கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுகம் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘அதர்ஸ்’.
இப்படத்தினில் முக்கிய கதபாத்திரங்களில் ‘முண்டாசுபட்டி’ ராமதாஸ், ‘நண்டு’ ஜகன், ஹரிஷ் பெரோடி, வினோத் சாகர், இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மெடிகல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குநர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார்.
அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தில், ஜிப்ரான் இசையமைப்பையும், ராமர் படத் தொகுப்பையும், பிரதீப் சண்டை காட்சிகளையும், சந்தோஷ் நடன அமைப்பையும் கையாண்டிருக்கின்றனர்.
மெடிக்கல் கிரைம் சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் இதற்கு முன்பாகவும் நிறையவே வந்திருக்கின்றன. ஆனால், அவற்றிலிருந்து மிக மிக வித்தியாசமான ஒரு கதை கருவோடு வந்திருக்கும் இத்திரைப்படம் தான் சொல்ல வந்ததை கச்சிதமாக சொல்லி இருக்கிறது.
ஒரு நள்ளிரவில் ஒரு சாலை விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தில் ஒரு காரில் பயணம் செய்த பார்வையற்ற மூன்று பெண்களும், ஒரு ஆணும் தீயில் கருகி பலியாகுகின்றனர்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான ஹீரோ ஆதித்யா மாதவன் இந்த வழக்கை விசாரிக்க வருகிறார். அந்த வேன் மற்றும் அந்த வேனில் இருந்தவர்களின் பின்னணியை பற்றி விசாரிக்க, விசாரிக்க புதிய புதிய தகவல்களாக அவருக்கு கிடைத்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், இந்த விபத்து விபத்து கொலையா அல்லது சதியா அல்லது விபத்தா என்பதை தெரியாத சூழல் இருக்கிறது.
இந்த நேரத்தில் ஹீரோயின் கௌரி கிஷன் ஒரு பெரிய மருத்துவமனையில் மருத்துவராக இருக்கிறார். அந்த மருத்துவமனையில் செயற்கை முறையில் கருவுறுதல் என்ற சிகிச்சை முறை பலருக்கும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த சிகிச்சை முறையில் ஒரு மிகப் பெரிய முறைகேடு நடப்பது கௌரிக்கு தெரிய வருகிறது.
உடனே கௌரி மருத்துவமனை நிர்வாகத்திடம் இது குறித்து கேள்வி கேட்கிறார். இந்தக் கேள்வி கௌரி கிஷனின் உயிருக்கே ஆபத்தாக அமைய… அவர் தன்னுடைய காதலனான ஹீரோ ஆதித்ய மாதவனிடம் சொல்கிறார். இப்போது இந்த இரண்டு சம்பவங்களும் ஓர் இடத்தில் இணைந்து இவ்வளவு பெரிய பிரச்சனையா என்று நம்மையும் கேள்வி கேட்க வைத்திருக்கிறது.
காரில் வந்தவர்கள் யார் என்று விசாரிக்க துவங்கும்போது அது ஒரு ஆதரவற்றோர் இல்லத்தை கைகாட்டுகிறது. ஆதரவற்றோர் இல்லத்திலும் இப்படி எல்லாம் முறைகேடுகள் நடக்குமா என்பதை நம்முடைய கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர்.
புதுமுகமான ஹீரோ ஆதித்யா மாதவன் அவருடைய உடலுக்கு பொருத்தமான போலீஸ் வேடத்தை கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். சில காட்சிகளில் அவருடைய வயதுக்கேற்ற கோபத்தை காண்பித்து இருக்கிறார். கிளைமாக்ஸ்சில் வில்லனை கண்டுபிடிப்பதற்காக அவர் ஓடும் ஓட்டம் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. ஆனாலும் வேறு சில எமோஷன்ஸ் காட்சிகளில் அதை சரியாக காட்டுவதற்கு கொஞ்சம் திணறி இருக்கிறார்.
மருத்துவ சேவை என்பது உயிரை காப்பாற்றுவது சேவை இல்லாமல் பணம் சம்பாதிப்பது அல்ல என்கின்ற ஒரு நல்ல உயரிய கொள்கையில் இருக்கும் கௌரி கிஷன் அந்த முறைகேடுகளை எப்படியாவது வெளிப்படுத்தியே தீர்வது என்று கங்கணம் கட்டிக் கொண்டு அவரும் இந்த திரைக்கதையில் பங்கு கொள்வது சிறப்பு.
