அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் ‘ஒரு நொடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை திரைப்பட நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் இன்று வெளியிட்டார்.
இந்தப் படத்தை மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்ஷர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், பாஃப்டா திரைப்படக் கல்லூரி நிறுவனரும், ‘காற்றின் மொழி’, ‘இவன் தந்திரன்’, ‘கோடியில் ஒருவன்’, ‘கொலைகாரன்’ போன்ற முக்கியமான படங்களை வெளியிட்ட விநியோகஸ்தருமான தனஞ்செயன் இப்படத்தை முன்னின்று வழங்குகிறார்.
வித்தியாசமான கதைக் களத்துடன் உருவாகி வரும் ‘ஒரு நொடி’ படத்தில் ‘தொட்டால் தொடரும்’ பட நாயகனும் ‘அயோத்தி’ படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்தவருமான தமன் குமார் முற்றிலும் புதிய பாத்திரம் ஒன்றில் நாயகனாக நடிக்க, அவருடன் எம்.எஸ்.பாஸ்கர், வேல.ராமமூர்த்தி, பழ.கருப்பையா, தீபா ஷங்கர், ஸ்ரீரஞ்சனி, குரு சூரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றிருக்கின்றனர்.
ஒளிப்பதிவு இயக்குனராக கே.ஜி.ரத்தீஷ் பொறுப்பேற்க, கலை இயக்கத்தை எஸ்.ஜே.ராம். செய்கிறார். இசையை அறிமுக இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கமும், படத் தொகுப்பை எஸ்.குருசூர்யாவும் செய்திருக்கிறார்கள்.
முதல் படத்திலேயே முத்திரை பதிக்க விரும்பும் இயக்குநர், ஆர்வமும் நேர்மையும் மிக்க புதிய தயாரிப்பாளர், வளர்ந்து வரும் இளம் நடிகர் பட்டாளம் என்று ஆர்வமிக்க இந்தக் கூட்டணி இந்த ‘ஒரு நொடி’ படத்தின் மூலம் திகில் மற்றும் மர்மம் நிறைந்த சஸ்பென்ஸ் கதை ஒன்றை புதிய கோணத்தில் சொல்லக் காத்திருக்கிறது. ரசிகர்கள் யூகிக்க முடியாத மர்ம முடிச்சுகள் படத்தின் இன்னொரு பலம்.
‘ஒரு நொடி’ படத்தின் படப்பிடிப்புகள் முழுமையடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வெகு மும்முரமாக நடந்து வருகின்ற நிலையில், வெகுவிரைவில் திரையில் இப்படத்தை காணலாம்.
படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் குறிப்பிட்ட இடைவெளியில் வெளியிடப்படும்.












