அம்மே நாராயணா புரொடெக்சன்ஸ் மற்றும் ‘7 C’ எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் புதிய படம் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உடன் பிரதான வேடத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கிறார். ‘ரங்கூன்’, ‘இவன் தந்திரன்’ ஆகிய படங்களுக்கு பிறகு இவரது படங்களுக்கு எதிர்பார்ப்பு கூடி இருப்பதால் இந்தப் படம் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்திருக்கிறது. இசை – ஜஸ்டின் பிரபாகர், ஒளிப்பதிவு – ஸ்ரீசரவணன். அறிமுக இயக்குனர் ஆறுமுக குமார் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தில் ஹீரோயினாக காயத்ரி நடிக்கவிருக்கிறார். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படம் மூலம் ரசிகர்களின் பாராட்டை பெற்றவர் காயத்ரி. மிக திறமையான நடிகை என்று பெயரெடுத்திருக்கும் இவர் விஜய் சேதுபதியுடன் மூன்றாவது முறையாக ஜோடி சேர்கிறார்.
இந்தப் படத்தின் ஹீரோயினாக காயத்ரி தேர்வு செய்யப்பட்டது குறித்து பேசிய இயக்குநர் ஆறுமுக குமார், “காயத்ரி மிக சிறந்த நடிகை. அவரது திறமைக்கு ஏற்ற பாத்திரங்கள் இதுவரையிலும் அவருக்கு கிடைக்கவில்லை என்பதுதான் என் கருத்து. எங்களுடைய ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ திரைப்படம் அவருக்கு ஒரு ராசியான, வெற்றியான படமாக அமையும். இந்தக் கதாபாத்திரம் அவருக்கு பெரிய பெயரையும் வாங்கி கொடுக்கும்…” என்றார்.
தற்போது துரித வேகத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்துக்கு இப்போதே திரை உலக வர்த்தகத்தினர் இடையே ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்துள்ளது.