‘நான் கடவுள்’, ‘நிமிர்ந்து நில்’ படங்களை தயாரித்த வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் அடுத்துத் தயாரிக்கும் படம் ‘ஒரு பக்கக் கதை’.
இரண்டாண்டுகளுக்கு முன்பாக ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ என்ற வெற்றி படத்தைக் கொடுத்த பாலாஜி தரணிதரன்தான் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் பிரபல தமிழ், மலையாள நடிகரான ஜெயராமின் மகன் காளிதாஸ். இவர் ஏற்கெனவே குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் நடித்திருக்கிறார். இதில் ‘எண்ட வீடு அப்புவிண்டேயும்’ என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதையும் பெற்றிருக்கிறார்.
இந்தப் படத்தின் அறிமுக விழா பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. காளிதாஸை நடிகர் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தி வைத்தார்.
விழாவில் பேசிய தயாரிப்பாளர் சீனிவாசன், “பாலாஜி தரணிதரன் கடந்த இரண்டு வருடங்களாகவே எங்களுக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தார். ஒ்வ்வொரு முறையும் கதை சரியில்லாமல் போகவே.. அவராகவே ‘வேறு கதையோடு வருகிறே்ன்’ என்று சொல்லிவிட்டுப் போவார். அப்படித்தான் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு இந்த ‘ஒரு பக்கக் கதை’யைச் சொல்லி எங்களிடம் ஓகே வாங்கினார்..” என்றார்.
இயக்குநர் பாலாஜி தரணிதரன் பேசும்போது, “நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படத்தின் ஆடியோவையும் கமல் ஸார்தான் வெளியிட்டார். அந்தப் படத்தை தரமானதாக எடுத்து வெற்றிப் படமாக்கினேன். இதையும் அது போலவே எடுத்திருக்கிறேன்.. வெற்றி பெறுவேன். நிச்சயம் கமல் ஸாரின் பெயரைக் காப்பாற்றுவேன்..” என்று ரத்தினச் சுருக்கமாக பேசிவிட்டுப் போனார்.
ஜெயராம் பேசும்போது “என்னுடைய வாலிப வயதில் கும்பகோணத்தில் கமல் சார் நடித்த ‘மரோசரித்திரா’ படத்தை பார்த்துட்டு, இரண்டு நாள் பேச்சே வராமல் இருந்தவன் நான். அவர்கூட சேர்ந்தெல்லாம் நான் நடிப்பேன் என்றோ, என் மகனை அவர் வந்து அறிமுகம செய்வார் என்றோ நான் நினைத்துகூட பார்க்கவில்லை. ‘நன்றி’ என்ற ஒரு வார்த்தையை சொன்னால் மட்டும் போதாது. என் குடும்பமே என்றென்றும் அவருக்கு நன்றிக் கடன்பட்டிருக்கு..” என்றார்.
கமல் பேசும்போது, “நான் இங்கே வந்திருப்பதே ஜெயராம் மீது கொண்ட அன்பினால்தான்… சினிமா உலகமே என் குடும்பம் மாதிரி. இங்கே என்னோடு சண்டை போடுபவர்கள்கூட என் குடும்பம்தான். அதெல்லாம் சம்பந்தி சண்டை மாதிரி. ஆனால் நெருங்கிய உறவுகள் இருக்கும் இல்லையா…? அப்படி ஒருவர்தான் இந்த ஜெயராம். இங்கே அவரை பிடிக்காதவர்களே கிடையாது.
அவர் பெயரைக் காக்கும் பிள்ளையாக அவரை மறக்காத பிள்ளையாக காளிதாஸ் இருக்க வேண்டும். காளிதாஸ் என்ற பெயர் தமிழ்ச் சினிமாவில் யாருக்கும் கிடையாது. இந்தப் பெயர் மிக வித்தியாசமான பெயர். ஜெயராம் ஏற்கனவே பிளான் செய்துதான் இப்படி பெயர் வைத்திருக்கிறார். குடும்ப விஷயத்திலும் பிளான் செய்துள்ளார். அதனால்தான் அவருக்கு ஒரு பையன். ஒரு பெண்.
கணேசன் என்ற பெயர் தமிழ் சினிமாவில் பிரபலமான பெயர். அதனால்தான் கணேசன் என்ற பெயரில் வந்து பின்னர் ஜெமினி கணேசன் என்று மாற்ற வேண்டி வந்தது. இவருக்கு அந்த பெயர் மாற்றம் தேவை இல்லை.
இதுவொரு சம்பிரதாயமான நிகழ்ச்சி. அவ்வளவுதான்.. இவரை அறிமுகப்படுத்துவது நான் இல்லை. இயக்குனர்தான். நான் சும்மா ‘இவர்தான் ஜெயராமின் மகன் காளிதாஸ்’ என்று சொல்வதற்காக மட்டும்தான் இங்கே உங்கள் முன் வந்திருக்கிறேன். இனிமேல் எல்லாமே இயக்குனர் மற்றும் காளிதாஸ் கையில்தான் உள்ளது.
டி.என்.ஏ.யில் எனக்கு நம்பிக்கை இல்லை. உழைப்பில்தான் எனக்கு நம்பிக்கை உள்ளது. டி.என்.ஏ. எவ்வளவு பலமாக இருந்தாலும், அதை விரயம் செய்யும் ஊதாரித்தனமான பிள்ளையாக இருந்தால், டி.என்.ஏ.வால் ஒன்றும் செய்ய முடியாது..
நல்லவேளை காளிதாசுக்கு முன்னாடியே சினிமாவை பற்றி அனுபவம் உள்ளது. இனிமேல் இங்கே எதையும் கண்டு அவர் வியக்கமாட்டார். காளிதாஸ், நீங்கள் சினிமாவில் பணிவை மட்டுமே கற்றுக் கொள்வதோடு நின்று விடாதீர்கள். சினிமாத் துறைகளில் இருக்கும் எல்லா கஷ்டங்களையும் கற்றுக் கொள்கிறீர்களோ இல்லையோ, புரிந்தாவது கொள்ளுங்கள். லைட் பாய், தயாரிப்பாளர், புரொடக்சன் நபர் என்ன செய்கிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
‘மரோசரித்ரா’வை பற்றி ஜெயராம் இங்கே சொன்னார். அதுவொரு வித்தியாசமான படம். அப்படித்தான் எடுக்கப்பட வேண்டும். எடுக்கப்பட்டது. நானெல்லாம் அதில் நடிப்பேனென்று நினைக்கவே இல்லை. ஆனால் என் குருநாதர் நினைத்தார்.. எடுத்தார்..
இப்போதெல்லாம் வித்தியாசமான படங்களை எடுப்பவர்களைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். வித்தியாசமாகத்தான் மக்களே பார்க்கிறார்கள். அதற்காகத்தான் நான் நடிக்க வந்தேன். சினிமாவில் எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்தாலும் புதியவர்களுக்கு வாய்ப்புகள் உண்டு. அந்த வாய்ப்பை நல்லபடியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்..
இதுவொரு புரியாத குழப்பமான இண்டஸ்ட்ரி.. இதுல ஏதாவது பாலிட்டிக்ஸ்னா என்னிடம் வந்து கேளுங்கள். அது ஜெயராமுக்கு தெரியாது. நான் ரொம்ப பட்டிருக்கிறேன். அதனால் எனக்குத் தெரியும். நல்லவர்கள் சூழ்ந்திருக்கும் உங்கள் வாழ்க்கையில் நல்லதே அமைய எனது வாழ்த்துக்கள்..” என்று சொல்லி முடித்தார் கமல்.