full screen background image

“இயக்குநர்களின் முதல் கதாநாயகன் தயாரிப்பாளர்கள்தான்…” இயக்குநர் பொன்ராமின் பேச்சு

“இயக்குநர்களின் முதல் கதாநாயகன் தயாரிப்பாளர்கள்தான்…” இயக்குநர் பொன்ராமின் பேச்சு

பிரபல இசையமைப்பாளர் ஜுபினின் இசையில் குமரன் எழுதி இயக்கிய ‘ஒரு காதலின் புதுப் பயணம்’ ஆல்பத்தின் வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் பிரிவியூ திரையரங்கில் நடைபெற்றது.

விழாவில் ஆல்பத்தை இயக்குநர் பொன்ராம் வெளியிட்டார். நடிகர்கள் மைம் கோபி, பிரஜின், நிஷாந்த், தயாரிப்பாளர் இளைய அரசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

ஆல்பத்தை வெளியிட்டு பேசிய இயக்குநர் பொன்ராம், “இந்த குமரன் என்னிடம் உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டு வந்தார். ஆனால், அப்போது என்னால் இவருக்கு வாய்ப்பு  தர முடியவில்லை. அடுத்த படத்துக்கு பார்க்கலாம் என்றேன். ஆனால் அடுத்து இப்படி ஒரு வாய்ப்பு வந்து இருக்கிறது. இதை நான் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. புதிய படமும் அவருக்குக் கிடைத்திருக்கிறது.

ponram

ஒருவரை நம்பி பட வாய்ப்பு கொடுப்பது என்பது சாதாரணம் அல்ல. முதல் பட வாய்ப்பு கொடுக்கும் தயாரிப்பாளர்தான் நமக்கு கதாநாயகன், ஹீரோ. எல்லாமே. அதை நாம் மறந்துவிடக் கூடாது.

இது மாதிரியான ஆல்பம் வெளியீட்டு முயற்சிகள் இயக்குநர்கள் தங்களைத் தாங்களே சோதித்துக் கொள்ளும் ஒரு முயற்சிதான். இயக்குநர் எஸ்.எம்.எஸ். ராஜேஷ்கூட இது போன்று ஒரு காட்சியை எடுத்துக் காட்டி காண்பித்துதான் பட வாய்ப்பை பெற்றார்.

இந்த நான்கு நிமிட பாடல் ஆல்பத்தைப் பார்த்தேன். நல்ல வேளை இரண்டு முறை போட்டார்கள்.  அதற்குள் பாடல், கதை, காட்சியழகு எல்லாமே இருந்தன. திரையிட்டபோது முதல் முறை பாடலாகப் பார்த்தேன். இரண்டாவது முறை, அதில் இருந்த கதையைப் பார்த்தேன். இந்த ஆல்பம் நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்…” என்று கூறி வாழ்த்தினார்.

நடிகர் பிரஜின் பேசும்போது, “குமரன் முதலில் இயக்கிய ‘வயோல்’ குறும்படம் சர்வதேச விருதுகளைப் பெற்றது. இந்த ஆல்பத்தையும் ஒரு படம் போல உணர்ந்து செய்திருக்கிறார்.

prajin

ஒன்றரை வருடங்களுக்கு முன் என்னிடம் வந்து ஒரு கதை சொன்னார். அதில் வரும் வில்லன் வேடம் பிரமாதமாக இருக்கும். கதாநாயகனைவிட பெரியதாக இருக்கும். அதை செய்ய நானும் ஆர்வமாகத்தான் இருந்தேன். ஆனால், அந்த வாய்ப்பு நிஷாந்துக்குப் போய்விட்டது. நான் கதாநாயகன் ஆகிவிட்டேன்.

போராடினால்தான் வெற்றி கிடைக்கும். நாங்கள் 5 ஆண்டுகள் போராடி ‘பழைய வண்ணாரப்பேட்டை’ படம் எடுத்தோம். முதல்வர் மரணம், வர்தா புயல் வந்ததால் சரியாகப் போகவில்லை. ஆனால் எங்களது உழைப்பு இன்றும் பாராட்டப்படுகிறது…” என்றார்.

