full screen background image

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் – சினிமா விமர்சனம்

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் – சினிமா விமர்சனம்

ஒவ்வொரு நிமிடமும் விலை மதிக்க முடியாதது என்பார்கள். ஒரு நிமிடத்தில் எடுக்கப்படும் முடிவு ஒருவரின் வாழ்க்கையை வாழவும் வைக்கும்.. அழிக்கவும் செய்யும்.. அந்த ஒரு நிமிட வித்தியாசத்தினால் பெரிசா என்ன நடந்துவிடப் போகிறது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அந்த ஒரு நிமிட வித்தியாசத்தினால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிறார் நமது ஆபத்பாந்த உலகத்தின் ரட்சகன் சிவபெருமான்.

இந்த நிமிட வித்தியாச நேரத்தினால் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது என்று நினைத்த நாரதர் தனது அப்பன் பிரம்மனிடம் போய் கேட்க.. அவர் சிவபெருமானிடம் அழைத்துச் சென்று பஞ்சாயத்தைக் கூட்டுகிறார். சிவபெருமான் தனது ஞானதிருஷ்டியால் சரஸ்வதி சபதம் போல் “இன்னிக்கு நான் நடத்தப் போற நாடகம் இது.. இதைப் பார்த்து ஒவ்வொரு நி்மிடமும் எத்தனை, எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்..” என்கிறார்.

சிவபெருமானின் கதைப்படி.. தனது பிஸினஸ் பார்ட்னரை அசிங்கப்படுத்த நினைத்து அவருடைய மகளைக் கடத்தும்படி தாதாவான நாசர், ஹீரோவை கேட்கிறார். இதற்காக 30 லட்சம் ரூபாய் சம்பளமும் பேசுகிறார். அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண் ஹீரோவின் காதலியாகவும் இருக்கிறாள். மருத்துவமனையில் இருக்கும் ஹீரோவின் அம்மாவின் ஆபரேஷனுக்கு உடனடியாக 6 லட்சம் ரூபாய் தேவை. கூடவே அவனுடைய நண்பர்களான இருவருக்கும், நண்பிக்கும் பணத் தேவையிருக்கிறது. அனைத்தும் ஒரு புள்ளியில் சேர… காதலியைக் கடத்தும்விதமாக கடத்தி.. தாதாவிடமிருந்து 30 லட்சம் ரூபாயையும் வாங்கிக் கொண்டு வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கிறார்கள். இந்த நால்வர் கூட்டணி. இதனை முறையாகச் செய்து முடித்தார்களா என்பதைத்தான் நேரம்-காலம் கூட்டணியோடு எடுத்துக் காண்பித்திருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.

காலை 8.59, 9.00, 9.01 ஆகிய மூன்று நிமிடங்களில் வேட்டைக்குக் கிளம்பும் அவர்களது பணி முறையாக நடைபெற்றதா என்பதைத்தான் மூன்றுவிதமாக காட்சியமைப்புகளில் திரைக்கதையில் பட்டையைத் தீட்டி சுவராஸ்யத்தைக் கூட்டி தந்திருக்கிறார் இயக்குநர்.

இது, 1998-ம் ஆண்டு ஜெர்மன் மொழியில் வெளியான Run Lola Run என்ற திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட படம் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

அந்தப் படத்தில் லோலா என்கிற ஹீரோயின் 20 நிமிடங்களில் 10 லட்சம் யூரோவை கொடுத்து தனது காதலனைக் காப்பாற்ற வேண்டி ஓடுகிறாள். இது மூன்றுவிதமான வெர்ஷன்களில் காட்டப்படுகிறது.. இது இப்படியிருந்தால்.. இது இப்படியிருந்தால்.. என்னும் புதுமையான திரைமொழியில் வெளியாகி உலகம் முழுவதும் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தைக் கொடுத்தது. இதே படத்தின் அடிப்படையை காப்பியடித்துதான் 12-B தமிழ்ப் படம் முன்பே வந்திருந்தது. இப்போது இத்திரைப்படம்.

சிம்புதேவனின் இந்த 3 விதமான திரைக்கதையின் சுவாரஸ்யமே செய்து முடித்தார்களா இல்லையா என்பதையும், இந்த ஒரு நிமிட வித்தியாசத்தில் இவர்கள் எடுத்துக் கொண்ட வேலையில் ஏற்படும் இடைஞ்சல்களை ரசிக்கும்விதமாகச் சொன்னதுதான்.

