full screen background image

கோத்தகிரி குட்டஞ்சாமி கோவிலின் மேல் ‘ஹெலி கேம்’ பறக்காத அதிசயம்..!

கோத்தகிரி குட்டஞ்சாமி கோவிலின் மேல் ‘ஹெலி கேம்’ பறக்காத அதிசயம்..!

தனுஷ் நடித்த ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘யாரடி நீ மோகினி’, ‘திருவிளையாடல் ஆரம்பம்’,  ‘3’ ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே.புரொடெக்சன்ஸ் பட நிறுவனம் தற்போது தயாரித்து வரும் திரைப்படம் ‘பாண்டி முனி.’

இந்தப் படத்தில் நாயகனாக ஆசிப் என்ற மாடல் அறிமுகமாகிறார். நாயகிகளாக மேகாலி, ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா நால்வரும் அறிமுகமாகிறார்கள். பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கின்றார். இன்னொரு முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே நடிக்கிறார்.  

ஒளிப்பதிவு – மது அம்பட், இசை – ஸ்ரீகாந்த் தேவா, கலை   இயக்கம் –   ஸ்ரீமான், பாலாஜி, நடன இயக்கம் – சிவசங்கர், சண்டை பயிற்சி   -சூப்பர் சுப்பராயன்,  படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், எழுத்து, இயக்கம் – கஸ்தூரி ராஜா.

படம் பற்றி இயக்குநர் கஸ்தூரி ராஜா பேசுகையில், “பயங்கரமான ஹாரர் படம் இது. சுமார் 70 வருடங்களுக்கு முன்னால் காட்டுப் பகுதி அரண்மனையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கோத்தகிரி, ஊட்டி ஆகிய பகுதிகளில்  25 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. படப்பிடிப்பு கோத்தகிரியில் நடைபெற்றபோது ஆச்சர்யமான ஒரு சம்பவம் நடந்தது, 

‘பனகுடி சோலை’ என்கிற இடத்தில் அந்தப் பகுதி மக்கள் தங்களது இஷ்ட கடவுளாக கும்பிடும் ‘குட்டஞ்சாமி’ என்கிற கோயில் உள்ளது. இந்த கோயில் 700 வருட பாரம்பரியமிக்கது. அந்தக் கோயிலுக்கு பஞ்ச பாண்டவர்கள் வந்து சென்றதாகவும் சொல்கிறார்கள். அது குகைக் கோயில் மாதிரியான இடம். அங்கே நாங்கள் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தோம்.

அப்போது அங்கே வந்த ஊர் மக்கள் ‘இந்த கோயிலுக்குள் பெண்கள் செல்லக் கூடாது’; ‘செருப்பு உபயோகிக்கக் கூடாது’ என்றார்கள். நாங்கள் வருத்தம் தெரிவித்து விட்டு வந்தோம். மறுநாள் அந்த இடத்திற்கு அருகில்  படப்பிடிப்பை நடத்த சென்றோம்.

அங்கே போன கொஞ்ச நேரத்திலேயே நடித்துக் கொண்டிருந்த மேகாலிக்கு சாமி வந்து ஆட ஆரம்பித்து விட்டார். நாங்கள் வெலவெலத்துப் போய் விட்டோம். ஊர்க்காரர்கள் ஒன்று கூடி பரிகார பூஜை செய்த பிறகே சாமியாட்டம் நின்றது. இந்த அனுபவம் எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

இதைவிட, இன்னொரு அதிசயமும் நடந்தது. அந்தக் குட்டஞ்சாமி கோவிலின் மேல் ஹெலிகேம் பறக்கவில்லை என்பது அதிசயமான ஒன்று. கோவிலை சுற்றி உள்ள இடங்களில் பறந்த ஹெலிகேம் கோவில் மேல்புறம் மட்டும் ஏன் பறக்கவில்லை என்பதுதான் ஆச்சர்யமானது.

அதோடு அவரவர் தங்களுடைய வாழ்நாளில் குறிஞ்சிப் பூவை பார்ப்பதே அபூர்வம். ஆனால் எங்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைத்தது. நாங்கள் படப்பிடிப்பை நடத்திய இடத்தை சுற்றிலும் குறிஞ்சிப் பூ பூத்திருந்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது. அதையும் எங்கள் காமிராவில் பதிவு செய்து கொண்டோம்.

ஆசிப், மேகாலி, ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா ஆகியோர் சம்மந்தப்பட்ட மூன்று பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டப் படப்பிடிப்பில் ஜாக்கி ஷெராப் அகோரி கெட்டப்பில் நடிக்கவுள்ளார்…” என்றார் கஸ்தூரிராஜா.

Our Score