full screen background image

ஒரு முகத்திரை – சினிமா விமர்சனம்

ஒரு முகத்திரை – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தில் ரகுமான், சுரேஷ், அதிதி ஆச்சார்யா, தேவிகா, ஸ்ருதி, டெல்லி கணேஷ், மீரா கிருஷ்ணன், சுவாமிநாதன், சாம்ஸ், பாலாஜி, ரவி, ரேகா சுரேஷ், பாண்டு, மாஸ்டர் மித்திலேஷ், பேபி சக்தி அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர்.

கலை – வினோத் ரவீந்திரன், நடனம் – பாபி, அருண் குமார், சண்டை பயிற்சி – பில்லா ஜெகன், பி.ஆர்.ஓ. – நிகில், ஒளிப்பதிவு – ஷரவண பாண்டியன், இசை – பிரேம்குமார் சிவபெருமான், பாடல்கள் – மதன் கார்க்கி, அண்ணாமலை, பிரியன், ஜிபீ, தயாரிப்பு நிர்வாகம் – கன்னூர் நிர்மல், தயாரிப்பு – ஆர்.செல்வம், எழுத்து, இயக்கம் – ஆர்.செந்தில்நாதன்.

இப்படத்தை பிரபல விநியோகஸ்தர் ஞானசேகரனின் GS Cinemas நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிட்டுள்ளது.

ஹீரோயின் தேவிகா ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் புதிதாக வேலைக்கு சேர்கிறார். அங்கே மனித வள மேம்பாட்டுத் துறையின் தலைவராக இருக்கும் இளைஞன் அர்ஜூனுடன் நெருங்கிப் பழகுகிறாள். அது அர்ஜூனுக்கு காதலாகத் தெரிகிறது.

ஆனால், அர்ஜூனுடன் படுக்கைவரையிலும் தனது நட்பை வைத்துக் கொள்ளும் தேவிகா சமயோசிதமாக தனக்கு இதனைவிடவும் அதிகமான சம்பளத்தில் வேலை கொடுக்கும் மும்பை நிறுவனத்திற்குச் செல்ல முடிவெடுக்கிறாள்.

இதனால் அதிர்ச்சியாகும் அர்ஜூன் தனது காதலை ஏற்றுக் கொள்ளும்படி தேவிகாவிடம் மன்றாடுகிறான். ஆனால் தேவிகா இதனை ஏற்காமல் போக…  வேலையில் ஈர்ப்பு இல்லாமல், குடிக்கு அடிமையாகி புத்தி பேதலித்துப் போகிறான் அர்ஜூன்.

இதே நேரம் மருத்துவக் கல்லூரியில் மனநலப் பிரிவில் படித்து வருகிறார்கள் கண்மணி என்னும் அதிதியும், மது என்னும் ஸ்ருதியும். இருவருமே மிகப் பெரிய பணக்கார வீட்டுப் பெண்கள்தான். ஆனால் இருவருக்குள்ளும் எப்போதும் ஒரு ஈகோ போட்டி. அதிகாரப் போட்டி.

இந்தப் போட்டியில் எழுந்த ஒரு சண்டை மருத்துவக் கல்லூரி முதல்வர்வரையிலும் செல்கிறது. இருவருக்குமிடையில் ஏற்கெனவே கோபதாபங்கள் இருப்பதை அறிந்திருக்கும் கல்லூரி முதல்வர் இருவருக்கும் ஒரு போட்டி வைக்கிறார்.

“தமிழகத்திலேயே மிக பிரபலமான சத்தியமூர்த்தி ரத்னவேல் என்னும் மனநல மருத்துவரை தங்களது கல்லூரிக்கு சிறப்பு வகுப்பெடுக்க இருவரில் யாராவது ஒருவர் அழைத்து வர வேண்டும்..” என்கிறார்.

