full screen background image

படைத்தலைவன் – சினிமா விமர்சனம்

படைத்தலைவன் – சினிமா விமர்சனம்

வி ஜே கம்பைன்ஸ் (VJ Combines) நிறுவனம், தாஸ் பிச்சர்ஸ் (Dass Pictures) உடன் இணைந்து வழங்க,  தயாரிப்பாளர் ஜகநாதன் பரமசிவம் தயாரிப்பில், இயக்குநர் யு.அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் படமாக உருவாகியுள்ள திரைப்படம் படை தலைவன்’.

‘மதுரை வீரன்’ படத்திற்குப் பிறகு நாயகன் சண்முகப் பாண்டியன் வித்தியாசமான தோற்றத்தில் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருக்கிறார்.

யாமினி சந்தர், கஸ்தூரி ராஜா, முனீஷ்காந்த், கருடா ராம், அருள்தாஸ், ஸ்ரீஜித் ரவி, A.வெங்கடேஷ்,   S.S.ஸ்டான்லி, லோகு N P K S, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். அவரது இசையில் மூன்று பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

கதை, இயக்கம் – U.அன்பு, தயாரிப்பாளர் ஜகநாதன் பரமசிவம் (VJ Combines In Association with Dass Pictures), திரைக்கதை வசனம் பார்த்திபன் தேசிங்கு, ஒளிப்பதிவு – S.R.சதீஷ்குமார், படத் தொகுப்பு இளையராஜா, ஸ்டண்ட் மேத்யூ மகேஷ், கலை இயக்கம் – P ராஜு, ஸ்டில்ஸ் சக்தி பிரியன், பத்திரிக்கை தொடர்பு சதீஸ், சிவா AIM, பப்ளிசிட்டி டிசைனர் தினேஷ் அசோக்.

கோவை அருகே இருக்கும் சேத்துமடை பகுதியைச் சேர்ந்தவர் ‘வேலு’ என்ற சண்முகப் பாண்டியன். இவருடைய அப்பா கஸ்தூரிராஜா. இவருக்கு ஒரு தங்கையும் இருக்கிறாள். வீட்டிலேயே மண்பாண்டங்களை செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

கூடவே மணியன் என்ற ஆண் யானையையும் 25 வருடங்களாக வளர்த்து வருகிறார்கள். யானையை வளர்ப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. மாதந்தோறும் அதற்கு ஆகும் செலவே, பல ஆயிரங்களை தாண்டும். அதையும் சமாளித்து அந்த யானையை 25 வருடங்களாக இப்போதுவரையிலும் வளர்த்து வந்திருக்கிறார்கள் இந்தக் குடும்பத்தினர்.

கஸ்தூரிராஜா உள்ளூரில் இருக்கும் தன்னுடைய நெருங்கிய உறவினரிடம் பணம் கடன் வாங்கி இருக்கிறார். ஒரு நாள் அந்த நபர் உறவினர் என்றுகூட பார்க்காமல் வட்டியை உடனடியாக கட்டும்படியும், அதைக் கட்டும்வரை தன் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது என்று சொல்லி உத்தரவிடுகிறார்.

இதைப் பார்த்து ஆவேசப்படும் வேலு, அன்றைய நாளில் எப்படியோ பணத்தை புரட்டி வட்டியை கட்டி அப்பாவை மீட்கிறார். ஆனாலும் இந்த மண்பாண்ட தொழிலில் வருமான போதாமையால் கூடுதலாக ஏதாவது செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார் வேலு.

அப்பொழுது வீட்டில் இருக்கும் யானையை வைத்து பணம் சம்பாதிக்க அவருடைய நண்பர்கள் ஐடியா கொடுக்கிறார்கள். மணியன் யானையை திருமண விழாக்களுக்கும், கோயில் திருவிழாக்களுக்கும் அழைத்துச் சென்றால் நமக்கு பணம் நிறைய கிடைக்கும் என்கிறார்கள். வேறு வழியில்லாமல் கஸ்தூரிராஜாவும் இதற்கு ஒத்துக் கொள்கிறார்.