நடிகர் ‘மைம்’ கோபி பேசும்போது,  “இந்தக் குமரனை எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். முதலில் இவர்  ‘ஆக்சன்-கட்’ சொன்னது என்னை வைத்து ‘மாற்றம்’ என்ற குறும் படத்தை எடுத்தபோதுதான். நான் ‘முடியாது’ என்று எப்போதும் சொல்ல மாட்டேன்.

mime gopi

ஒரு ஈ கதாநாயகனாகும்போது, ஒரு ஈ வில்லனாக முடிகிறபோது… நாம் கதாநாயகனாக ஆக முடியாதா..? இப்படித்தான் நான் எல்லாரையும் ஊக்கப்படுத்தியே பேசுவேன். முயற்சி திருவினையாக்கும்.  தம்பி குமரன் இப்போது இயக்குநராகியிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்..” என்றார்.

naren

நடிகர் ‘ஆடுகளம்’ நரேன் பேசும்போது, “நான் இதை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. அசத்திவிட்டாய் குமரன். இது ஆல்பம் அல்ல. ஒரு திரைப்படம் பார்த்த திருப்தியைத் தந்துவிட்டது..” என்றார்.

ஆல்பம் இசையமைப்பாளர் ஜுபின் பேசும்போது, “முதலில் குமரன் இந்தக் கதையைச் சொன்னபோதும், இதுவொரு உண்மை நிகழ்ச்சி என்றபோதும் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. நான் கதைக்குள் இறங்கி உடனே வரிகளும் எழுத ஆரம்பித்துவிட்டேன்.

jubin

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் போனபோது எல்லாரும் ‘வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும்’  என்றபோது என் கவனம் இதன் மீதுதான் இருந்தது. தனியே வந்து ‘இரு உயிர் இடம் மாறும் ஒரு காதலின் புதுப் பயணம் ‘ என்று வரிகளை எழுத ஆரம்பித்துவிட்டேன்…” என்றார்.

இயக்குநர் குமரன் பேசும்போது, “நான் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டது இந்த ஒரு நாளுக்காகத்தான். கல்லூரிப் படிப்பு முடிந்து உதவி இயக்குநராகவும் முடியாமல் இருந்தபோது என் அம்மா, அப்பா இருவருமே ‘உனக்குப் பிடிச்சதை  நீ பண்ணுடா… நாங்க உனக்கு உதவி செய்கிறோம்’ என்றார்கள். அதை என்னால் மறக்க முடியாது.

IMG_9615

‘வயோல்’குறும்படம் நிறைய விருதுகள் பெற்றது . இந்த ஆல்பத்தைத் தயாரிக்க முன் வந்த ரெஜினா பிக்சர்ஸ் ரெக்ஸை மறக்க முடியாது. நாயகன் ரெக்ஸ், நாயகி பார்வதி இருவரையும் ‘எதுவுமே தெரியாமல் வாருங்கள்’ என்றுதான் கூப்பிட்டேன். அப்படி வந்து இப்படி அழகாக நடித்து கொடுத்திருக்கிறார்கள்.

பூஜையே போடாமல் என் அடுத்த படம் இந்த ஆல்ப அறிவிப்புடன் இன்றைக்கு தொடங்கிவிட்டது. அதற்கு உழைக்க இந்த நிமிடத்திலிருந்தே தொடங்கிவிட்டேன்….”என்றார்.

IMG_9631

இந்த ஆல்பம் வெளியீட்டு விழாவிலேயே இயக்குநரின் அடுத்த பட அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அனாமிகா பிக்கர்ஸ் சார்பில் ‘பழைய வண்ணாரப் பேட்டை’ படத்தை ஹன்சிகா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் விநியோகம் செய்த தயாரிப்பாளர் இளைய அரசன்தான் இந்தப் புதிய படத்தைத் தயாரிக்கிறார்.  குமரனின் இயக்கத்தில் பிரஜின், நிஷாந்த் நடிக்க உருவாகவுள்ளது இந்த புதிய படம்.

நிகழ்ச்சியில் ‘பழைய வண்ணாரப்பேட்டை’ படத்தின் இயக்குநர்  ஜி.மோகன், ஆல்பம் நாயகன் ரெக்ஸ், நாயகி பார்வதி, நடன இயக்குநர் சுஜாதா, ஒளிப்பதிவாளர் அர்ஜுன், படத் தொகுப்பாளர் தீபக், கலை இயக்குநர் ராஜா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

Our Score