இந்த சேலன்ச்சை ஏற்றுக் கொள்ளும் இருவரும் வேறு, வேறு வழிகளில் இதற்காக முயல்கிறார்கள். அதிதிக்கு சென்னையில் ரோஹித் என்றொரு முகநூல் நண்பன் இருக்கிறான். எந்நேரமும் அவனுடன் சாட்டிங் செய்து கொண்டேயிருக்கிறாள். அவனிடம் இந்த விஷயத்தைச் சொல்லி எப்படியாவது சத்தியமூர்த்தி ரத்னவேலை அழைத்து வரும்படி சொல்கிறாள். ஆனால் அவனிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை.

ஆனால் சொன்ன நாளில் சத்யமூர்த்தி ரத்னவேல் என்னும் ரகுமான் அவர்களின் கல்லூரிக்கு வந்துவிடுகிறார். அதிதியின் தோழன் ரோஹித்தின் வேண்டுகோளால்தான் இந்தக் கல்லூரிக்கு தான் வந்ததாகச் சொல்கிறார் சத்தியமூர்த்தி. அதோடு அங்கேயிருந்த 5 நாட்களுக்குள்ளேயே அதிதிக்கும், ஸ்ருதிக்குமான மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து இருவரையும் பேச வைத்து, நட்பாக்கிவிடுகிறார்.

இதற்கிடையில் அதிதிக்கு கல்லூரி படிப்பு முடிவடைகிறது. ஊரில் அவரது அத்தை பையனை கல்யாணம் செய்து கொள்ளும்படி அவளது பெற்றோர் வற்புறுத்த, அதிதி அதனை ஏற்காமல் சென்னைக்கு கிளம்புகிறாள். தான் லண்டனுக்கு சென்று மேற்படிப்பு படிக்கப் போவதாகச் சொல்லிவிட்டு ரோஹித்துக்கு முகநூலில் தகவல் சொல்லிவிட்டு சென்னைக்கு வருகிறாள்.

ஆனால் ரோஹித் சொன்ன நேரத்தில், சொன்ன இடத்திற்கு வராமல் போகிறான். ஆனால் மருத்துவர் சத்தியமூர்த்தி அங்கே வருகிறார். விஷயமறிந்து அதிதியை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். ரோஹித்தை கண்டறியும்வரையிலும் அவளை அங்கேயே தங்கச் சொல்கிறார். அதிதியும் அதனை ஏற்றுக் கொள்கிறாள்.

லண்டனுக்குச் செல்லும் ஆசையில் இருக்கும் அதிதிக்கு தன்னுடைய சொந்தப் பணத்தில் இருந்து 25 லட்சம் ரூபாயை கொடுத்து கிளம்பச் சொல்கிறார் டாக்டர் சத்தியமூர்த்தி. அதிதி இன்ப அதிர்ச்சியில் ஆடிப் போக.. அடுத்த அதிர்ச்சியாக டாக்டரின் டேப்லட்டை ஒரு முறை அதிதி பார்க்க நேரிடுகிறது. அப்போது இதைவிடவும் அதிகமான அதிர்ச்சி அவளுக்கு ஏற்பட்டு, இதன் விளைவாய் டாக்டர் சத்தியமூர்த்திக்கும், அவளுக்கும் மோதல் உருவாகிறது.

இன்னொரு பக்கம் மாயாவை மறக்க முடியாமல் பைத்தியமான அர்ஜூனுக்கு சிகிச்சையளிக்கும் வேலையையும் செய்து வருகிறார் டாக்டர். இதே அர்ஜூனை வைத்து அதிதிக்கு ஒரு முடிவு கட்ட டாக்டர் திட்டம் தீட்டுகிறார். லண்டனுக்குச் செல்லும் நாளும் நெருங்கி வருகிறது.

இறுதியில் என்ன ஆகிறது..? டாக்டர் சத்தியமூர்த்திக்கும், அதிதிக்கும் என்ன உறவு..? ரோஹித் யார்..? அவன் என்னவானான்..? அர்ஜூன் டாக்டர் சொன்னதை செய்தாரா..? என்பதெல்லாம் இந்தப் படத்தின் சுவையான இரண்டாம் பகுதியின் திரைக்கதை.

