திருமணம் என்றதும் இனம் புரியாத மகிழ்ச்சி எழுவதும் காரணம் தெரியாத கனவு மலர்வதுமாக இருந்ததெல்லாம் ஒரு காலம். இப்போதெல்லாம் திருமணம் என்றாலே ஒருவித பதற்றமும் மன அழுத்தமும் வந்து ஆணோ பெண்ணோ இருவரையுமே சூழ்ந்து கொள்கின்றன.
எப்படியாவது திருமணம் நடக்க வேண்டும் என்கிற உந்துதலும் நெருக்குதலும் பலருக்கும் நெருக்கடி தருகின்றன.
சற்றுத் தள்ளி நின்று பார்த்தால், திருமணம் என்பதே ஒரு கூத்து போலவே தோன்றும். ஊரே குடும். பலரும் கதாபாத்திரங்களாக வருவார்கள். அவ்வப்போது தங்கள் குணச்சித்திரங்களை வெளிப்படுத்துவார்கள். அவரவர்க்கு வசனங்கள் இருக்கும். பார்வையாளர்களும், பங்கேற்பவர்களும் கலந்து கொள்வார்கள். உச்சக்கட்ட காட்சி தாலி கட்டுவது – அதாவது திருமணம் நடப்பது என்றிருக்கும்.
ஆகவே திருமணம் என்பது ஒருநாள் கூத்து போலவே தோன்றும். இந்தக் கோணத்தில் கதை சொல்லும் படமாக உருவாகி இருப்பதுதான் ‘ஒரு நாள் கூத்து’ படம்.
இந்தப் படத்தில் தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ், கருணாகரன், சார்லி, ரித்விகா, சூரியன் FM ரமேஷ், பால சரவணன், நாகி நீடு ஆகியோர் நடித்துள்ளனர்.
கெனன்யா பிலிம்ஸ் சார்பில் ஜெ. செல்வகுமார் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இவர் ஏற்கெனவே ‘திருடன் போலீஸ்’ படத்தினை தயாரித்தவர். இப்போது தினேஷ் நடிப்பில் ‘உள்குத்து’, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘புரூஸ்லீ’’, சந்தானம் நடிக்கும் ‘சர்வர் சுந்தரம்’ ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறார். அறிமுக இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
படம் பற்றி இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசும்போது, “இந்தப் படம் யதார்த்தமான, கலகலப்பான, கலர்ஃபுல்லான திருமணம் சார்ந்த கதை. ஒவ்வொரு திருமணத்துக்கான ஓட்டமும், அத்திருமணம் முடிந்ததும் நின்று விடுகிறது.
திருமணங்கள் இப்போதெல்லாம் சில சூழல்களில் ஒரு திணிப்பாகவும், நிர்ப்பந்தமாகவும், வன்முறையாகவும் மாறி வருகிறது. திருமணத்துக்குப் பிந்தைய தருணங்களைப் பற்றி அதன் விளைவுகளைப் பற்றி யாருமே நினைத்துப் பார்ப்பதில்லை.
பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, வேலை இறுதியாகத் திருமணம், அத்துடன் வாழ்க்கை முடிந்து விடுவது போல் கருதுகிறார்கள். திருமணத்துடன் எல்லாம் முடிந்து விடுவதாக நினைக்கிறார்கள்.
இந்தப் படம் திருமண வாழ்க்கையை விமர்சிக்கவில்லை. கருத்தும் சொல்லவில்லை. திருமணம் சார்ந்து சில கேள்விகளை எழுப்பி, நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கும்..” என்கிறார்.
படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அனைவருமே பாத்திரப் பொருத்தம் கருதியே தேர்வு செய்யப்பட்டு நடித்துள்ளனர். ஒவ்வொருவரும் தன் பணியைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.
இதில் அறிமுகமாகியிருக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ், மிஸ் இந்தியா யூ.ஏ.இ. அதாவது ஐக்கிய அரபு நாடுகளில் வாழும் இந்தியர்களின் அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் தமிழ் பேசத் தெரிந்த வெளிநாட்டு நடிகை எனலாம்.
தினேஷ் இதில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பவராக வருகிறார். புதிய தோற்றம், புதிய தன்மையுடன் வருகிறார்.
ஐ.டி. சார்ந்த புதிய தலைமுறைக் கதை என்பதால் ஐ.டி. நிறுவனங்கள் இருக்கும் ‘ஓ.எம்.ஆர். ‘எனப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் கணிசமான படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. சென்னை மட்டுமல்ல திண்டுக்கல்லிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்துக்காக எஃப்எம். வானொலி நிலையம் போல ஒரு செட் போடப்பட்டுள்ளது.
”இந்தப் படத்தின் கதையோ காட்சியோ பார்ப்பவர் மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும். 10-ல் 8 காட்சிகள் பார்ப்பவர்களைத் தங்களோடு தொடர்புபடுத்தி பொருத்திப் பார்க்க வைக்கும்படி இருக்கும். எங்கோ எப்போதோ தான் உணர்ந்ததை, கண்டதை கேள்விப்பட்டதை திரையில் காண்கிற உணர்வை ஏற்படுத்தும்..” என நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் நெல்சன்.
படத்தில் 5 பாடல்கள் உள்ளன. படத்துக்கு இசை ஜஸ்டின் பிரபாகரன். இவர் ஏற்கெனவே தமிழில் ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘ஆரஞ்சு மிட்டாய்’ படங்களுக்கு மட்டுமல்ல மலையாளத்தில் ‘குஞ்சுராமாயணம்’ படத்திற்கும் இசையமைத்தவர்.
படத்துக்கு ஒளிப்பதிவு கோகுல் பினாய். இவர் ஏற்கெனவே ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர். படத்தில் மூன்று வித பின்னணிகள்.. மூன்று வித நிறங்கள் இருக்கும். இதற்காக மூன்று வித தன்மையிலான ஒளிப்பதிவு செய்யும் வாய்ப்பு கிடைத்ததாக கூறுகிறார் கோகுல் பினாய்.
சங்கர் வசனம் எழுதியுள்ளார். படத் தொகுப்பு சாபு. நடனம் ஷெரீப், கலை விதேஷ், ஒலிப்பதிவு ஹரிஹரன், சச்சின்.
நடிகர்களின் ஒத்துழைப்பும், தயாரிப்பாளரின் ஊக்கமும் படத்தை 59 நாட்களில் முடிக்க உதவியதாக பூரிப்புடன் கூறுகிறார் இயக்குநர்.
‘ஒரு நாள் கூத்து’ ஜூன் 10-ம் தேதியன்று திரைக்கு வரவுள்ளது.