இதற்கிடையில் மணியன் யானை 5 கோடி ரூபாய்வரை விலை போகும் என்பதை அறியும் கந்து வட்டி தாதா அந்த யானையை தான் கொடுத்த கடனுக்கு ஈடாக கேட்கிறார். ஆனால் அதை தர மறுக்கும் வேலு, மொத்த கடன் தொகையையும் சில நாட்களில் திருப்பிக் கொடுத்து விடுவதாக சொல்கிறார்.

அந்த யானையை இவர்களிடமிருந்து எப்படியாவது மீட்க வேண்டும் என்று நினைக்கும் அந்த தாதா, குறுக்கு வழியை கையாளுகிறார். ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள அழைத்துச் சென்று இருக்கும் நிலையில் மணியன் யானைக்கு மதம் பிடிக்க வைக்க ஏற்பாடுகளை செய்கிறார். இதனால் மணியனுக்கு மதம் பிடித்து அந்தத் திருமண விழாவே களேபரமாகிறது.

லோக்கல் போலீஸ் வந்து யானையை ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கிறார்கள். இதன் பின்பு கோர்ட்டில் நீதிபதி “யானைக்கு மதம் பிடிக்கவில்லை” என்ற சான்றிதழை வாங்கி வந்து அதன் பின்பு யானையை அழைத்துச் செல்லும்படி ஆர்டர் போடுகிறார்.

இதற்கு பின்பு வேலுவும், அவருடைய தந்தையும் மிகுந்த பிரயத்தனப்பட்டு, கஷ்டப்பட்டு பணம் புரட்டி அரசு அலுவலகங்களில் லஞ்சமெல்லாம் கொடுத்து சர்டிபிகேட்டை வாங்கி கொண்டு வந்து யானை மறுவாழ்வு மையத்தில் கொடுக்கும் பொழுது அங்கிருந்து மணியன் யானை தப்பியோடி விட்டதாக கதை கட்டுகிறார் வனத்துறை அதிகாரி.

கஸ்தூரிராஜாவுக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை. தான் ஆசையாக வளர்த்த தன்னுடைய மகனைப் போன்ற மணியனை இழந்தது அவருக்கு பெரும் வேதனையை தருகிறது.

எப்படியாவது மணியனைத் தேடி கண்டுபிடித்துவிட வேண்டும் என்று வேலுவும், அவருடைய நண்பர்களும் யானை மணியனைத் தேடிச் செல்கிறார்கள்.

அந்த  யானையை இவர்கள் தேடி கண்டு பிடித்தார்களா…? இல்லையா…? மணியன் யானை இப்போது எங்கே இருக்கிறது..? யார் அதை கடத்திச் சென்றது?.. என்பதெல்லாம் இந்தப் படத்தின் இரண்டாம் பகுதியின் திரைக்கதை.

மனிதர்களை வைத்து படம் எடுப்பதைவிடவும் மிருகங்களை வைத்து படை எடுப்பது சுலபம் என்று சொல்வார்கள். ஆனால் இந்தப் படத்தில் ஒரு யானையை வைத்துக் கொண்டு விலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி படப்பிடிப்பை எப்படித்தான் எடுத்து முடித்தார்களோ… தெரியவில்லை.! நிச்சயமாக அதற்காகவே இந்த இயக்குநருக்கு ஒரு சலாம் போடுவோம்.!

முதலில் இயக்குநருக்கு படத்தின் தலைப்பில் தவறு செய்தமைக்காக நமது கண்டனங்கள். ‘படைத்தலைவன்’ என்றுதான் வைத்திருக்க வேண்டும். ஆனால் படத்தின் போஸ்டர்கள் அனைத்திலுமே ‘படை தலைவன்’ என்று ஒற்றில்லாமல் வைத்து தமிழை கொலை செய்திருக்கிறார் இயக்குநர். இதற்காக நமது வன்மையான கண்டனங்கள்..!

சண்முகப் பாண்டியனுக்கு இது மூன்றாவது படம். குடும்பத்திற்காக உழைக்கும் ஒரு இளைஞனின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவரை இன்னும் மெருகூட்ட ஒரு சிறந்த இயக்குநர் கிடைத்தாக வேண்டும். அந்த இயக்குநரின் கையில் கிடைத்த பின்பு இவர் இன்னும் மெருகேறுவார் என்று நாம் நம்பலாம்.