அனைவருக்கும் இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் ஒரே காஸ்ட்யூம்தான். வீட்டில் இருந்து ஓடத் துவங்குவதில் ஆரம்பிக்கும் திரைக்கதையில் ஆங்காங்கே நகைச்சுவைகளை அள்ளித் தெளித்து, திரைக்கதையில் நகைச்சுவையைத் திணித்து அடுத்தது என்ன என்று கொஞ்சம் திரில்லிங்கையும் சேர்த்தே வைத்திருக்கிறார்கள்..

அருள்நிதி தமிழரசுக்கு ஏற்ற கதை.. அவரால் எந்த அளவுக்கு நடிக்க முடியுமோ அந்த அளவுக்கு நடிப்புக்கு ஸ்கோப் உள்ள கதை என்பதால்தான் ஒத்துக் கொண்டார் போலும்.. ஆனாலும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு வித்தியாசத்தைக் கூட்டிக் கொண்டால் நன்றாக இருக்கும். சில இடங்களில் அவருடைய டயலாக் டெலிவரி ஒன்று போலவே இருக்க.. கொஞ்சம் சலிப்புத்தன்மை ஏற்படுகிறது.. சில டயலாக் டெலிவரிகளில் காமெடியை தானாகவே கொண்டு வந்துவிட்டார்.. வெகு இயல்பாக இவருக்கு காமெடிசென்ஸ் டயலாக் வருகிறது.. ஆனால் இன்னமும் கொஞ்சம் இம்ரூவ்மெண்ட் செய்தால் நல்லது என்றுதான் சொல்கிறோம்..

உருட்டும் விழிகளுடன் வரும் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ பகவதிதான் படத்தில் அதிகம் காமெடி செய்திருப்பது.. அவ்வப்போது கடன், பணம் பற்றியே பேசிக் கொண்டிருப்பது.. கூட்டாளிகளில் ஐசக்கை கழட்டிவிட எத்தனிப்பது.. பேன் தலையில் மோதியவுடன் மூன்று கதைகளிலும் பகவதி பேசும் டயலாக்குகள் அலுப்பை மீறி சிரிக்க வைத்தன.. டீக்கடையில் நரேனை பார்த்து பயந்து போய் இவர் காட்டும் ஆக்சன்களும், டபுள் டேன்க் பக்கத்தில் அமர்ந்து இவர் படும் பாடுகளும் இயக்கத்தினாலேயே சிரிக்க வைக்கின்றன.

இந்தப் படத்தில்தான் பிந்து மாதவி கஷ்டப்படாமல் நடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். இரண்டே இரண்டு காஸ்ட்யூம்கள்தான். பல காட்சிகளில் உட்கார்ந்த இடத்திலேயே கண்களை உருட்டிப் புரட்டி இருக்கின்ற அத்தனை ஷாட்டுகளிலும் தனது முகத்தைக் காட்டியே டயலாக்கை பேசி முடித்திருக்கிறார் பிந்து. ரன் லோலோ ரன்னின் ஹீரோயினின் ஓட்டம் போலவே நம்ம பிந்துவும் ஓடி வரும் ஷாட்டுகளில் அனல் தெறிக்கிறது.. சர்ச்சுக்குள் தன் பக்கத்தில் அமர்ந்து நொச்சு நொச்சென்று பேச்சுக் கொடுத்து நோகடிக்கும் அந்த டீச்சரை கடைசியாக மிரட்டிவிட்டுப் போகும்போதுதான் பிந்து கொடுத்த காசுக்கு கொஞ்சம் நடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். மிச்சமெல்லாம் இயல்பான நடிப்பு.