‘துருவங்கள்-16’ படத்திற்கு பிறகு ரகுமானின் அழுத்தமான நடிப்பிற்கு எடுத்துக்காட்டாக வந்துள்ள படம் இது. மிடுக்கான தோற்றத்தில் கெத்தான கேரக்டரை செய்ய இப்போதைக்கு ரகுமான்தான் சரியான நபர் என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்திருக்கிறார்.

இதற்கு அவருக்கு பெரும் துணையாக இருந்திருப்பது படத்தின் ஒலிப்பதிவாளரும், சவுண்ட் டிஸைனிங் செய்தவரும்தான். மிக, மிக அழுத்தமான வசன உச்சரிப்புகள், இயக்கம், உடை நேர்த்தி, ரகுமானின் கச்சிதமான டயலாக் டெலிவரி என்று எல்லாமும் சேர்ந்து அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் ரசனையைக் கூட்டியிருக்கின்றன.

சத்யமூர்த்தி ரத்னவேல் நல்லவரா.. கெட்டவரா.. என்கிற எண்ணமே வராத அளவுக்கு பவ்யமாக ஒரு மன நல மருத்துவருக்கான இயல்பு தன்மையை காட்டியிருக்கிறார் ரகுமான். இடைவேளையின்போது தான்தான் ரோஹித் என்பதை அவர் காட்டும்விதம் அழகு. அதைப் படமாக்கியவிதமும்கூட..!

இடைவேளைக்கு பின்பான காட்சிகளில் அவர் எதற்காக இதைச் செய்கிறார் என்பதையே முழுதாகச் சொல்லாமல் கொஞ்சம், கொஞ்சமாக சொல்ல வைத்து.. கடைசியில் அவரே ஒரு மனநல மருத்துவம் தேவைப்படும் பேஷண்ட் என்பதை இயக்குநர் சுட்டிக் காட்டுமிடம் அழகு. வெல்டன் இயக்குநரே..!

ஹீரோயின்களில் மாயாவாக நடித்திருக்கும் தேவிகா மாதவன், கண்மணியாக நடித்திருக்கும் அதிதி, மதுவாக நடித்திருக்கும் ஸ்ருதி.. இந்த மூவருமே மிக அழகிகள். தங்களுடைய கேரக்டர் ஸ்கெட்ச்சை புரிந்து கொண்டு மிக அழகாக நடித்திருக்கிறார்கள்.

மூவரில் அதிதிக்குத்தான் அதிகமான காட்சிகள். இவரும் ரகுமானும் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்தில் இவர் அடிக்கடி ரோஹித்தின் பெயரை உச்சரிக்கும்போதெல்லாம் ரகுமான் பெறும் பதட்டமும், அதைப் பார்த்து இவர் அடையும் பழி வாங்கும் உணர்வுமாக.. படத்தை இந்த இருவரும்தான் பெரிதும் தாங்கியிருக்கிறார்கள்.

தேவிகா மிக யதார்த்தமாக “எல்லாமே கனவுன்னு நினைச்சிட்டு போயிரணும்…” என்று நினைக்கும் கேரக்டரை உணர்ந்து செய்திருக்கிறார். டெல்லி கணேஷும், மீரா கிருஷ்ணனும் பெற்ற மகனின் நிலைமையை உணர்ந்து தவிக்கும் பெற்றவர்களை அடையாளம் காட்டுகிறார்கள்.

அர்ஜூனின் தற்கொலை முயற்சியை தடுக்கும் ரகுமானின் திட்டமும், ஆக்சன்களும் அந்தக் காட்சியை பதைபதைப்புக்குள்ளாக்கியது என்பது உண்மைதான். சிறந்த இயக்கத்தை இந்தக் காட்சியில் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

இன்னொரு நாயகனாக அர்ஜூன் வேடத்தில் நடித்திருக்கும் சுரேஷ் தனது கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார். புத்தி பேதலிப்பில் இருக்கும்போது அவர் காட்டும் நடிப்பும், தவிப்பும், கோபமும், ஆத்திரமும் உண்மையாகவே படத்தை ஒன்றிப் போய் பார்க்க வைத்திருக்கிறது. வெல்டன் ஸார்..! பாலாஜி மற்றும் சுவாமிநாதன் இருவரும் சிறிது நேரம் கிச்சுகிச்சு மூட்டியிருக்கிறார்கள்.

