கவிதைத்தனமான காதல், கலகலப்பான காமெடியோடு உருவாகியுள்ள தீரேப்படம் ‘பாக்கணும் போல இருக்கு.’
‘வீரசேகரன்’, ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’. ‘தொட்டால் தொடரும்’ ஆகிய படங்களை தயாரித்த எப்.சி.எஸ். கிரியேஷன்ஸின் தயாரிப்பாளர் துவார் ஜி.சந்திரசேகர், அடுத்ததாக தயாரித்துள்ள படம் ‘பாக்கணும் போல இருக்கு’.
இப்படத்தில் ஹீரோவாக பரதன் நடிக்க, ஹீரோயினாக ஹன்சிபா நடிக்கிறார். இவர் ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘பரஞ்சோதி’, மலையாளப் படமான ‘திரிஷியம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர்களுடன் சூரி, கஞ்சா கருப்பு, பிளாக் பாண்டி, முத்துக்காளை, சிங்கப்பூர் துரைராஜ், மெய் ராஜன் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார் எஸ்.பி.ராஜ்குமார். இவர் ‘பொன்மனம்’, ‘என் புருஷன் குழந்தை மாதிரி’, விஜய் நடித்த ‘சுறா’, சமீபத்தில் வெளியான ‘பட்டைய கிளப்பணும் பாண்டியா’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
மேலும், கவுண்டமணி, வடிவேலு நடித்த பல படங்களுக்கு காமெடி டிராக் எழுதியுள்ள இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாக்கணும் போல இருக்கு’ படம் கவிதைத்தனமான காதலும், கலகலப்பான காமெடிப் படமாகவும் உருவாகியுள்ளது.
சிறு வயதில் நாயகி ஒரு செடியை வளர்க்க, திடீரென்று தனது தந்தைக்கு பணி மாற்றம் காரணமாக வேறு ஊருக்கு குடும்பத்தோடு செல்கிறார்கள். அப்போது தான் வளர்த்த செடியை யார் பராமரிப்பார்களோ என்று எண்ண, அந்த நேரத்தில் சிறு வயது ஹீரோ, செடியை தான் பராமரிப்பதாக கூறுகிறார்.
நாயகி வளர்ந்து மீண்டும் அதே ஊருக்கு வரும்போது, தனது செடி இருந்த இடத்திற்கு செல்கிறார். அங்கே செடி பெரிய மரமாக வளர்ந்திருக்க, அதன் கீழே நாயகன் பரதன் நின்று கொண்டிருக்கிறார். இதைப் பார்க்கும் நாயகிக்கு நாயகன் மீது காதல் ஏற்படுகிறது. இப்படி கவிதைத்தனமான காட்சியோடு காதல் ஏற்பட்டாலும், படம் முழுவதும் காமெடியாகவே நகரும் விதத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்படத்தை தயாரித்துள்ள துவார் ஜி.சந்திரசேகர் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். ‘வீரசேகரன்’ படத்தில் அமலா பாலை நாயகியாக அறிமுகப்படுத்திய இவர், மூன்று ஹீரோக்கள், நான்கு இயக்குநர்கள் என ஏராளமானோரை சினிமாவில் அறிமுகப்படுத்திருக்க, இவரை இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் நடிகராக அறிமுகப்படுத்தியுள்ளார்.
காமெடித்தனமான போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் துவார் ஜி.சந்திரசேகர், சூரி மற்றும் கஞ்சா கருப்பு காமினேஷனில் காமெடியில் அமர்க்களப்படுத்தியுள்ளாராம்.
“தயாரிப்பாளரை எப்படி காமெடி வேடத்திற்கு தேர்வு செய்தீர்கள்..?” என்று இயக்குநரிடம் கேட்டதற்கு, “அவருக்கு இயல்பாகவே காமெடி சென்ஸ் அதிகம். சாதாரணமாக பேசும்போதே நகைச்சுவையாக பேசுவார், அதனால்தான் அவரை இந்த வேடத்திற்கு தேர்வு செய்தேன். எனது எண்ணத்திற்கு ஏற்றவாறு படம் முழுவதும் வரும் அவருடைய காமெடி காட்சிகள் ரசிகர்களை கவரும் விதத்தில் உள்ளது.” என்றார்.
“நடிப்பு அனுபவம் எப்படி இருந்தது.. அதுவும் காமெடி வேடம் ரொம்ப கஷ்டமாச்சே..?” என்று தயாரிப்பாளர் துவார் ஜி.சந்திரசேகரிடம் கேட்டதற்கு, “நான் இயல்பாகவே நகைச்சுவையான மனிதன்தான். எனக்கு நகைச்சுவையில் அதிக நாட்டமுண்டு, இதை கவனித்துதான், என்னை இந்த வேடத்தில் இயக்குநர் நடிக்க சொன்னார். காமெடி வேடம் என்பதால் நானும் நடிக்க ஒப்புக்கொண்டேன். தற்போது எனது காட்சிகள் ரொம்ப பிரமாதமாக வந்திருப்பதாக ஒட்டு மொத்த படக்குழுவினரும் தெரிவித்துள்ளார்கள்.
மேலும், இப்படத்தை பார்த்த பல இயக்குநர்கள் என்னை தொடர்ந்து நடிக்க அழைப்பு விடுத்துள்ளார்கள். தற்போது ‘பாக்கணும் போல இருக்கு’ படத்தின் வெளியீட்டில் பிஸியாக இருக்கிறேன். படத்தின் ரிலீஸுக்குப் பிறகு, என்னுடைய தயாரிப்பில் உருவாகும் படங்கள் மட்டுமின்றி, வெளி படங்களிலும் நடிக்க முடிவு செய்துள்ளேன்…” என்றார்.
இப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள், இந்த பாடல்கள் அனைத்தையும் இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமாரே எழுதியுள்ளார். அருள்தேவ் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே சூப்பர் ஹிட்டாகிவிட்டது. சுதா இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்கிறார். எஸ்.எஸ்.மூர்த்தி கலைத் துறையை கவனிக்கிறார்.
அனைத்து பணிகளும் முடிவடைந்து விரைவில் வெளியாக உள்ள ‘பாக்கணும் போல இருக்கு’ படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் துவார் ஜி.சந்திரசேகர், அடுத்ததாக முழுக்க முழுக்க குழந்தைகளை வைத்து நகைச்சுவைப் படம் ஒன்றை தயாரிக்க உள்ளார். இப்படத்தை ‘அசத்தப் போவது யாரு’ நிகழ்ச்சியின் இயக்குநர் ராஜ்குமார் இயக்குகிறார்.