full screen background image

எழுத்தாளர் ஞாநியின் தோற்றத்தில் சத்யராஜ் நடிக்கும் ‘நோட்டா’ திரைப்படம்…!

எழுத்தாளர் ஞாநியின் தோற்றத்தில் சத்யராஜ் நடிக்கும் ‘நோட்டா’ திரைப்படம்…!

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படம் ‘நோட்டா.’

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று இரவு சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஹோட்டலில் விமரிசையாக நடைபெற்றது.

இந்த விழாவில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மெஹ்ரீன், நடிகர் சத்யராஜ், படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர், ஒளிப்பதிவாளர் சாந்தா ரவி.கே. சந்திரன், இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., கலை இயக்குநர் கிரண், படத் தொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா, உடை வடிவமைப்பாளர் ஷ்ராவ்யா சர்மா என படத்தில் பணியாற்றும் தொழில் நுட்ப கலைஞர்களும், தயாரிப்பாளர் ஷிபு தமின்ஸ், முன்னணி இயக்குநர்கள் பா. இரஞ்சித், எஸ்.எம்.எஸ்.ராஜேஷ், டீகே, ஷாந்தகுமார், விஜய் வரதராஜ், சந்தோஷ் பி.ஜெயக்குமார் ஆகியவர்களுடன் பிரபல விநியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

nottaa movie press meet

இயக்குநர் பா. இரஞ்சித் பேசுகையில், “ஸ்டூடியோ கிரீன் என்ற பட நிறுவனத்தின் ஆதரவால்தான் என் திரையுலக பயணத்தைத் தொடங்கினேன். இந்நிறுவனம் தயாரித்த ‘மெட்ராஸ்’ என்ற படம்தான் எனக்கான பாதையை தெளிவுப்படுத்தியது.

அதே போல் இப்போது உருவாகவிருக்கும் இந்த ‘நோட்டா’ படமும் தமிழ்ச் சினிமாவில் மிக முக்கியமான படமாக இருக்கும். ஏனெனில், படத்தின் பெயரிலேயே அரசியல் இருக்கிறது. இயக்குநர் ஆனந்த் சங்கரின் பங்களிப்பு பெரிய அளவில் இருக்கும் என்று நம்புகிறேன்.

இன்றைக்கு சினிமாவில் கதை சொல்வது எவ்வளவு முக்கியமோ, அதே போல் கதைக்குள் அரசியல் இருப்பதும் முக்கியமாகிறது. ஏனெனில் இந்திய சூழலில் தமிழ் சூழலில் இருப்பவர்கள் மட்டும்தான் அரசியல் சார்ந்து சிந்தித்து, செயல்படும் இளைஞர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.

pa.ranjith

இன்றைய இளைஞர்கள்தான் எந்தவித அரசியலில் சார்ந்து இருக்கிறோம். எந்தவித அரசியலை முன்னெடுக்கிறோம் என்பதை பற்றியெல்லாம் பொதுவெளியில் விவாதிக்கிறார்கள். ஆனால் எந்த அரசியல் சரியானது என்ற தெளிவு மட்டும் கிடைக்கவில்லை. அதை நாம் பின்பற்றும் சித்தாந்தங்கள் சொல்லிக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன். 

தேர்தல் அரசியல் மற்றும் ஓட்டு அரசியலில் எனக்கு பெரிதாக நம்பிக்கையில்லை. ஏனெனில் இந்திய சூழலில் இயந்திர ஓட்டுப்பதிவு என்பது நம்பிக்கைக்குரியதாக இல்லை என்பது என்னுடைய கணிப்பு. இது குறித்த அச்சம் என்னுள் இருக்கிறது.

ஒரு செல்போனை ஹேக் செய்து அதிலுள்ள தகவல்களை திருடலாம் என்ற நிலை இருக்கும் போது, எலக்ட்ரானிக் இயந்திரம் மூலம் நடைபெறும் வாக்கு பதிவு என்பது எவ்வளவு தூரம் உண்மையானதாகவும், நம்பிக்கைக்குரியதாகவும் இருக்கும் என்ற சொல்ல முடியாது. அத்துடன் ஒரு அச்சத்தையும் இது கொடுக்கிறது.

