விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால், ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் திரு.ராகுல் உடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார். மற்றும் டி கம்பெனி நிறுவனத்தின் திரு. கே.வி.துரை இணை தயாரிப்பு செய்கிறார்.
நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பியா ருத்ரா, கதையின் நாயகனாக அறிமுகமாகுகிறார். ருத்ரா முன்னதாக விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தில் தயாரிப்பு நிர்வாகப் பணிகளிலும், கிரியேட்டிவ் டீமிலும் பணி புரிந்துள்ளார்.
பாலிவுட் நடிகை மிதிலா பால்கர் கதாநாயகியாக இப்படம் மூலம் தமிழ்த் துறையில் கால் பதிக்கிறார். நெட்ஃபிக்ஸ் சீரிஸான ‘லிட்டில் திங்ஸ்’ மற்றும் ‘கர்வான்’ மற்றும் ‘திரிபங்கா’ போன்ற படங்களின் மூலம் பாலிவுட்டில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவர் மிதிலா என்பது குறிப்பிடத்தக்கது.
‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ மற்றும் ‘முதல் நீ முடிவும் நீ’ ஆகிய படங்களில் அற்புதமான இசையைத் தந்த தர்புகா சிவா ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்திற்கு இசையமைக்கிறார். ‘அச்சம் என்பது மடமையடா’ முதல் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த, டேனி ரேமண்ட் ஒளிப்பதிவு செய்கிறார். பிரணவ்.R படத் தொகுப்பு பணிகளை கவனிக்க, ராஜேஷ் கலை இயக்கம் செய்கிறார்.
அமேசான் பிரைமில் மிகவும் பிரபலமான ‘மாடர்ன் லவ் சென்னை’ என்ற வெப் சீரிஸுக்காக ‘காதல் என்பது கண்ணுலே ஹார்ட் இருக்குற எமோஜி’ எபிஸோடை இயக்கிய, முன்னணி விளம்பரப் பட இயக்குநரும், குணச்சித்திரக் கலைஞருமான கிருஷ்ணகுமார் ராம்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார்.
காதல் கதைகளில் இது ஒரு வித்தியாசமான திரைப்படம்.
சினிமாவில் உதவி இயக்குநரான அஸ்வின் என்ற ருத்ரா தன் வாழ்நாள் லட்சியமாக ஒரு படத்தை இயக்கி இயக்குநராக வேண்டும் என்பதைக் கொண்டவர்.
நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கதை சொல்வதற்காக செல்கிறார் ருத்ரா. அவர் சொல்லும் இரண்டு கதைகளுமே விஷ்ணு விஷாலுக்கு பிடிக்கவில்லை. ஆகவே “புதிய கதை இருந்தால் சொல்லுங்கள்” என்கிறார் விஷ்ணு விஷால்.
ருத்ரா எப்படியாவது இந்த வாய்ப்பை கைப்பற்றிவிட வேண்டும் என்று ஆவலில் தன்னுடைய சொந்த காதல் கதையைச் சொல்கிறார். அந்தக் கதை விஷ்ணு விஷாலுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. “இந்தக் கதையையே நாம் படமாக எடுக்கலாம்…” என்கிறார்.
ஆனால், “இப்போது கதை இடைவேளையோடு அப்படியே நிற்கிறது. அதற்கு மேல் நகர வாய்ப்பில்லையே…” என்கிறார் ருத்ரா. ஆனால், விஷ்ணு விஷாலோ, “கண்டிப்பாக இந்தக் கதை அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர வேண்டும். அது நகர்ந்தால் மட்டும்தான் இந்தப் படத்தை எடுக்க முடியும். உனக்கு ஒரு நல்ல சான்ஸ் கிடைத்திருக்கிறது. அதை மிஸ் பண்ணிராத. அதனால் உன்னுடைய பழைய காதலியை தேடிச் சென்று பார்த்து… அதன் பின்பு என்ன நடந்தது என்பதை மறுபடியும் வந்து சொன்னால் அது படமாக உருவாக்கப்படும். நான் கண்டிப்பாக நடிக்கிறேன். நீயும் இயக்குநராக இந்த தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிவிடலாம்…” என்று அட்வைஸ் செய்கிறார்.
யோசித்துப் பார்த்த ருத்ராவுக்கு தன் வாழ்நாள் இலட்சியத்தை அடைய… இதைவிட ஒரு சிறந்த சந்தர்ப்பம் தனக்கு வேறு எப்போதும் கிடைக்காது என்று தெரிந்து கொள்கிறார்.
அதனால் வேறு வழியில்லாமல் தன்னிடமிருந்து பிரிந்து போன தன்னுடைய காதலியைத் தேடி மணிப்பாலுக்கு பயணமாகிறார்.
