இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஜல்லிக்கட்டு போட்டி தற்போது தமிழ் சினிமாவில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்க மக்கள் ஜல்லிகட்டு போட்டியை நடத்தியே தீர வேண்டும் என்ற நிலையில் இருக்க, விலங்குகள் பாதுகாப்பு அமைப்பினரும், வட இந்தியர்களும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போர் கொடி உயர்த்தியுள்ளனர். இந்த நிலையில், தமிழ்ப் படம் ஒன்றுக்காக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எப்.சி.எஸ். கிரியேஷன்ஸ் துவார் ஜி.சந்திரசேகர் தயாரித்துள்ள நான்காவது படமான ’பாக்கணும் போல இருக்கு’. இபடத்தில்தான் ஜல்லிக்கட்டு காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டம் அரளிப்பாறை என்ற கிராமத்தில் முறையாக அனுமதி பெற்று, படத்திற்காக நிஜ ஜல்லிக்கட்டைப் பாதுகாப்பாக நடத்தியுள்ளார் தயாரிப்பாளர் துவார் ஜி.சந்திரசேகர். அது மட்டுமின்றி இதில் பங்கேற்ற ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும், முரட்டுக் காளைகளுக்கும் பரிசுகளும் கொடுத்து கௌரவித்துள்ளார்.
இந்தப் படத்தில் கதாநாயகனாக பரதன் நடித்துள்ளார். கதாநாயகியாக அன்சிபா நடித்துள்ளார். சூரி, கஞ்சா கறுப்பு, ப்ளாக் பாண்டி, சிங்கப்பூர் துரைராஜ், முத்துக்காளை, விஜய் ஆனந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர். பூஜா என்ற மும்பை மாடல் செம குத்தாட்டம் போட்டுள்ளார். தயாரிப்பாளர் துவார் ஜி.சந்திரசேகர் போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி எஸ்.பி.ராஜகுமார் இயக்கியுள்ளார். பேய்கள் படம் வந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் எல்லோர் மனதிலும் எப்போதும் இருக்கும் காதல் படத்தை ஜனரஞ்சகமாகவும், கலகலப்பான காமெடியாகவும் இயக்கியுள்ளார்.
கவுண்டமணி, செந்தில், வடிவேலு ஆகியோர் நடித்த படங்களில், மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற நகைச்சுவைக் காட்சிகள் இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார், எழுதியதாகத்தான் இருக்கும். தற்போது, இவர் நடிகர் சூரிக்கு நகைச்சுவை வசனங்கள் எழுதியுள்ளதால், இப்படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க நகைச்சுவைக் கலந்த காதல் படமாக உருவாகியுள்ள இப்படத்தில், 6 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அருள்தேவ் இசையமைத்துள்ளார். அனைத்து பாடல்களும் மிகப் பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ள நிலையில், “ரெட்டசடை கூப்பிடுது முத்தம்மா” என்ற பாடல், மிகப் பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும், திரும்ப திரும்ப ஒலிப்பது இப்பாடல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
“பொழுது போக்கு நிறைந்த காதல் படமாக உருவாகியுள்ள, இப்படம் மக்களை நிச்சயம் கவரும்” என்று இப்படத்தின் தயாரிப்பாளர் துவார் ஜி.சந்திரசேகர், பெரும் நம்பிக்கையுடன் இருக்கிறார். காரணம், படத்தின் கதையும் சூரியின் காமெடிக் காட்சிகளும் ரொம்ப சிறப்பாக வந்திருக்கிறதாம்.
பாடல்கள், காமெடி என முழுக்க முழுக்க ஒரு நூறு சதவீத பொழுது போக்கு படமாக உருவாகியிருக்கும் இந்த ‘பாக்கணும் போல இருக்கு’ திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாகிறது