பள்ளிப் பருவக் காதலால் வரும் ஈர்ப்பைவிட  பக்குவப்பட்ட வயதில் ஏற்படும் காதல்தான் சிறந்தது என்பதை புரிய வைக்கும்விதமாக திரைக்கதையை எழுதி, அதை புரியும்படியாக சொல்லும்விதத்தில் மிக அழகான இயக்கத்தில் இயக்கித் தந்திருக்கிறார் இயக்குநர் ராம்தேவ்.

இயக்குநர் ராம்தேவின் படக் குழுவினர் அனைவருக்கும் நமது பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

Our Score