full screen background image

55 வயது முதியவர் கேரக்டரில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி

55 வயது முதியவர் கேரக்டரில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி

சில படங்களே நடித்திருந்தாலும் அதற்குள்ளாக நடிகர் விஜய் சேதுபதியும் தயாரிப்பாளராகிவிட்டார். அவருடைய பால்ய கால நண்பரான பிஜூ விஸ்வநாத் சொன்ன ஒரு கதையில் இம்ப்ரஸ்ஸான விஜய் இந்தக் கதைக்கு வெளி தயாரிப்பாளர்களை தேடிப் பிடிப்பதற்கு பதிலாக நானே தயாரிக்கிறேன் என்று சொல்லி தன் பெயரை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துவிட்டாராம். இவருடன் தயாரிப்பில் கை கோர்த்திருக்கிறார் காமன்மேன் நிறுவனத்தின் கணேஷ். படத்தின் பெயரை வித்தியாசமாக ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்று வைத்திருக்கிறார்கள்.

Orange Mittai Press Meet Stills (4)

இதில் விஜய் சேதுபதியுடன் ரமேஷ் திலக், அஷ்ரிதா, ஆறு பாலா, வினோத் சாகர், திருச்சி மணிவண்ணன், விசாலினி, தமிழ்ச் செல்வி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

படத்திற்கு ஒளிப்பதிவு செய்து படத்தொகுப்பும் செய்து இயக்கியிருக்கிறார் பிஜூ விஸ்வநாத். கதை, வசனம் எழுதி, தயாரித்து நடித்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். மாய பாண்டி கலை இயக்கம் செய்திருக்கிறார். மீடியா ஆர்ட்டிஸ்ட்டின் கிட்டா குரப்பா சவுண்ட் டிஸைன் செய்திருக்கிறார். பாடல்களை விஜய் சேதுபதி, கட்டளை ஜெயா, ஜஸ்டின் பிரபாகர் எழுதியிருக்கின்றனர்.

இந்தப் படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சி நேற்று மாலை ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடைபெற்றது. மிக வித்தியாசமான முறையிலான டிரெயிலரும், மிக மிக வித்தியாசமான பாடல் காட்சிகளும் திரையிடப்பட்டன. ஒரு பாடல் காட்சியில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில், அடையாளமே கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருந்தார் விஜய் சேதுபதி. அவருடைய கூத்துப் பட்டறை நடிப்புப் பயிற்சி பண்பட்ட நடிகராக அவரை உருவாக்கியிருக்கிறது.

vijay-sethupathi-orange-mittai-movie

படத்தின் கதையென்னவோ இரண்டு வரிகளில் சொல்லிவிடக் கூடிய கதைதான். ஒரு இதய நோயாளிக்கும், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸில் வரும் ஆண் நர்ஸ் ஒருவருக்குமான சம்பவங்களே படத்தின் கதையாம். இது 48 மணி நேரத்தில் நடக்கக் கூடிய சம்பவங்களின் தொகுப்பு.

இந்தப் படத்தில் தற்போதைய புதிய நடிகர்கள் செய்யத் தயங்கும் ஒரு செயலை செய்திருக்கிறார் விஜய் சேதுபதி. 55 வயது மதிக்கத்தக்க முதியவராக இப்படத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

இது பற்றி தன் பேச்சில் குறிப்பிட்ட விஜய் சேதுபதி, “இந்தப் படத்தின் கதையை ‘பிஜு விஸ்வநாத்’ சொன்னபோது அதை என் வாழ்க்கையோட இணைச்சுப் பாத்தேன். உண்மையாவே என் அப்பாவை இந்த கேரக்டர் ஞாபகப்படுத்தியது.

Orange Mittai Press Meet Stills (2)

என் அப்பாகூட நிறைய சண்டை போட்டிருக்கேன். ஏன் பல சமயங்களில் பேசாமல்கூட இருந்திருக்கேன். அப்புறம் பேசுவேன். இது மாதிரி பல முறை நடந்திருக்கு.. ஆனா இன்னிக்கு அதையெல்லாம் நினைச்சுப் பார்த்தால் அப்படில்லாம் செஞ்சது தப்போன்னு தோணுது. அப்படி எனக்குள்ள இருந்த என் அப்பாவோட நினைவுகளை இந்தக் கேரக்டர் தூண்டிவிட்டதால எனக்கே இந்தக் கதை மீது நம்பிக்கை பிறந்தது.

அப்போ எங்கிட்ட டேட்ஸ் கேட்டு வந்த ஒரு புரட்யூசர்கிட்ட பிஜூவை அனுப்பி கதை சொல்ல வைச்சேன். ஆனா, அவங்களுக்கு இந்தக் கதை பிடிக்கலை. ஆனா, எனக்கு இந்தக் கதை மேல முழு நம்பிக்கை இருந்த்தால சரி நாமளே தயாரிப்போம்ன்னு முடிவு செஞ்சேன். என்கூட சேர்ந்து இந்தப் படத்தை காமன்மேன் நிறுவனத்தின் பி.கணேஷ் தயாரிச்சிருக்கார்.

orange-mittai-1

அந்த வயதான கேரக்டரில் நானும், என் மகனைப் போன்ற கேரக்டர்ல ‘ரமேஷ் திலக்’கும் நடிச்சிருக்கோம். எனக்கு ஜோடியில்லை. ஆனால் ரமேஷ் திலக்குக்கு ஜோடியா ‘ஆஷ்ரிதா’ நடிச்சிருக்காங்க. அவங்களுக்குள்ள சின்ன ரொமான்ஸும், நிறைய காதலும் இருக்கு. இதுவும் படத்துல ஆங்காங்கே வரும்..” என்றார்.

