‘பச்சை விளக்கு’ – சினிமா விமர்சனம்

‘பச்சை விளக்கு’ – சினிமா விமர்சனம்

டிஜி திங் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் சி.மணிமேகலை இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் டாக்டர் மாறன், ‘அம்மணி’ புகழ் மகேஷ் இருவரும் நாயகர்களாக நடிக்க, கதாநாயகிகளாக புதுமுகங்கள் தீஷா, தாரா இருவரும் நடித்துள்ளனர்.

கன்னட பட உலகின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான ரூபிகா முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக்க, மேலும் மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, ‘மெட்ராஸ்’ புகழ் நந்து, நாஞ்சில் விஜயன், க்ரிஷ், மடிப்பாக்கம் சுரேஷ், ராதா, நடன இயக்குநர் சிவசங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு - எஸ்.வி.பாலாஜி, படத் தொகுப்பு - சுரேஷ் அர்ஸ், சண்டை இயக்கம் - ‘டேஞ்சர் மணி’, கலை இயக்கம் - கே.நடராஜ், பாடல்கள் - பழனிபாரதி, விஜய்சாகர், டாக்டர் மாறன், டாக்டர் கிருதயா, நடன இயக்கம் - சிவசங்கர், சந்திரிக்கா புஜிதோஷ்,  எழுத்து, இயக்கம் - டாக்டர் மாறன். 

போக்குவரத்து விதிமுறைகளை அனைவரும் சரியாகப் பின்பற்ற வேண்டும் என்ற கதைக் கருவுடன், பெண்கள் தங்களுக்கு நேரும் அவலங்களை துணிச்சலுடன் எதிர்நோக்கி போராடி ஜெயிக்க வேண்டும் என்பதையும் சொல்ல வந்திருக்கிறது இத்திரைப்படம்.

நாயகன் மாறன் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் ஒரு பேராசிரியர். கூடவே வாலண்டியராக போக்குவரத்து காவலராகவும் பணியாற்றி வருகிறார். அதே கல்லூரியில் படித்து வரும் மாணவியான தீஷா ஒரு முறை லைசென்ஸ் இல்லாமலும், வண்டிக்குரிய ஆவணங்கள் இல்லாமலும், ஹெல்மெட் அணியாமலும் டூவீலரை ஓட்டி வந்ததால் அவருக்கு வித்தியாசமாக போக்குவரத்து விதிமுறைகளை எழுதி வரும்படி பணிக்கிறார் மாறன்.

மாறன் காவல்துறை அதிகாரி என்று நினைத்து பயந்து போய் எழுதும் தீஷா.. பின்பு உண்மை தெரிந்து அவர் மீது கோபப்படுகிறார். ஆனால் மாறனுக்கு தீஷா மீது காதல் பிறக்கிறது. இதைத் தொடர்ந்து சினிமா பாணியில் மாறன் மீதும் தீஷாவுக்குக் காதல் பறக்க ஒரு டூயட்டுக்கு வழி பிறக்கிறது.

இந்த நேரத்தில் வெளியூரில் வசிக்கும் தீஷாவின் தங்கை திடீரென்று தற்கொலைக்கு முயல்கிறார். ஊருக்கு ஓடிய தீஷா என்னவென்று விசாரித்தபோது நட்பாக தன்னிடம் பழகிய ஒரு கயவன் தன்னை ஆபாசமாக படம் பிடித்து வைத்துக் கொண்டு… தன்னைத் திருமணம் செய்து கொள்ளவிட்டால் அந்த வீடியோவையும், புகைப்படங்களையும் வெளியிடப் போவதாக மிரட்டுவதாகச் சொல்லி அழுகிறாள் தீஷாவின் தங்கை.

இந்த ரவுடிகளின் அட்டகாசம் தாங்க முடியாமல் ஊரைவிட்டு ஓடுகிறது தீஷாவின் குடும்பம். ஊருக்குப் போன தீஷாவை தொடர்பு கொள்ள முடியாமல் தவிக்கிறார் ஹீரோ மாறன். அவரே தீஷாவை தேடி அலைகிறார்.