இதனால் ‘நோட்டா’ என்பது முக்கியமான அதிகாரமாக இருக்கிறது. என்னுடைய சொந்த வாழ்க்கையில்கூட இரண்டு முறை ‘நோட்டா’வினை பயன்படுத்தியிருக்கிறேன். அதே போல் இந்த படம் பெரிய அளவில் ஒரு விவாதத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் தமிழிலும் வெற்றி பெறுவார். ஏனெனில் தமிழர்கள் திறமையை மதிப்பவர்கள். இதற்கு ‘அட்டக்கத்தி’ மற்றும் ‘அருவி’ என பல உதாரணங்களை சொல்லலாம். தமிழ் ரசிகர்களை விஜய் தன்னுடைய நடிப்பு திறனால் திருப்திபடுத்துவார் என நம்புகிறேன்…” என்றார்.

 gnanavelraja

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசுகையில், “ரஜினி சார் அரசியலுக்கு வருவார் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உறுதியாக நினைத்தேன். ரஜினி சார் இரஞ்சித்துடன் இணைந்து ‘கபாலி’ படம் முடித்த பிறகு அரசியலுக்கு வருவார் என்று எண்ணியிருந்தேன். வரவில்லை. தற்போது இரஞ்சித்துடன் இரண்டாவது படம் செய்து முடித்தவுடன் அறிவித்திருக்கிறார். இதுதான் இரஞ்சித்தின் பலம்.

இரஞ்சித் தன்னுடன் யார் பழகினாலும் அவர்களுக்கும் அரசியலின் முக்கியத்துவத்தை பேசி உணர்த்திவிடுவார். என்னைப் பொறுத்தவரை ரஜினியின் அரசியல் பிரவேசத்தின் பின்னணியில் இரஞ்சித்தின் பங்களிப்பு இருக்கிறது என்று உறுதியாக நினைக்கிறேன். ஏனெனில் இரஞ்சித், தான் வாழும் இந்த சமூகத்தின் மீது பெரிதும் நம்பிக்கை கொண்டவர்.

‘இருமுகன்’ படத்தின் டீஸரைப் பார்த்து பிரமித்து போனேன். அதே பிரமிப்பு படத்தைப் பார்க்கும்போதும் இருந்தது. அப்போதே இயக்குநர் ஆனந்த் சங்கரை வைத்து ஒரு படத்தை தயாரிக்கவேண்டும் என்று திட்டமிட்டேன்.

பல முறை சந்திப்பு நடைபெற்றது. நல்லதொரு திரைக்கதை இருந்தால் சொல்லுங்கள். படம் தயாரிப்போம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தேன். அவர் இந்த கதையை என்னிடம் சொல்லி, அதனை எப்படி உருவாக்கப் போகிறேன் என்ற விவரத்தையும் தெரிவித்தபோது நான் வியப்படைந்தேன். பிறகுதான் இந்த படத்தை தொடங்கினோம்.

‘அர்ஜுன் ரெட்டி’ படம் வெளியாகி ஒடிக்கொண்டிருக்கும்போது, அதன் தமிழ் ரீமேக் உரிமையை பாலா வாங்கினார். அதற்குள் அந்த படம் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாயை வசூலித்தது.

இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஹீரோ விஜயின் பர்ஃபாமென்ஸை மீண்டும், மீண்டும் ரசிக்க திரையரங்கத்திற்கு சென்றார்கள். அதனால் அவரை தமிழில் அறிமுகப்படுத்துவதை எங்கள் படநிறுவனம் பெருமிதமாக கருதுகிறது..” என்றார்.

actpr sathyaraj

நடிகர் சத்யராஜ் பேசுகையில், “தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் அப்பா எம்ஜிஆரின் ரசிகன். அதனால் எம்ஜிஆர் ரசிகரின் மகன் தயாரிக்கும் படத்தில் இப்போது நான் முதன்முதலாக நடிக்கிறேன். இயக்குநர் ஆனந்த் சங்கர்,

எழுத்தாளர் கோமல் சுவாமிநாதனின் பேரன். கோமல் சுவாமிநாதன் எழுதி அரங்கேற்றிய ‘கோடுகள் இல்லாத கோலங்கள்’ என்ற நாடகத்தில், சிவக்குமார் அவர்களின் சிபாரிசில் நடித்திருக்கிறேன். அதற்காக அவர் எனக்கு முப்பது ரூபாய் சம்பளமாக கொடுத்தார். அதில் பத்து ரூபாய்க்கு இனிப்பு வாங்கி சிவக்குமார் வீட்டிற்கும், மற்றொரு பத்து ரூபாயை நான் எம்ஜிஆரின் ரசிகன் என்பதால் முகம் தெரியாத ஒருவருக்கு தானமாக கொடுத்துவிட்டேன். மற்றொரு பத்து ரூபாயை என்னுடைய வீட்டில் பிரேம் போட்டு வைத்திருக்கிறேன். இப்போது அவருடைய பேரன் ஆனந்த் சங்கரின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. 