கேள்வி பதில் சீஸனில், “அந்த இளைஞன் வேடத்தில நீங்க நடிச்சிருக்கலாமே..? ஏன் வயசான கேரக்டர்ல நடிச்சீங்க..?” என்ற எழும்பிய கேள்விக்கு “மொதல்ல நான் அந்த இளைஞன் கேரக்டர்லதான் நடிக்க இருந்தேன். அந்த வயசான கேரக்டர்ல நடிக்க ஒரு பெரிய நடிகர்கிட்ட கேட்டோம். அவர் நடிக்க மறுத்துட்டார். வேற ஆர்ட்டிஸ்ட்கிட்ட போனா சம்பளப் பிரச்சினை பெரிசானது. தயாரிப்புல இறங்கும்போதே கணேஷ்கிட்ட “இது சின்னப் படம்தான்னு சொல்லித்தான் கூட்டிட்டு வந்தேன். அதனால வேற வழியில்லாமல் நானே நடிக்க முடிவாச்சு.

என் மேக்கப்மேன்கிட்ட ‘வயசான கெட்டப்புல நான் நடிச்சா எப்படியிருக்கும்?’னு கேட்டேன். அவரும் ‘டெஸ்ட் எடுத்துப் பார்ப்போமே’ன்னாரு. கெட்டப் சேஞ்ச் பண்ணி ஸ்டில்ஸ் எடுத்துப் பார்த்தோம். எல்லாருக்கும் பிடிச்சிருந்தது. சரி நாமளே நடிப்போம்ன்னு முடிவு பண்ணி தயாரிப்பாளர்கிட்ட அதுக்கப்புறமாத்தான் சொன்னேன்..” என்றார்.

orange-mittai-2

“படத்துல உங்களுக்கு ஜோடி இல்லையே..?” என்ற இன்னொரு கேள்விக்கு, “கதைல அதுக்குத் தேவையே இல்லை. 55 வயசு கேரக்டருக்கு எதுக்கு ஜோடி.? நான் அப்படி நடிக்கக் காரணமேகூட நடிப்புல வெரைட்டி காட்டணும்கிறதுக்காக இல்லை. கதை எனக்குப் பிடித்திருந்தது. அவ்வளவுதான். கதை கேட்கும்போதே எனக்கு ஜோடி இல்லைங்கிற நினைப்பே வரலை. படம் பாக்கும்போதும் உங்களுக்கும் அந்த நினைப்பு வராது..!

“சிவகார்த்திகேயனை வைத்து படம் தயாரிப்பீர்களா..?” என்று பகீர் கேள்வி வர, “கண்டிப்பாக தயாரிப்பேன்… அவர் நடிக்க ஒத்துகிட்டால் நானும் ரெடி..!” என்று படாரென்று பதில் வந்தது.

கடைசியாக “ஆரஞ்சு மிட்டாய்’ என்ற டைட்டிலை பார்த்தாலே குழந்தைகள் படம் போல இருக்கு. இந்தப் பெயரை எதுக்கு வச்சீங்க..?” என்று கேட்டதற்கு, “இதில் நான் நடிக்கிற முதியவர் கேரக்டருக்கு ஆரஞ்சு மிட்டாய்னா உயிர். அது ஒரு காரணம். அதோட ஆரஞ்சு மிட்டாயே புளிப்பும், இனிப்பும் சேர்ந்தது.  வாழக்கையும் அதே மாதிரிதானே. இன்பம், துன்பம் கலந்ததுதான் நம்ம வாழ்க்கை. அதுனால கதைக்குப் பொருத்தமா இருக்குமேன்னுதான் இந்தப் பெயரை வைத்தோம்..” என்றார்.

படத்தின் டிரெயிலரில் ஒரு குறிப்பிட்ட வசனம் வருகிறது. ரமேஷ் திலக் மைண்ட் வாய்ஸில் பேசும்போது, இந்தாளை பார்த்தா என் அப்பாவை பார்க்குற மாதிரியே இருக்குது..” என்பார். அதேபோல் விஜய் சேதுபதியும் தன்னுடைய மைண்ட் வாய்ஸில் “ரமேஷ் திலக்கை பார்க்கும்போது என் மகனை பார்க்குற மாதிரியே இருக்கு..” என்கிறார்.

உண்மையில் படத்தின் அடிநாதமே இதுதான் என்பது போல தெரிகிறது. தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் ஆழ்மனதில் இருக்கும் அவரவர் அப்பா-மகன் உறவினை இந்தப் படம் தூண்டிவிடும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் படக் குழுவினர்.

பாராட்டுக்கள்.. வெற்றி பெற வாழ்த்துகள்…!

Our Score