தீஷாவை மாறன் கண்டுபிடித்தாரா..? இல்லையா..? தீஷாவின் தங்கையின் வாழ்க்கை என்னவானது என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

புதுமுகம் மாறன் சினிமாவிற்கு முற்றிலும் அன்னியமானவர். அவருடைய முகமும், உடல் அமைப்பும்கூட ரசிப்புத் தன்மைக்கு முற்றிலும் எதிரானதுதான். ஆனாலும் அவரே தயாரிப்பாளர் என்பதால் நாயகனாக நடித்துவிட்டார். அவர் காட்டுவதுதான் நடிப்பு.. ஆடுவதுதான் நடனம் என்றான பின்பு நாம் வேறொன்றும் சொல்வதற்கில்லை..

நாயகி தீஷா புதுமுகம். இயக்குநரும் புதுமுகம் என்பதால் கதைக்குத் தேவைப்பட்ட அளவுக்கு நடித்திருக்கிறார்.. தீஷாவின் தங்கையாக நடித்த தாராவுக்கு திரைக்கதையில் நிறைய வாய்ப்புகள் இருந்ததால் நன்கு நடித்துள்ளார். இவர் மட்டுமில்லாமல் இவரது குடும்பத்தினரும் திரையில் தோன்றிய பிறகுதான் படமே சூடு பிடிக்கிறது.

பெண்களைக் காதலிப்பதுபோல் நடிக்க வைத்து பின்பு கல்யாணத்திற்கு ரெடி என்று மிரட்டி பெண் வீட்டாரிடம் பணம் பறிக்கும் வில்லத்தனத்திற்கு ‘போஸ்டர்’ நந்தகுமார் பொருத்தமாகவே இருக்கிறார். அந்த மிரட்டல் வில்லனுக்கு முன்பு மாறனின் ஹீரோயிஸம் எடுபடவேயில்லை.

தொலைக்காட்சிகளில் சின்னப் பிள்ளைகளிடம் ‘பல்பு’ வாங்கிய பழக்கப்பட்டுப் போன இமான் அண்ணாச்சி, இந்தப் படத்தில் அதே பாணியில் போக்குவரத்து விதிமுறைகளை கிளிப் பிள்ளைக்குச் சொல்வதைப் போல அனைவருக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். பாராட்டுக்கள்.. வாழ்த்துகள் அண்ணாச்சி.

சின்ன பட்ஜெட் படம் என்றாலும் குறையில்லாமல் ஒளிப்பதிவினை செய்திருக்கிறார் பாலாஜி. ‘வேதம் புதிது’ தேவேந்திரனின் இசையில் 5 பாடல்களுமே கேட்கும் ரகம். ‘தமிழன்தான் தமிழ்நாட்டை ஆளணும்’ என்று கொள்கை விளக்கப் பாடலும் படத்தில் உண்டு. ‘மனதில் மெளனங்கள்’, ‘இளமையின் துடிப்பு’ என்று இரண்டு காதல் பாடல்கள்.. நல்லவேளையாக டூயட்டுகளுக்கு நடனம் அமைக்காமல் அப்படி, இப்படி என்று நடக்க வைத்தே ஒப்பேத்தியிருக்கிறார்கள். தப்பித்தோம். ‘வா மச்சி வாடா மச்சி’.. ‘அண்ணாமலையானே’ பாடல் காட்சிகளை பார்க்கவும் செய்யலாம். ஓகே சொல்லும்விதமாகப் படமாக்கியிருக்கிறார்கள்.

முதற்பாதியில் போக்குவரத்து விதிமுறைகளைப் பற்றி வகுப்பெடுத்து இதுவரையிலும் தெரியாத பல விஷயங்களை அறிவுப்பூர்வமாக நமக்குப் புகுத்தியிருக்கிறார் இயக்குநர். இதற்காக அவருக்குப் பாராட்டுக்கள்.

இரண்டாம் பாதியில் அதிகமாக வெளியில் வராத புதுமையான காதல் கொள்ளையைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். இதன் திரைக்கதை நன்றாக இருந்தாலும் மிக அதிகமான லாஜிக் எல்லை மீறல்களும், சொதப்பலான இயக்கமும் சேர்ந்து படத்தையே சப்பென்று ஆகிவிட்டன.

தயாரிப்பாளர் மாறன் இந்தப் படத்தின் கதையின் நாயகனாக தானே நடிக்காமல் வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்து… திரைக்கதையிலும் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து.. வேறொரு சிறந்த இயக்குநரை இயக்க வைத்து.. தான் வெறும் தயாரிப்பாளராகவே மட்டுமே இருந்திருந்தால்… இந்தப் படம் நிச்சயமாக ஒரு பெரிய பாராட்டைப் பெற்றிருக்கும்..!