ஓடு ராஜா ஓடு – சினிமா விமர்சனம்

ஓடு ராஜா ஓடு – சினிமா விமர்சனம்

இத்திரைப்படத்தை விஜய் மூலன் டாக்கீஸ் மற்றும் கேண்டில் லைட் புரொடெக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம், நாசர், லட்சுமி பிரியா, ஆனந்த் சாமி, ஆஷிகா சால்வன், வினோத், ரவீந்திர விஜய், வெங்கடேஷ் ஹரிநாதன், கே.எஸ்.அபிஷேக், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் மற்றும் தீபக் பாகா ஆகியோரும் நடித்துள்ளனர்.

புகைப்படம் – ஜதின் சங்கர் ராஜ், படத் தொகுப்பு – நிஷாந்த் ரவீந்திரன், இசை – தோஷ் நந்தா, ஒலி வடிவமைப்பு – விஜய் ரத்தினம், ஏ.எம்.ரஹ்மத்துல்லா, திரைக்கதை – நிஷாந்த் ரவீந்திரன், தயாரிப்பாளர் – விஜய் மூலன், விநியோக நிறுவனம் – விஜய் மூலன் டால்கீஸ் மற்றும் கேண்டில் லைட் ப்ரொடக்ஷன்ஸ், எழுத்து, இயக்கம் – ஜதின், நிஷாந்த்.

எழுத்தாளரான குரு சோமசுந்தரம் இப்போது வீட்டில் வெட்டி ஆபீஸர். கதை எழுதுவதாக சொல்லிக் கொண்டேயிருக்கிறார். இவருடைய மனைவியான லட்சுமி பிரியா நர்ஸ் வேலை பார்த்து இவரையும் காப்பாற்றி வருகிறார். வீட்டிற்கு செட்டப் பாக்ஸ் வாங்கி வரும்படி சொல்லி குருவிடம் பணத்தைக் கொடுத்து அனுப்பி வைக்கிறார் லட்சுமி.

குரு தனது நண்பனும் கஞ்சா வியாபாரியுமான ஆனந்த்சாமியை அழைத்துக் கொண்டு செட்டப் பாக்ஸ் வாங்க வருகிறார். அப்போது அங்கே வரும் கஞ்சா மொத்த வியாபாரியான கஜபதி, ஆனந்த்சாமி கொடுக்க வேண்டிய பணத்துக்காக குருவிடம் இருந்த செட்டப் பாக்ஸூக்கான பணத்தைப் பறிமுதல் செய்கிறார்.

இந்தக் கோபத்தில் கஜபதியை அடிக்கப் போகும் குரு எதிர்பாராமல் தானே கார் பேனட்டில் மோதி மயக்கமடைகிறார். குருவையும், ஆனந்த்சாமியையும் அழைத்துக் கொண்டு பெரிய பாஸ் தீபக்கிடம் வருகிறார் கஜபதி.

இன்னொரு பக்கம் ஊரில் கட்டப் பஞ்சாயத்து, அடிதடி, வெட்டுக்குத்தில் முன்னணியில் இருக்கிறார்கள் சாருஹாசனின் மகன்களான நாசரும், வெங்கடேஷும். இவர்களுக்கு எதிரணியில் இருக்கிறார் தீபக். இதனால் தீபக் மீது கொலை வெறியில் இருக்கிறார் வெங்கடேஷ். ஆனால் நாசரோ தன் தந்தையான சாருஹாசனுக்கு அவரது சாகும்தருவாயில் கொடுத்த வாக்குப்படி அடிதடி, வெட்டுக் குத்தையெல்லாம் கைவிட்டுவிட்டு நல்ல பிள்ளையாகும்படி அட்வைஸ் செய்கிறார்.

நாசர் செய்த ஒரு கொலைக்காக குற்றத்தை தான் ஏற்றுக் கொண்டு ஜெயிலுக்குப் போயிருக்கிறார் ரவீந்திர விஜய். இப்போது ஐந்தாண்டுகள் கழித்து சிறையில் இருந்து வெளியில் வருகிறார். இவருடைய நீண்ட நாள் காதலி ஆஷிகா.

இவருடைய நெருங்கிய நண்பனான அபிஷேக்கின் பாதுகாப்பில் ஆஷிகா இருந்தாலும் இருவருக்கும் தகாத உறவு உண்டு. ரவீந்திர விஜய் சிறையில் இருந்து வரும்போதே தான் சிறைக்குச் செல்ல காரணமான நாசரைக் கடத்தி அதன் மூலமாக பெரும் தொகையை அவரது மனைவியிடமிருந்து பெற்று அத்தொகையைக் கொண்டு ஒரு ரெஸ்ட்டாரெண்ட்டை விலைக்கு வாங்கி வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்பதுதான்.