இடையிடையே அம்மாவாக நடித்த ஸ்ரீரஞ்சனியை வைத்து சென்டிமெண்ட்டை கிளப்பிவிட்டிருக்கிறார்.. கொஞ்ச நேரமே வந்தாலும் நாசர் வழக்கம்போல பெயரைப் பதிவு செய்திருக்கிறார். அருள்தாஸின் கடமை தவறாத டிராபிக் இன்ஸ்பெக்டர் வேடம்.. சிறுவர் மலர் படிக்காமல் போகமாட்டேன் என்று  கர்ஜிக்கும் இன்ஸ்பெக்டர் நரேன்.. இவர்களை பற்றி புட்டுப்புட்டு வைக்கும் டீக்கடை ஓனர் மனோபாலா.. பிஸ்டலை ஐசக் வந்தால்தான் தருவேன் என்று அடம்பிடிக்கும் கவிஞர் விக்கிரமாதித்தயன்.. நல்ல டாக்டர்.. கெட்ட டாக்டர்.. பொறுப்பான டாக்டர்.. என்று மூன்றுவிதமான தோற்றத்தில் ஜெயபிரகாஷ்.. பேத்தியை கடத்தப் போறாங்கன்னு தெரிஞ்சும் நான் கவனிச்சுக்குறேன் என்று தில்லாகச் சொல்லும் தாத்தா வி.எஸ்.ராகவன்.. என்று படத்தில் இடம் பெற்றிருக்கும் கேரக்டர்கள் அனைவருக்குமே சொல்லிக் கொள்ளும்படியான வேடங்கள்தான்..!

இவர்களுமில்லாமல் பேச்சுலர் என்றாலே பிடிக்காத மோகன்ராம்.. காதல் என்றாலே பிடிக்காத பாண்டு, சத்தம் கேட்டு ஓடி வரும் அஸோஸியேஷனுக்காக பாடுபடும் டெல்லிகணேஷ், பாண்டுவின் தங்கையை இரண்டாம்தாரமாக தள்ளிக் கொண்டு போயிருக்கும் எம்.எஸ்.பாஸ்கர்,  மருத்துவமனையில் இருக்கும் நர்ஸ்கள்.. என்று அனைவருக்கும் மூன்று பாகங்களிலும் ஒவ்வொருவிதமான செயல்பாடுகள்.. வேடங்கள்.. ரசிக்கும்வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார் சிம்புதேவன்.

இடையிடையே இஸபெல்லாவுடனான தனது காதலை ரீவைண்ட் செய்து பார்க்கும் அருள்நிதியின் அந்த போர்ஷன் அருமை.. காதலை மென்மையாகச் சொல்லி.. இந்தக் காதல் உடல் பார்த்து வரவில்லை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். அருள்நிதி கையில் அடிபட்டிருக்கும் சூழலில் காதலியே அவரை பாத்ரூமுக்கு அழைத்து வரும் காட்சியில் இன்னமும் காதலைக் கொட்டியிருக்கிறார் இயக்குநர். ஆனால் அருள்நிதியின் ஆக்சனை பார்த்துதான் காதல் என்று சொல்ல முடியாத சூழல்.. ஒரு காதலனுக்குள் எத்தனை குதூலகம் இருக்க வேண்டும்.. அந்தத் துள்ளல் அருள்நிதியிடம் மிஸ்ஸிங்காவே இருக்கிறது படம் முழுக்கவும்..

புதுமுக இசையமைப்பாளர் நடராஜன் சங்கரின் தீம் மியூஸிக் ரகளையானது.. மூன்று பேர் கூட்டணி ஓடத் துவங்கும்போது ஒலிக்கும் பின்னணி இசையினால் படத்துக்குள் நம்மையே இழுக்க வைத்திருக்கிறார். பிஜிஎம்மின் மூலமாகவும் சில நேரங்களில் சிரிக்க வைக்கவும் முயன்றிருக்கிறார் இயக்குநர். நல்லவேளையாக பாடல் காட்சிகளை வைக்காமல் விட்டார்களே.. அதுவரையில் சந்தோஷம்.. இது போன்ற ஸ்பீடான படங்களுக்கு பாடல் காட்சிகள்தான் பெரும் தடையாக இருக்கும்..! நல்ல முடிவு..!

ஒரு சின்ன ஷாட்கூட தவறாக இருக்கக் கூடாது என்கிற மெனக்கெடலுடன் மூன்று பாகத்தின் காட்சிகளுக்கும் கன்டினியூட்டி கெடாமல் பார்த்துக் கொண்டு அடுத்தடுத்து நகர்த்தியிருக்கும் விதத்தைப் பார்த்தால் இயக்குநரின் திறமைக்கு தனி சல்யூட்டே போட வேண்டும் போல் உள்ளது.

‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ வரிசையில் இந்தப் படமும் வித்தியாசமான களத்துடன், போரடிக்காமல் நம்மை அவ்வப்போது சிரிக்க வைத்து ஒரு புல் எண்ட்டெர்டெயின்மெண்ட்டை கொடுத்திருக்கிறது.

சிம்புதேவனுக்கும், அவர்தம் குழுவினருக்கும் நமது வாழ்த்துகள்..!

Our Score