full screen background image

மான் கராத்தே படத்துக்கு வரிவிலக்கு கொடுத்தது தவறு-நீதிமன்றத்தி்ல் வழக்கு தாக்கல்..!

மான் கராத்தே படத்துக்கு வரிவிலக்கு கொடுத்தது தவறு-நீதிமன்றத்தி்ல் வழக்கு தாக்கல்..!

‘மான் கராத்தே’ படத்திற்கு தியேட்டரில் கூட்டமே இல்லை என்கிறார்கள். ஆனால் படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்கிறது தயாரிப்பாளர் தரப்பு. நேற்றைக்கு ‘மாஸ் ஹிட்’ என்று மிகப் பெரிய போஸ்டர் அடித்து சென்னை முழுவதும் ஒட்டியிருந்தார்கள்.

இந்த நிலையில் ‘இந்தப் படத்திற்கு வரிவிலக்கு அளித்ததே தவறு. அதனைத் திரும்பப் பெற வேண்டும்’ என்று சொல்லி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஐ.ஜெயசீலன் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தன்னுடைய மனுவில், “எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘மான் கராத்தே’ படத்திற்கு வரிவிலக்கு அளித்து வணிகவரித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தப் படத்தை கடந்த 6-ம் தேதி தியேட்டரில் பார்த்தேன்.

இந்தப் படத்தில் மது குடிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும்விதமாக ஒரு ஆங்கில பாடல் இடம் பெற்றுள்ளது. மேலும், ‘நாள் முழுவதும் டாஸ்மாக் கடையைத் திறந்து வைத்திருக்க வேண்டும்’ என்றும், ‘தேசிய நெடுஞ்சாலையில் திருட்டுத்தனமாக மதுபானம் விற்க வேண்டும்’ என்றும் அந்தப் படத்தின் கதாநாயகன் கோரிக்கை விடுவது போன்றெல்லாம் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இப்படிப்பட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ள இந்தப் படத்திற்கு தமிழக அரசு எப்படி வரிவிலக்குஅளித்தது என்று எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம் ஏற்பட்டது. இந்த விஷயத்தில் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளதாகத் தெரிகிறது.

தமிழ் மொழி மற்றும் தமிழ்க் கலாச்சாரத்தை வளர்க்கும் கதை இருக்க வேண்டும். படத்தின் தலைப்பு தமிழில் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளின் அடிப்படையில் சினிமா படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

ஆனால் ‘மான் கராத்தே’ என்ற தலைப்பில் ‘கராத்தே’ என்பது ஜப்பான் மொழியாகும். மேலும் இந்தப் படத்தில் மது குடிப்பதை ஊக்குவிக்கும்விதமான பாடல் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.  எனவே, இந்தப் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்து தமிழக அரசு கடந்த 4-ம் தேதி பிறப்பித்துள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும்..” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள் மனு மீதான விசாரணையை வரும் ஏப்ரல் 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

இந்த வரிவிலக்கு என்பதே கேலிக்கூத்தான விஷயமாக இருக்கிறது. தமிழ் வார்த்தைகள் தலைப்பில் இருக்க வேண்டும் என்று சொல்லி.. கடைசியாக வீட்டில் புழங்கும் வார்த்தைகளாக இருந்தாலும் போதும் என்று சொல்லி விதிமுறையை தளர்த்திவிட்டார்கள்.

குடிப்பழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்லி மது ஒழிப்பு பிரச்சாரம் செய்யும் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்றுத்தான் மத்திய அரசு சென்சார் போர்டுக்கு மது ஒழிப்பு பிரச்சாரங்களை சினிமாவில் காட்டப்பட வேண்டும் என்ற விதிமுறையை வகுத்துக் கொடுத்தது..

அப்படியிருந்தும் ‘எழுத்துதானே.. போட்டுட்டா போச்சு?’ என்று அலட்சியமாகச் சொல்லிய திரையுலகப் படைப்பாளிகள் இன்றைக்கு தங்களது அனைத்து படங்களிலும் டாஸ்மாக் கடைகளைக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

‘மான் கராத்தே’வில் இடம் பெற்றிருக்கும் “Open The Tasmac” என்ற இந்தப் பாடல் காட்சியில் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் கதாசிரியரும், தயாரிப்பாளருமான ஏ.ஆர்.முருகதாஸ் இருவருமே கெஸ்ட் ரோலில் காட்சியளித்திருப்பார்கள். அவர்களுக்கே அது முக்கியமான பாடலாகத் தெரிந்திருக்கிறது.. என்னே தமிழர்கள்..?

அந்தப் பாடல் காட்சியும், பாடலும் தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத்தை வளர்க்கிறது என்று படம் பார்த்த வரிவிலக்கு அளிக்கும் தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள் நினைத்திருக்கலாம்.. அதனால் சர்டிபிகேட் கொடுத்திருக்கலாம். கவனிக்க.. இதில் சர்டிபிகேட் தரும் தகுதியுள்ள ஒரு சில ஆர்வலர்களுக்கும், அறிஞர்களுக்கும் தமிழ் மொழியில் எழுதவோ, படிக்கவோ தெரியாது என்பதுதான் ஒரு விசித்திரமான உண்மை.

இந்த வழக்கில் கிடைக்கவிருக்கும் நீதி, தமிழ்ச் சினிமாக்காரர்களை அடக்கி வைக்குமா அல்லது ஆட வைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!

Our Score