வினு ஜான் லோக்கலில் இருக்கும் ஏழையான சின்னப் பையன்களையும், பொண்ணுகளையும் வைத்துக் கொண்டு திருட்டு, பிச்சையெடுத்தல் என்று சின்னதாக பிஸினஸ் செய்து வருகிறார். இவருடன் சேரவே மாட்டேன் என்று ஒற்றைக் காலில் நின்று கொண்டிருக்கிறார்கள் பேபி ஹரிணியும், மாஸ்டர் ராகுலும்.

தீபக் குருவிடம் பணம் அடங்கிய பையைக் கொடுத்து அதனை அண்ணா நகரில் இருக்கும் அங்கம்மாவிடம் கொடுத்து அவர் கொடுக்கும் கஞ்சாவை வாங்கி வரும்படி சொல்லியனுப்புகிறார். ஆனால் இவர்கள் அங்கம்மா வீட்டுக்குள் வருவதற்குள் அங்கம்மா ஓவர் டோஸால் இறந்து போகிறார்.

வீட்டுக் கதவைத் திறக்காததால் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது பேபி ஹரிணி இவர்களிடத்தில் வந்து பேச்சை வளர்த்தபடியே பின் சீ்ட்டில் இருந்த பணம் அடங்கிய பெட்டியை திருடிச் செல்கிறாள்.

பணப் பெட்டி காணாமல் போனதால் பயந்து போன குருவும், ஆனந்த்சாமியும் பெட்டியைத் தேடி அலைகிறார்கள். போனவர்கள் வரவில்லையே என்றெண்ணி தீபக்கின் அடியாளான கஜபதி தன் ஆட்களோடு இவர்களைத் தேடியலைகிறான்.

நாசரைக் கடத்த நினைத்த ரவீந்திர விஜய், தவறுதலாக நாசரின் வீட்டில் வேலை செய்யும் அவருடைய அப்பாவான அருண்மொழியைக் கடத்திவிடுகிறான்.

பெட்டியைத் தேடுவதற்காக ஐடியா கேட்க நாசரின் வீட்டுக்கு குருவும், ஆனந்த்சாமியும் வரும்போது தவறுதலாக கீழே விழும் நாசர் மயக்கமடைகிறார். அவர் இறந்துவிட்டாரோ என்றெண்ணி அவரது தங்களது காரின் டிக்கியில் போட்டுக் கொண்டு அலைகிறார்கள் குருவும், ஆனந்த்சாமியும்.

தன்னுடைய அப்பாவை கடத்தி வைத்துக் கொண்டு நாசரை கடத்தியதாக நினைத்துக் கொண்டு நாசரின் தம்பியுடன் பேரம் பேசுகிறார் ரவீந்திர விஜய்.

பணப் பெட்டியை திருடிய ஹரிணியின் தோழனை தாங்கள் வந்த காரில் மோதி கொல்கிறார் நாசரின் தம்பி. இதனால் அவர் மீது கொலை வெறியில் இருக்கிறாள் ஹரிணி.

இவர்கள் அனைவரும் தத்தமது ஆபரேஷனை முடிப்பதற்காக நாசரின் வீட்டுக்கு வந்து குவிகிறார்கள். இதையடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் ஏதோ ஒருவித வித்தியாசமான மேக்கிங்கில் படம் முழுவதையும் பார்க்க வைத்திருக்கிறார்கள்.

அதே சமயம் இப்போதைய தீவிர சினிமா ஆர்வலர்களுக்கும் பிடிக்கும்வகையில் இல்லீகல் செக்ஸ் வகையறாக்களையும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தும்போது அவர்களுக்கு ஒரு முன்னுரையாக ஒரு பட்டப் பெயரைச் சூட்டியிருக்கிறார்கள். அதுவும் வித்தியாசமாக இருக்கிறது. பெயரிலும் தவறாமல் எழுத்துப் பிழையை வேண்டுமென்றே செய்திருக்கிறார்கள்.

