full screen background image

சசிதரூர்-சுனந்தா புஷ்கரின் வாழ்க்கைக் கதையா ‘ஒரு மெல்லிய கோடு’ திரைப்படம்..?

சசிதரூர்-சுனந்தா புஷ்கரின் வாழ்க்கைக் கதையா ‘ஒரு மெல்லிய கோடு’ திரைப்படம்..?

இந்தியாவின் பரபரப்புச் சம்பவங்களை மையமாக வைத்து படமெடுப்பதில் வல்லவராக இருக்கிறார் இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ்.

ராஜீவ்காந்தி கொலையை மையமாக வைத்து ‘குப்பி’, வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘வனயுத்தம்’ என்று படங்களை தயாரித்து இயக்கியவர். இப்போதும் ஒரு சர்ச்சையான விஷயத்தை மையமாக வைத்து ‘ஒரு மெல்லிய கோடு’ என்கிற படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் அர்ஜுன் நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடம் ஒன்றில் ஷாம் நடிக்கிறார். கதாநாயகியாக அக்ஷா பட் நடிக்கிறார். மனிஷா கொய்ராலா ஒரு மிக முக்கியமான பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ரவிகாளே, ஜீன், அருள்மணி ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.                               

எடிட்டிங் – K.V.கிருஷ்ணா ரெட்டி, ஒளிப்பதிவு – சேது ஸ்ரீராம், நடனம்  – விட்டல், கலை   -ஆனந்தன், நிர்வாக தயாரிப்பு – இந்துமதி, தனஜெய் குண்டப்பூர்,  தயாரிப்பு மேற்பார்வை   –  அண்ணாமலை, எழுத்து, இயக்கம் – A.M.R. ரமேஷ்

இந்தப் படத்தின் கதை கடந்தாண்டு தற்கொலை செய்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவியான சுனந்தா புஷ்கரின் வாழ்க்கை சம்பவங்கள்தான் என்று திரையுலகில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

சுனந்தா புஷ்கர் துபாயில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் சேல்ஸ் மேனேஜராகப் பணியாற்றி வந்தார். ஏற்கெனவே இரு திருமணங்கள் செய்தவர். 22 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில் சுனந்தா புஷ்கரை கடந்த 2010-ம் ஆண்டு மத்திய அமைச்சர் சசிதரூர் காதல் திருமணம் செய்து கொண்டார்.

2014-ம் ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண் டிவி ரிப்போர்ட்டருடன் சசிதரூருக்கு நெருக்கம் ஏற்பட்டதாக சுனந்தாவே பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இது பற்றிய சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் திடீரென்று கடந்தாண்டு ஜனவரி 17-ம் தேதியன்று டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் மர்ம்மான முறையில் இறந்து கிடந்தார் சுனந்தா. அவரது மரணம் தற்கொலை என்று அப்போது பேசப்பட்டு வழக்கு முடிக்கப்பட்டது.

ஆனால் அது தற்கொலையல்ல. கொலையாகவும் இருக்கலாம் என்று பத்திரிகைகளும், எதிர்க்கட்சியினரும் சொல்லி வந்தனர். இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு இந்த வழக்கு மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலைமையில் சுனந்தா புஷ்கரின் வாழ்க்கைக் கதைதான் இந்த ‘ஒரு மெல்லிய கோடு’ திரைப்படம் என்றும், சுனந்தாவின் கேரக்டரில் மனீஷா கொய்ராலா நடிப்பதாகவும் திரையுலகில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இப்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் மற்றும் இதர வேலைகள் நடைபெற்று வருகிறது. படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

படம் பற்றி பேசிய இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ், “இது எந்தவொரு தனிப்பட்ட விஷயமும் அல்ல. ஒரு கொலையை மையப்படுத்திய கதைதான். சுனந்தா புஷ்கர் மாதிரி நிறைய கொலைகள் இங்கே நடந்திருக்கின்றன. ஆனால், இந்தப் படம் எந்தக் கொலை சம்மந்தப்பட்டது என்பதை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்..” என்கிறார் பூடகமாக..!

இப்படி சுத்தி வளைச்சுச் சொல்லும்போதே தெரியுது இயக்குநர் ஸார்.. சென்சார் பிரச்சினையில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்..!

Our Score