சொந்த வாழ்க்கையிலும் எந்த ஒரு அநியாயத்தையும் தாங்கிக் கொள்ளாமல் பட், பட்டென்று என்று எதிர் கேள்வி கேட்கும் அவருடைய இயல்பான குணமே, இந்தக் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது.
அஞ்சு குரியன் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். திரையில் பெண்களும் கடைசிவரையில் இருந்தாக வேண்டும் என்கின்ற திரை கோட்பாட்டின்படி அஞ்சு சூரியனுக்கு இந்த வேடத்தை கொடுத்திருக்கிறார்கள்போலும்.
அவ்வளவு பெரிய தொந்தியை வைத்துக் கொண்டு போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் முனீஸ்காந்த் மிக இயல்பான ஒரு நடிப்பையே காண்பித்து இருக்கிறார். ஆனாலும், இவரை வைத்து செய்திருக்கும் காமெடிகள் எதுவும் செட் ஆகவில்லை என்பது உண்மை.
இதுவரையிலும் பல திரைப்படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து வந்த நண்டு ஜெகன் இந்த படத்தில் பதவி உயர்வு பெற்று வில்லனாகி இருக்கிறார். அவருடைய கெட்டப்பும், அவருடைய நடிப்பும் நம்மை ரசிக்க வைத்திருக்கிறது.
முழு வில்லன் இவர்தானோ என்று நினைக்கும் இடத்தில் இன்னொரு வில்லனாக வந்து நம்மை அசர வைக்கிறார் நடிகர் மூர். துவக்கத்தில் சாதாரண ஒரு அப்பாவி மெக்கானிக்காக தலையை காட்டும் மூர் பின்பு பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரனாக போலீசிடம் வந்து நீதி வேண்டும் என்று கேட்டு அதற்கு பின்னும் கிளைமாக்ஸில் தன்னுடைய வில்லத்தனத்தை காட்டும்போது அசர வைத்திருக்கிறார் மூர். அவர் வருகின்ற ஒவ்வொரு சீனிலும் அவர் பேசுகின்ற வசனங்களும், காட்டிய உடல் மொழியும் கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறது.
அதே சமயம் சமூகத்தில் எப்போதும் ஒடுக்கப்பட்ட பிரிவினராகவே இருந்து வரும் திருநங்கைகளுக்காக அவர் பேசுகின்ற வசனங்களும் கேட்கும் கேள்விகளும் படம் பார்ப்பவர்களின் மனதை தொடுகிறது.
சமீபத்திய பல திரைப்படங்களில் இந்த மாதிரியான ஒரு கேரக்டர் யாருக்கும் கிடைக்கவில்லை. மூருக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. அதை வைத்து கிளைமாக்ஸில் அரை மணி நேரம் அவர் ஆடியிருக்கும் ருத்ர தாண்டவம் நிச்சயம் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய பலம் என்றே சொல்லலாம்.
ஒளிப்பதிவு செய்திருக்கும் அரவிந்த் சிங் தன்னுடைய முழுத் திறமையையும் இந்த படத்தில் காட்டி இருக்கிறார். படத்தின் பக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் அதிலும் இரவு நேர காட்சிகளில் அட்டகாசமான ஒளிப்பதிவினை கொடுத்திருக்கிறார். அதோடு கிளைமாக்ஸ் சண்டை காட்சியை படமாக்கிய விதத்திலேயே அரவிந்த் சிங்கின் திறமை நன்கு தெரிகிறது.
இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசையில் பாடலைவிடவும் பின்னணி இசையில் அடித்து அதிகரிக்கிறார். அந்தப் பின்னணி இசை பல காட்சிகளை கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறது.
‘அதர்ஸ்’ என்ற இந்தப் படத்தின் தலைப்பு யாரைக் குறிக்கிறது என்பதை படத்தில் சஸ்பென்ஸாக வைத்திருந்து கடைசியாக சொல்கிறார்கள். நமக்கும் அது ஏற்புடையதாகவே இருக்கிறது. சமூகத்தில் ஒரு அங்கமாக இருக்கும் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களும் சக மனிதர்கள் என்று பார்த்து அவர்களை அரவணைக்க வேண்டும். இந்த விஷயத்தை ஒரு மெடிக்கல் க்ரைம் திரில்லர் கதையாக சேர்த்து சொல்லி இருக்கிறார்கள்.