அவர் அங்கே காதலியை சந்தித்தாரா…? அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்தார்களா?.. இந்தக் காதல் கதை படமாக்கப்பட்டதா..? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.
நடிகர் விஷ்ணு விஷாலின் சித்தப்பா மகனான ருத்ராதான் இந்தப் படத்தில் நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார்.
முதல் படம் என்றாலும் அது தெரியாதது போலவே மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார். பள்ளி காதல், கல்லூரி காதல், அதன் பின்பு இப்போது ஒரு இளைஞனாக வாய்ப்பு தேடும் இயக்குநராக நடித்திருக்கிறார். அந்த மூன்றுவித காலங்களுக்கும் ஏற்ப அவருடைய உடல் அமைப்பும், உருவமும் பொருந்திப் போகிறது.
பள்ளிக் காதல் தோற்று, கல்லூரிக் காதலும் தோற்று… அதன் பின்பு அடுத்தக் காதல் கல்யாணத்தை நோக்கி நகரும்பொழுது தன்னுடைய முட்டாள்தனமான அதீத முன் கோபத்தினாலும் தன்னை பற்றி மட்டுமே சிந்தித்து அடுத்தவர்களை பற்றி சிந்தித்துக்கூட பார்க்காத தன்னுடைய அடிப்படை குணத்தினாலும் காதலை இழக்கும்பொழுது ஒரு பெரும் சோகத்தை தன் நடிப்பில் காண்பித்து இருக்கிறார் ஹீரோ.
நாயகியிடம் கோபத்தில் கொதித்து பேசும்பொழுது இப்படி ஒரு முட்டாப் பயலுக்கு இப்படி ஒரு காதல் தேவையா என்று நாமே சொல்ல முடிகிறது. தன்னுடைய முட்டாள்தனமான முன் கோபத்தை அவர் உணர்ந்து அது செய்தது தவறு என்பதை உணர்ந்து மீண்டும் காதலியை தேடி சென்று பார்த்து அதில் பல்பு வாங்கி சோகத்துடன் சென்னை திரும்பும் காட்சிகளில் எல்லாம் அவரை வெகுவாக ரசிக்கலாம்.
நாயகி மிதிலா உண்மையில் ஹீரோவுக்கு அக்கா மாதிரிதான் தெரிகிறார். படத்திலும் நாயகிக்கு நாயகனைவிடவும் மூன்று வயது அதிகம் என்று வசனத்தில் வைத்து அதை சமாளித்து இருக்கிறார்கள்.
மிதிலாவின் நடிப்பும் படத்திற்கு ஒரு பக்க பலமாக அமைந்திருக்கிறது. தன்னுடைய மாமாவின் கோப குணம் காரணமாகவே தனக்கு ஒரு ஆறுதல் தேவை என்கின்ற நிலையில் ருத்ராவின் காதலை ஏற்றுக் கொள்ளும் நாயகி… ஹீரோவிடம் இருந்தும் மறுபடியும் அதே போன்ற ஒரு கோப குணத்தை சந்திக்கும்பொழுது அவர் காட்டுகின்ற ஏமாற்றமும், விரக்தியும், எரிச்சலும் அவருடைய நடிப்பில் வெளிப்பட்டு உண்மையில் நம்முடைய பரிதாபத்தை பெற்றுக் கொண்டார் மிதிலா.
நடிகர் விஷ்ணு விஷால் அவராகவே நடித்திருக்கிறார். கதை கேட்கும் சூழலில் அவர் என்னென்ன செய்வார் என்பதை அவருக்கு தெரியாமலேயே இங்கே வெளிப்படுத்தி காட்டிவிட்டார். இதைப் பார்க்கும் புதிய இளம் இயக்குநர்கள் விஷ்ணு விஷாலிடம் எப்படி கதை சொல்லலாம் என்று பிளான் செய்து கொண்டு அவரை சந்திக்க வருவார்கள்.
பள்ளி தோழியாக நடித்திருக்கும் திவ்யா ஒரு மாடர்ன் கேளாக வந்திருக்கிறார் நடித்திருக்கிறார். குறைந்த காட்சிகள் என்றாலும் தன்னுடைய அழகால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
ருத்ராவின் அம்மாவாக கஸ்தூரியும், அப்பாவாக விஜயசாரதியும், சித்தப்பாவாக கருணாகரனும் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய சாரதி இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.
ஜோதிடத்தில் முழு நம்பிக்கை கொண்டு ஜோதிடம் என்ன சொல்கிறதோ அதைத்தான் பின்பற்றுவேன் என்று அடம் பிடிக்கும் அப்பாவான விஜய்சாரதி, அந்த கண்டிப்பும் தோரணையும் கலந்த தோற்றமுமாக இருக்கிறார். ஒரு புதிய அப்பா என்ற தமிழ் சினிமாவுக்கு சொல்லவும் வைத்திருக்கிறார்.
ஜோதிட பிரியர் கணவர், அதற்கு நேர் எதிர்ப்பதமாக மகன்… இவர்கள் இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் அம்மாவாக கஸ்தூரி… தன்னுடைய நடிப்பை சரியாக காண்பித்து இருக்கிறார்.