குரு சோமசுந்தரம் அப்பாவி எழுத்தாளனாக, மனைவிக்குப் பயப்படும் கணவனாக ஒரு செட்டப் பாக்ஸினால் தனது வாழ்க்கை ஒரே நாளில் தலைகீழாக மாறும் என்று எதிர்பார்க்காத ஒரு மனிதனாக பதற்றத்தோடு நடித்திருக்கிறார். லட்சுமி பிரியாவை நினைத்து பயந்தாலும் அவர் கர்ப்பிணி என்று தெரிந்தவுடன் காட்டும் ரியாக்ஷன்களின்போதுதான் பழைய ஜோக்கர் மக்கள் ஜனாதிபதியை பார்க்க முடிந்தது..!

லட்சுமி பிரியா சந்திரமெளலி அமைதியான மனைவியாகவும், பொங்கி எழும் காவேரியாக சில காட்சிகளிலும், கடைசியாக தனது சோகத்தை பகிர்ந்து கொள்ள ஒருவன் சிக்கினானே என்றெண்ணி பக்கத்து வீட்டுக்காரனிடம் பேச துவங்க.. அவன் வாழ்க்கையில் பங்குபோட வந்த பின்பு சீற்றத்தைக் காட்டிவிட்டும் மறைகிறார்.

இன்னொரு அழகு அறிமுகம்.. மலையாள தேசத்தில் இருந்து வந்திருக்கும் ஆஷிகா செல்வன். அவர் அடிக்கடி லாலி பாப்பை சுவைப்பது போன்ற காட்சிகள்கூட ஒரு குறியீடுதான் போல.. தனது காதலர் ஜெயிலுக்கு போனவுடன் அடுத்து துணைக்கு இருக்கும் ஒருவனையும் காதலனாக்கிக் கொள்ளும் அளவுக்கு தைரியமுள்ளவர். “எனக்கு ரெண்டு பேரையுமே பிடிக்குதே…?!” என்று அழுத்தமாகச் சொல்கிறார். என்ன கேரக்டர் ஸ்கெட்ச்..? கடைசியில் இவரும் இந்த கடத்தல் கூட்டணியில் சேர்ந்து கொள்ள.. எதுவும் தப்பில்லை.. யாரும் இங்கே புத்தனில்லை.. வாய்ப்பு கிடைத்தால் அனைவருமே கெட்டவர்கள்தான் என்பதைத்தான் இந்தக் குடும்பம் காட்டியிருக்கிறது.

நாசரும், அவரது தம்பியாக நடித்தவரும்கூட கவர்ந்திழுக்கும் அளவுக்கு நடித்திருக்கிறார்கள். அவரது தம்பியின் ஓவர் சவுண்டு உடம்புக்கு ஆகாது என்றாலும் எப்போதும் துடிப்புடன் இருப்பவனாக அவரைக் காட்டியிருப்பதன் மூலம் இதைச் சரிக்கட்டியிருக்கிறார் இயக்குநர்.

நாசரின் மனைவி சோனா, ஒவ்வொரு நாள் இரவிலும் பார்ட்டிக்கு சென்று கொண்டேயிருப்பவர். வீட்டில் சமயம் பார்த்து உள்ளே வரும் ஆனந்த்சாமியையும் இழுத்துக் கொள்கிறார்.

இன்னொரு பக்கம் லட்சுமி பிரியாவையும் பக்கத்து வீட்டு பையன் பிராக்கெட் போட முயல்கிறான். இப்படி இந்தப் படத்தில் இருக்கும் பெண்களுக்கெல்லாம் ஏதோ ஒருவகையில் பாலியல் தொடர்பை வைத்திருக்கிறார் இயக்குநர்.

ஆனந்த்சாமி அவ்வப்போது டைமிங் காமெடி செய்திருக்கிறார். கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். வசனங்களைவிடவும் காட்சிப்படுத்தலில்தான் நகைச்சுவை கொஞ்சம் தெறிக்கிறது.

பேபி ஹரிணி கடைசியாக செய்யும் ஒரு குற்றம் படத்தின் தன்மையையே மாற்றிவிட்டது. அதுவரையிலும் நகைச்சுவை கலந்த படமாக இருந்தது கடைசியில் இதுவொரு அவார்டு படம் என்கிற நிலைமைக்குக் கொண்டு போய்விட்டுவிட்டது. ஆனால் அந்தத் துப்பாக்கிச் சூடு எதிர்பாராதது.. ஒரு பெப்பை கடைசி நிமிடத்தில் ரசிகர்களுக்குள் ஏற்றி விட்டது என்பது உண்மைதான்.

