தனது வாழ்நாள் கனவே தொழிலாக அமைவது எல்லோர்க்கும் நடக்காத ஒரு நிகழ்வு. ஆஸ்கார் விருது வென்று நமது தேசத்தையே பெருமை கொள்ள செய்த பிரபல சவுண்ட் டிசைனரான ரசூல் பூக்குட்டி, ‘ஒரு கதை சொல்லட்டுமா ‘ படத்தில் முதன் முறையாக கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தை பிரசாத் பிரபாகர் இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் ராஜீவ் பனகலின் ‘பாம் ஸ்டோன் மல்டி மீடியா’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
படம் குறித்து நாயகன் ரசூல் பூக்குட்டி பேசுகையில், ”இப்படத்தில் நான் ஒரு வழக்கமான ஹீரோ கிடையாது. எனது நிஜ வாழ்வில் பூரம் திருவிழாவின் ஒலிகளை லைவாக ரெகார்ட் செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவாகும். இப்படத்திலும் இதே வாழ்நாள் கனவுள்ள முதன்மை கதாபாத்திரத்தில்தான் நடித்துள்ளேன்.
பூரம் திருவிழாவின் பிரம்மாண்டத்தையும், மேஜிக்கையும் வார்த்தைகளால் சொல்லி விவரிப்பது கடினம். முன்னூறுக்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் பூரம் திருவிழாவில் பங்கேற்பார்கள். இவை அனைத்தையும் நேரில் சென்று ரெகார்ட் செய்வது கடினமான சவாலாகும். ஆனால் அதுதான் எனது வாழ்நாள் கனவு. பூரம் திருவிழாவில் நான் ரெகார்ட் செய்துள்ள ஒலிகள், எனது ஒலி நூலகத்தில் என்றும் இடம் பெறும்.
கண் பார்வை இல்லாதவர்களும் இப்படத்தை உணர்ந்து, ரசித்து, மகிழும்படி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடித்ததில் எனக்கு மிகவும் பெருமை. தமிழ் சினிமா ரசிகர்கள் ‘ஒரு கதை சொல்லட்டுமா’ படத்தையும் அதற்காக நாங்கள் செய்துள்ள அசுர உழைப்பையும் நிச்சயம் பாராட்டி, இப்படத்தை மிகவும் ரசிப்பார்கள் என நம்புகிறேன்…” என்றார்.
‘ஒரு கதை சொல்லட்டுமா’ படத்தில் மேக்கிங் வீடியோ சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. ரிலீஸ் ஆனா சில தினங்களிலேயே இந்த வீடியோ ஒரு லட்சம் பார்வைகளை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.