இன்னமும் திருமணம் ஆகாமல் இருந்தாலும் தன்னுடைய அண்ணன் மகனுக்காக உயிரையும் கொடுக்கும் சித்தப்பாவாக நடித்திருக்கும் கருணாகரனின் நடிப்பும் நமக்கு மிகவும் பிடித்துப் போகிறது.
இயக்குநர் மிஷ்கின் தன்னுடைய படப்பிடிப்பில் எப்படி இருப்பார் என்பதை அவர் அறியாமலேயே அவரை வைத்து படமாக்கி வித்தியாசமான ஒரு திரைக்கதையில் நம்மைக் கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார்.
ஒளிப்பதிவு செய்திருக்கும் ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு ஒரு வண்ணமயமான தோற்றத்தை நமக்கு கொடுத்திருக்கிறது. அவ்வளவு அழகான ஒளிப்பதிவில் திரையில் வரும் அத்தனை நட்சத்திரங்களும் மிக அழகாக நம் கண்களுக்கு தெரிகிறார்கள். பாடல் காட்சிகள் கேமராவின் வித்தையினால் நமக்கு புதிதாக தோன்றுகிறது.
ஜென் மார்ட்டினின் இசையில் பாடல்கள் ஒரு முறை மட்டுமே கேட்கும் ரகம் என்பதாக வந்திருக்கிறது.
விளம்பரப் படங்களை இயக்கிய இயக்குநரான கிருஷ்ணகுமார் ராம்குமார் அதனுடைய பாதிப்பிலேயே இந்தப் படத்தின் பல காட்சிகளை ரத்தின சுருக்கமாகவும், துண்டு துண்டாகவும் எடுத்தாலும் அதை அழகாக கத்தரித்து படத் தொகுப்பாளர் உதவியோடு ஒரு தேர்ந்த சினிமாவாக இந்தப் படத்தை கொடுத்திருக்கிறார்.
ஒவ்வொரு காட்சியையும் காதல், காதல், காதல் என்று சொல்வது போல நினைத்து… இழைத்து இப்போது ரசிகர்களுக்கு பிடித்தமான வகையில் கொடுத்து இருக்கிறார் இயக்குநர்.
படத்தின் முதல் பாதி மிக அழகாக ரன் வேகத்தில் செல்கிறது. பள்ளி காதலும், கல்லூரி காதலும் முடிவு பெறும்போது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்தானே என்று நம்மை நினைக்க வைத்தாலும் இப்படியொரு காதல் எல்லாம் இந்த வயதில் தேவையா என்று நாம் கேட்கும் கேள்வியையும் இந்தப் படம் எதிர்கொள்கிறது.
இடைவேளைக்குப் பின்பு மணிப்பால் சென்று நாயகியைத் தேடி கண்டுபிடித்து பேசும் பொழுது இந்தர் கதை எப்படி சினிமாவுக்கு செட் ஆகும் என்று நமக்கு நாமே கேட்டுக் கொள்வது போல திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார் இயக்குநர்.
நாயகனும், நாயகியும் சேர்ந்தால்தான் இந்தப் படம் எடுக்கப்படும் என்கின்ற சூழல் இருப்பதால் இவர்கள் இருவரும் இணைவார்களா.. இல்லையா… என்கின்ற ஒரு கேள்வியும் ரசிகர்களிடத்தில் ஏற்படுகிறது.
காதலர்களுக்குள் ஈகோ பார்க்காமல் சின்ன சின்ன விட்டுக் கொடுத்தல்களும், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதும், ஒருவரின் பிரச்சனைகளை மற்றொருவர் தோலில் தூக்கி சுமப்பதும், இன்னொருவரின் துயரத்திலும், சோகத்திலும் பங்கு எடுத்துக் கொள்வதும்தான் உண்மையான காதலுக்கான அடையாளம்.
அந்த அடையாளத்தை காதலர்கள் அனைவருமே வைத்திருந்தால் மட்டும்தான் அந்தக் காதல் நிச்சயம் ஜெயிக்கும். அதைத்தான் இந்த திரைப்படத்திலும் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறார்.
இளைஞர்களை கவரக் கூடிய வகையில் படத்தை எடுத்து இருக்கிறோம் என்று இயக்குநர் சொன்னாலும் உதட்டுடன் உதடு வைக்கும் முத்த காட்சிகள் தேவையா என்ற கேள்வியும் நமக்குள் எழுகிறது.
அது தியேட்டருக்கு வரும் சிறியவர்களின் மன நிலையை குழப்பத்தில் கொண்டு போய் விட்டு விடும் என்பதால் அந்தக் காட்சிகளை முற்றாக நீக்கியிருக்கலாம்.
மற்றபடி இத்திரைப்படம் காதலர்களுக்கானது..
காதலர்களின் கொண்டாட்டத்திற்கானது…
நிச்சயம் கொண்டாடுவார்கள்..!
RATING : 3.5 / 5
 
 
                                                                     
     
                                                             
                                
 
  
  
 