இருந்தாலும் இந்தப் படத்தில் கிடைத்த இடங்களில் தனக்கென்று வருகின்ற நடிப்பை காட்டியிருக்கிறார் சண்முகப் பாண்டியன். சண்டை காட்சிகளில் அவருடைய அப்பாவைப் போலவே வேகத்தை காட்டியிருக்கிறார். இந்தப் படத்தில் டூயட்டும் இல்லை… காதல் காட்சிகளும் இல்லை என்பதால் ரொமான்ஸ் மட்டும் ச.பாண்டியனிடமிருந்து வெளிவரவில்லை.

இனி அடுத்தடுத்து வரக் கூடிய திரைப்படங்களில் வேறுவிதமான பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரங்களில் அவர் நடித்து அதை பார்த்த பின்பு இவருடைய நடிப்புக்கு நாம் ஏதாவது மார்க் போடலாம்.

படத்தில் குணச்சித்திர கேரக்டரில் அப்பாவாக நடித்திருக்கும் கஸ்தூரிராஜா மிகவும் மென்மையாக, அழுத்தமாக, அழகான, எதார்த்தமான ஒரு நடிப்பை காண்பித்திருக்கிறார், அவருக்கு நமது பாராட்டுக்கள்,

ஹீரோயின் போல் நடித்திருக்கும் யாமினிக்கு பெரிய வேடமில்லை. கந்து வட்டி தாதாவாக நடித்தவரும், வனத்துறை அதிகாரியாக நடித்த மலையாள நடிகரும் ஒரளவு நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் ச.பாண்டியனின் நண்பர்களாக நடித்தவர்கள்… தங்கையாக நடித்தவர்… மற்றவர்களும் அவரவர் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.

கதை ஒடிசாவில் நடக்கும் பொழுது அங்கு இருக்கின்ற முனீஸ்காந்தும், அருள்தாஸூம் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள், வில்லன்களாக நடித்திருக்கும் கருடா ராமுவும் அவருடைய தளபதி போல் நடித்திக்கும் ரிஷி ரித்விக்கும் தங்களுடைய வில்லத்தனத்தைக் காட்டி இருக்கிறார்கள்.

இயக்குதலில் நிறையவே போதாமை இருப்பதால் “ஓரளவுக்கு நடியுங்கள் போதும். திரைக்கதையில் சமாளித்துக் கொள்ளலாம்…” என்று இயக்குநர் விட்டுவிட்டார் போல் இருக்கிறது. இன்னமும் மிகச் சிறப்பாக இயக்கி இருக்கலாம். நடிக்க வைத்திருக்கலாம். எல்லா ‘லாம்’களையும் நம்மால் சொல்ல முடியும். ஆனால் இயக்குநர் மனம் வைத்திருக்க வேண்டுமே?

படத்தின் ஒளிப்பதிவு அபாரம் என்றே சொல்லலாம். அதிலும் சேத்துமடையில் வேலுவின் வீட்டையும், அந்த அழகான இடத்தையும் கொள்ளை அழகாகக் காண்பித்திருக்கிறார்கள். அந்த வீட்டை வடிவமைத்து கட்டி இருக்கும் கலை இயக்குநரையும் சேர்த்து பாராட்டுவோம்.

சண்டைக் காட்சிகளில் சும்மா புகுந்து விளையாடி இருக்கிறார்கள் ஒலிப்பதிவாளரும், சண்டை பயிற்சியாளரும்..! முதல் சண்டை காட்சி மட்டும் ஏனோ சரிவர அமைக்கப்படவில்லை என்றாலும் அடுத்த இரண்டு சண்டை காட்சிகளும் வேகத்தையும், சூட்டையும் கிளப்பியிருக்கின்றன. இதற்காக சண்டை பயிற்சியாளருக்கும் நமது பாராட்டுக்கள்.

இசைஞானி இளையராஜாவின் இசையில் மூன்று முத்தான பாடல்கள் இருக்கின்றன. சிறப்பாகவே இருக்கின்றன. ஒரு முறை கேட்கலாம் போலத்தான் இருக்கின்றன. ஆனால் மூன்றாவது பாடலை பாதியோடு நிறுத்திவிட்டது ஏன் என்றுதான் தெரியவில்லை. கடைசி பக்தி பாடலும், அதனுடைய ஆட்டமும் சூப்பர் என்றே சொல்லலாம்.