அதே சமயம் உணர்ச்சிவசப்படும்போது அனைவருமே கையில் கத்தியையோ, துப்பாக்கியையோ எடுக்கத் தயங்குவதில்லை. அதுபோன்று பழிவாங்கல் உணர்வுடன் நடக்கும் கொலைகளும் இதை இணைக்கும் மெடிக்கல் கிரைமும் சேர்ந்து இந்தப் படத்தை ஒரு நல்லதொரு சஸ்பென்ஸ், திரில்லர் படமாக கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.
ஒரு விபத்து நடக்கிறது. தொடர்ந்து விசாரணையும் நடக்கிறது. இன்னொரு பக்கம் மெடிக்கல் கிரைமும் நடந்து, அதுவும் இந்தக் கதையுடன் இணைகிறது. இப்படியே கதை மெதுவாக முதல் பாதையில் நகரும் பொழுது லேசான ஒரு சலிப்பும் நமக்கு ஏற்படுகிறது.
ஆனால், படத்தின் வில்லனாக வேதா உள்ளே நுழைந்த உடனே படம் தீயாய் பறக்கிறது என்று சொல்லலாம். அதற்கு ஏற்ப திரைக்கதையும் பரபர டைப்பிலேயே வைத்திருப்பதால் அப்போதிலிருந்து படம் படு சூடாக செல்கிறது. வில்லனின் கேரக்டர் ஸ்கெட்ச், அவர்களுக்கான வாழ்க்கை பின்னணி, அவருடைய கோபம்தான் இந்த படத்தின் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட் என்று சொல்லலாம்.
எப்போதும் வில்லனை கிளைமாக்ஸ் கட்சியில் ஒன்று கொலை செய்வார்கள் அல்லது போலீசில் பிடிபட்டு சிறைக்கு செல்வார்கள். இப்படி ஒரு பரவலான பார்வை கொண்ட சினிமாவின் டெம்ப்ளெட் திரைக்கதையில் இந்தப் படத்தில் கொஞ்சம் மாறுதலை செய்து ஒரு சமூக சிந்தனையோடு இந்தப் படத்தை முடித்திருப்பது இயக்குநரின் திறமையை காட்டுகிறது.
ஆனாலும் மாற்றுத்திறனாளிகளை எந்தவிதத்திலும் நாம் ஒதுக்கவும் கூடாது. அவர்கள் மீது சீறவும் கூடாது. அவர்களை அரவணைத்துதான் செல்ல வேண்டும். வில்லனின் அந்தக் கொலை வெறியை நிச்சயமாக நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவருக்கு நேர்ந்த அந்த பிரச்சனையை மாற்றுத் திறனாளிகளை ஒரு நிமிடம் நினைத்து பார்த்து “இதையும் தாங்கிக் கொள்வோம்.. இதையும் தாண்டி செல்வோம்” என்கின்ற ரீதியில் அவர் சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
வழக்கமான திரைப்படங்களின் மத்தியில் இந்தப் படத்திலும் ஹீரோ, ஹீரோயின் காதலையும் ஒரு டூயட்டையும் வைத்து சமாளித்து இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் முதல் பாதையில் நடக்கும் விசாரணை காட்சிகள் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான பதில்களும், கேள்விகளுமாக வந்து நம்மை கொஞ்சம் போர் அடிக்க வைத்திருக்கிறது. ஆனாலும் வில்லன் என்கின்ற ஒரு மிகப் பெரிய கேரக்டர்தான் இந்தப் படத்தை ரசிகர்களுக்கு கொண்டு போய் சேர்த்து இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
இதுவரையிலும் வெளியான மெடிக்கல் கிரைம் திரைப்படங்களில் ஊழல்கள், பணத்தை வைத்து நடக்கும் மருத்துவ முறைகேடுகள்… பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் மருத்துவ வசதிகள் போன்றவற்றை மையமாக வைத்து வந்திருக்கின்றன.
ஆனால், இந்த ‘அதர்ஸ்’ என்ற திரைப்படம் சமூக அக்கறை உள்ள ஒரு திரைப்படமாக வந்திருக்கிறது. அந்த வகையில் இந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் மற்றும் நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.
RATING : 3.5 / 5