சரவண பாண்டியனின் ஒளிப்பதிவில் வீட்டில் நடக்கும் காட்சிகளிளெல்லாம் ஒரு பதட்டத்தை கிரியேட் செய்ய வைத்திருக்கிறது. சஸ்பென்ஸ், திரில்லர் டைப் கதைகளுக்கேற்ற மூடை கிரியேட் செய்திருப்பதில் ஒளிப்பதிவாளரின் பங்கு முக்கியமானது. மிகச் சரியாக தனது பணியைச் செய்திருக்கிறார்.

இதைவிடவும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார் படத்தின் தொகுப்பாளரான எஸ்.பி.அஹமது. ரகுமானின் சைக்காலஜிக்கல் பிரச்சினையை கோர்வையாக சொல்ல முயலும் இயக்குநரும் எண்ணவோட்டத்திற்கு படத் தொகுப்புதான் பெரிதும் கை கொடுத்திருக்கிறது. பிரேம்குமார் சிவபெருமானின் பின்னணி இசையும் கொஞ்சம் பயமுறுத்தியிருக்கிறது.

முகநூலில் அடையாளம் தெரியாத நபர்களுடன் ஏற்படும் நட்பு கடைசியில் எந்த அளவுக்கு கேடாய் முடியும் என்பதைத்தான் இயக்குநர் செந்தில்நாதன் இந்தப் படத்தின் மூலம் சொல்லியிருக்கிறார்.

சொல்ல வந்த்து சரியென்றாலும் மருத்துவக் கல்லூரி மாணவி.. சைக்காலஜிக்கல் மாணவி.. முன் பின் தெரியாத ஒரு மருத்துவரின் அழைப்பை ஏற்று தன்னந்தனியாக அந்த வீட்டில் தங்க முடிவெடுப்பாரா..? தனது தாய், தந்தையை எதிர்த்து லண்டன் செல்லும் முயற்சியை எடுப்பாரா..? என்றெல்லாம் கொஞ்சம் யோசிக்கவும் வைத்திருக்கிறார் இயக்குநர்.

அதேபோல் டாக்டர் கொடுக்கும் 25 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு லண்டன் கிளம்ப எத்தனிக்கும் அதிதி, டாக்டரை பழி வாங்க ஏன் துடிக்க வேண்டும்..? அவருக்கு நேர்மையான குணமிருந்தால் அவர் அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு தன் வீட்டிற்கு கிளம்பியிருக்கலாமே..? ரோஹித் என்ற பெயரில் தன்னை ஏமாற்றியதற்காக தானும் அவரது பணத்தை வாங்கிக் கொண்டு அவரையே ஏமாற்றுவேன் என்று சொன்னால், இது நீதி சொல்லும் கதை இல்லையே..?

ரகுமானின் மனநலப் பிரச்சனையை இந்தப் படம் அதிகம் சொல்லாததால், ஏன் ரகுமான் இப்படியொரு போலி பெயரில் உலா வந்து அதிதியை கவர முயற்சிக்கிறார் என்பதே தெரியாமல் போய்விட்டது. திருமணத்திற்காக அதிதியை கவர முயல்கிறார் என்றால் அதில் தவறேதும் இல்லையே..?

இப்படி ஒரு சில சன்னமான பிரச்சினைகள் இருந்தாலும் ஒரு கிரிப்பான, திரில்லிங்கான சஸ்பென்ஸ் படத்தை கடைசிவரையிலும் பார்க்க வைத்திருக்கும் படத்தைக் கொடுத்ததற்காக இயக்குநர் செந்தில்நாதனுக்கு நமது நன்றியும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்..!

ஒரு முகத்திரை – ஒரு முறை பார்த்துதான் விடுங்களேன்..!

Our Score