பாடல் இசை மட்டும் இல்லாது பின்னணி இசையிலும் சிறப்பாக அடித்து அடி இருக்கிறார் இசைஞானி. ஓடிசாவில் நடைபெறும் காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கின்ற அந்த பின்னணி இசை படத்தை கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறது.

படம் பொதுவாக மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான ஒரு பாசத்தையும், நேசத்தையும் காட்டினாலும் படத்தின் மேக்கிங் இந்தப் படம் 1990-களில் வந்திருக்க வேண்டிய திரைப்படம் என்று உணர்த்துகிறது. 

ஒரு சாதாரண சின்ன கதையில், கிராமத்து கதையில் விலங்குகளை சேர்த்து, அதிலும் யானை போன்ற மிகப் பெரிய விலங்கினை வைத்து திரைக்கதை வைத்து இயக்கி இருக்கும் இயக்குநர்… இந்தக் கதை இப்போதைய 2k கிட்ஸ்களுக்கு பொருந்தி வருமா.. ?அவர்கள் எப்படி இதை பார்ப்பார்கள்? இப்போதைய காலகட்டத்தில் எந்த மாதிரியான திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன? இந்த மாதிரியான படங்கள் வெற்றி பெறுகின்றன?.. என்பதையெல்லாம் மனதில் கொள்ளாமல் சண்முகப் பாண்டியன் என்கின்ற ஒரு நடிகருக்காக மட்டுமே யோசித்து இந்தக் கதையை செய்திருக்கிறார் போலும்! இதுதான் படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய பேக் டிராப்.

ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் விஜயகாந்தை ஒரு காட்சியில் காண்பித்திருக்கிறார்கள். அதுவும் ரசிக்கும்படியாக இல்லை என்பது வருத்தத்திற்குரியது. விஜயகாந்திற்கே உரித்தான வசனங்களை பேச வைத்து அவரது ரசிகர்களுக்கு எழுச்சியூட்டியிருக்கலாம். கோட்டைவிட்டுவிட்டார் இயக்குநர்.

லஞ்சப் பேர்வழியான மிருக வைத்தியர் ஏ.வெங்கடேஷ் கஸ்தூரி ராஜாவின் நடிப்பைப் பார்த்து திடீரென்று மனம் மாறி நல்லவராவதும்.. தனது மகள்களைக் காப்பாற்றியது வேலுதான் என்பதை அறிந்தவுடன் ஓடி வந்து கஸ்தூரிராஜாவின் காலில் விழுந்து  கதறும் கந்துவட்டிக்காரரின் நடிப்பு காட்சியெல்லாம் நம்ப முடியாத திரைக்கதை இயக்குநரே..!

ஒடிசா காட்சிகளிலும் நம்பகத்தன்மை இல்லை. யானையை நரபலி கொடுப்பதாக அதுவும் இந்துக் கடவுளுக்கு…?! என்று திரைக்கதை எழுதியிருக்கிறார் இயக்குநர். அந்தக் காட்டுப் பகுதியில் தமிழ் பேசுபவர்கள் எப்படி வந்தார்கள்..? எப்படி வளர்ந்தார்கள்..? யானை எப்படி இங்கே வந்து சேர்ந்தது..? இதையெல்லாம் திரைக்கதையில் தெளிவாகச் சொல்லியிருக்க வேண்டும். இயக்குநர் சொல்லவில்லையே..!?

எந்தவொரு புதுமுக நடிகர் நடித்தாலும் இப்போதைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு கதையை புதிதாக சிந்தித்து… புதிய வடிவமைப்பில், புதிய களத்தில், புதிய மேக்கிங்கில் வந்தால் மட்டும்தான் அது கவனிக்கப்படும். அப்படி கவனிக்கப்பட்ட பின்புதான் அது ரசிகர்களின் ஆதரவை பெறும். அந்த ஆதரவு நிச்சயம் உறுதியானால்தான் படமும் வெற்றி பெறும்.

இந்த சூட்சுமத்தை புரிந்து கொண்டு சண்முகப் பாண்டியன் தனது அடுத்தடுத்த படங்களில் நல்ல கதைகளையும், சிறந்த இயக்குநர்களையும் தேர்ந்தெடுத்து நடித்தால் அவருக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்பதை சொல்லிக் கொள்கிறோம்.

RATING : 2.5 / 5

Our Score