மேரியின் காதலனாக நடித்திருப்பவரும் அவரது உதவியாளரும்கூட இயல்பாகவே நடித்திருக்கிறார்கள். கடைசிவரையிலும் தன்னுடைய தந்தை என்று தெரியாமலேயே தாக்கு தாக்கென்று தாக்குவதும், கடைசியில் உண்மை தெரிந்து ஐயோ அப்பா என்று கீழே விழும் காட்சியிலும் அந்த வன்முறையையும் தாண்டி சிரிக்க வைத்திருக்கிறார்.

அதேபோல் நாசரை கடத்தி வைத்திருப்பதாகச் சொல்லி நாசரின் மனைவி சோனாவுக்கும், நாசரின் தம்பிக்கும் போனை போட்டு அவர்களிடத்தில் எதிர்பாராத பதிலை பெற்று அதிர்ச்சியாகும் காட்சிகளில் இவர்கள் மூவரும் பதறி நம்மை சிரிக்க வைக்கிறார்கள்.

முன்னாள் ஹீரோயின் சிம்ரனின் திடீர் அறிமுகம் திகைக்க வைக்கிறது. அதோடு இவரது கணவரான தீபக்கும் ஒரு வில்லனாக நடித்திருக்கிறார். கொஞ்சம் தேறிவிடுவார் போலிருக்கிறது. அடுத்தடுத்த படங்கள் அமைய வாழ்த்துகிறோம்..!

படமே வேறு மாதிரியான படம் என்பதை ஒளிப்பதிவுகூட சொல்லிக் காட்டியிருக்கிறது. காட்சிக்குக் காட்சி கேமிரா கோணங்களிலும், ஒளிப்பதிவிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள். இதேபோல் படத்தின் பாடல்களைவிடவும் பின்னணி இசையில் முக்கியத்துவம் கொடுத்து இசையை அமைத்திருக்கிறார்கள்.

அடிக்கடி ஒலிக்கும் தாதா மியூஸிக்கும், ஹரிணி ஓடும்போது ஒலிக்கும் இசையும்.. நாசரின் வீட்டுக்குள் நடக்கும் குழப்பத்திற்கிடையில் நடக்கும் ரகளைக்கான இசையும் கம்பீரமாய் ஒலித்திருக்கின்றன.

படத்தின் திரைக்கதையை மிகவும் கச்சிதமாக எழுதியிருக்கிறார்கள் இயக்குநர்கள். ஒரு கோலி குண்டினால் ஏற்படும் பிரச்சினையாக துவங்கி கடைசிவரையிலும் அந்த லின்க்கை தொடர்ந்து கொண்டு சென்று கொஞ்சமும் லாஜிக் தவறுகள் இல்லாதவண்ணம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார்கள் இரட்டை இயக்குநர்களான நிஷாந்த் ரவீந்திரன், மற்றும் ஜதின் சங்கர் ராஜ்.

“கணவன் மனைவி இருவருக்குள்ளும் எப்போதும் சண்டை. ஆனால் அவர்கள் எந்தச் சந்தர்ப்பத்தில் பிரிவார்கள் தெரியுமா…?” என்றொரு கேள்வியை புத்திசாலித்தனமான இடத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள் இயக்குநர்கள். “அவங்க எப்பவும் பிரிய மாட்டாங்க..” என்று லட்சுமி பிரியா சொல்லும்போதுதான் படம் நமக்கும் ஒரு நிறைவைத் தருகிறது..!

‘ஏ’ சர்டிபிகேட் கிடைத்திருக்க வேண்டியது என்றாலும் மயிரிழையில் தப்பி படத்தைத் தியேட்டருக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!

பாலியல் தொடர்பான காட்சிகள் மற்றும் கேரக்டர் ஸ்கெட்ச்சுகளை மட்டும் நீக்கிவிட்டு அல்லது வேறு நல்லவிதமாக மாற்றி அமைத்திருந்தால் படத்தினை இன்னமும் நெருக்கமாக ரசித்திருக்கலாம்..! இயக்குநர்கள் அடுத்தடுத்த படங்களில் இது பற்றி சிந்திக்க வேண்டும்..!

வித்தியாசமான ஒரு திரைக்கதையில் அட்டகாசமான இயக்கத்தில் ஒரு சிறந்த பொழுது போக்கு படமாக இத்திரைப்படம் வந்திருக்கிறது. நிச்சயமாக இந்தப் படத்தைப் பார்க்கலாம்..! கொடுத்த காசுக்கு தேறும் என்று உறுதியளிக்கிறோம்..!

Our Score