‘புதுமை விரும்பி’யான இயக்குநர் ஆர்.பார்த்திபனின் இயக்கத்தில் 2019-ல் வெளியான ‘ஒத்த செருப்பு சைஸ்-7′ திரைப்படம் பல விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றுக் குவித்தது. தேசிய விருதையும் பெற்றது.
2020-ல் டோரோண்டோ உலக தமிழ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிப்பு ஆகிய மூன்று விருதுகளை வென்றது. ஆஸ்காருக்கும் சென்று வந்தது.
இப்போது இந்த ‘ஒத்த செருப்பு’ படத்தை இந்தி, ஆங்கில மொழிகளில் ரீமேக் செய்ய பார்த்திபன் முடிவு செய்துள்ளார். தற்போது இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இது குறித்து பார்த்திபன் கூறும்போது, “இந்த ‘ஒத்த செருப்பு’ படத்தை இந்தி ஆங்கிலத்தில் எடுக்க முடிவு செய்துள்ளேன். இந்தி பதிப்பில் நடிக்க அபிஷேக்பச்சனிடம் பேசப்பட்டு வருகிறது. ஆங்கிலத்தில் ‘ட்ரூ லை’ படத்தை எடுத்த பிரபல பட நிறுவனத்துடன் பேசி வருகிறோம்.
படப்பிடிப்புக்கு சிறிய குழுவினர் போதும் என்பதால் ஆகஸ்டில் படப்பிடிப்பை தொடங்கும் முடிவில் இருக்கிறோம். இந்தி, ஆங்கில பட வேலைகளுக்காக அந்தந்த மொழி தெரிந்த உதவியாளரை தேர்வு செய்து வருகிறேன்” என்றார்.
மேலும் இது குறித்து பார்த்திபன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ”என் தமிழ் அழகு என்னை கூடுதல் அழகாக்குவதும் தமிழ். தட்டுத் தடுமாறி ஆங்கிலமும், தப்பித் தவறி மற்ற மொழிகளும் பேச முயன்றதுண்டு. இந்தி முஜே நஹி மாலும் ஹே! ஆனால், ‘ஒத்த செருப்பு’ இந்தியும், விரைவில் ஆங்கிலமும் பேச இருப்பதால், இரு மொழிகளிலும் அறிவும் ஆற்றலும் நிறைந்த ஒரு பர்சனல் அசிஸ்டெண்ட்(ஆண், பெண் பாகுபாடில்லை) தேவைப்படுகிறார். ஈடுபாட்டுடன் பணிப்புரிய விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்…” என அறிவித்திருந்தார்.
பார்த்திபனின் இந்த அறிவிப்பை அடுத்து பலரும் அவரை தொடர்பு கொண்ட நிலையில் தற்போது பார்த்திபன் தனது ட்வீட்டரில் ”பி.ஏ. வேணும்னு கேட்டால், பணமே வேணாம், வேலை செய்றேன்னு நிறைய விண்ணப்பங்கள்.அன்புக்கு நன்றி. வந்தவை அனைத்தும் சிறப்பாயினும் ஒன்றை தேர்ந்தெடுப்பது என் இயலாமை. மன்னிக்க. இன்னும் 3 தினங்களுக்குள் வரும் விண்ணப்பங்களில் தேர்வு செய்யப்படும். நன்றி…” என்று குறிப்பிட்டுள்ளார்.