ஒரேயொரு விசயத்தை நான் சொல்லி விடுகிறேன். இந்த ‘நோட்டா’ என்ற தலைப்பை நான் சொல்லவில்லை. அவர்களாகவே யோசித்து வைத்தது. இதைவிட பொருத்தமான கவர்ச்சியான டைட்டிலை வைக்க முடியுமா என தெரியவில்லை.

இந்த படத்தில் நான் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறேன். இந்த படத்தில் நான் பத்திரிக்கையாளர் ஞாநியை போன்ற ஒரு கேரக்டரில் நடிக்கிறேன். இதற்கான கெட்டப் புதிதாக இருக்கிறது. 

நான் இதுவரையிலும் பத்து தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் தெலுங்கை கற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் என்னுடன் தெலுங்கு படத்தில் உள்ள நாயகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் தமிழ் தெரிந்திருக்கிறது. அதனால் படப்பிடிப்பிற்கு இடையே தெலுங்கைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதேபோல் பழைய படங்களில் 75 சதவீதம் கதை. 25 சதவீதம்தான் தொழில் நுட்பம் இருக்கும். இன்று 25 சதவீதம்தான் கதை. 75 சதவீதம் தொழில் நுட்பம் இருக்கிறது. இன்று ஒரு கதையை எப்படி எடுத்துக் காண்பிக்கவிருக்கிறோம் என்பதில்தான் வெற்றி இருக்கிறது. இதில் இயக்குநர் ஆனந்த் சங்கர் ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ என இரண்டு படங்களில் ஏற்கனவே நிரூபித்திருக்கிறார். அந்த வகையில் இந்த இளைய தலைமுறையினருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன்…” என்றார்.

anandh sankar

இயக்குநர் ஆனந்த் சங்கர் பேசுகையில், “தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கதையை நம்பி படமெடுப்பவர் என்பதை என்னுடைய அனுபவத்தால் தெரிந்து கொண்டேன். இவர்களால்தான் படத்தின் பட்ஜெட்டிற்கு ஏற்றாற்போல் பணியாற்ற முடியும்.

அதே போல் நாயகன் விஜய் தேவரகொண்டா, ‘பெள்ளி சூப்புலு’, ‘அர்ஜுன் ரெட்டி’ என வெவ்வேறு ஜானர் படங்களில் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபித்தவர். இவரை போன்றவர்களுக்கு மொழி ஒரு பிரச்சனையேயில்லை. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, இங்கிலீஷ் என எல்லா மொழி படத்திலும் நடிக்கலாம். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி ரசிகர்களும் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டார்கள்.

அதனால் ‘நோட்டா’ படத்தின் மூலம் ஒரு ப்யூர் டிராமாவை தரவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த படத்தை இயக்குகிறேன். இந்த படத்தில் சத்யராஜ் அழுத்தமான கேரக்டரில் நடிக்கிறார். ஹிந்தியில் அமிதாப்பச்சன் ஏற்று நடிக்கும் கேரக்டர் போல் இருக்கும்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ். எனக்கு போன் செய்து ஸ்கிரிப்ட் கேட்டார். அவர் ஸ்கிரிப்ட்டை படித்துவிட்டு பின்னணி இசையை வடிவமைத்து என்னிடம் காட்டினார். இது எனக்கு புது அனுபவமாக இருந்தது.

இந்த கதைக்குள் அரசியல் நுட்பங்கள், அரசியல் நகர்வுகள் அதிகம் இடம் பெற வேண்டும். அதற்கு அரசியல் தெரிந்த ஒரு எழுத்தாளர் வேண்டும் என்று நினைத்தேன். அதனால் இணையத்தில் தொடாந்து எழுதி வரும் எழுத்தாளர் ஷான் கருப்பசாமியின் கதையை தேர்ந்தெடுத்து, அவருடன் விவாதித்து, திரைக்கதை அமைத்தோம்…” என்றார்.

actor vijay devarakonda

நடிகர் விஜய் தேவரகொண்டா பேசுகையில், “பெள்ளி சூப்புலு’ படம் வெளியான பிறகு ஏராளமானவர்கள் என்னிடம் தமிழில் நடிக்குமாறு கேட்டார்கள். ஆனால் நான்தான் மறுத்தேன். ‘அர்ஜுன் ரெட்டி’ வெளியான பிறகும் என்னை தொடர்ந்து தமிழில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அப்போது நான் ‘எனக்கு பொருத்தமான கதை அமைந்தால் நடிக்கிறேன்’ என்று சொன்னேன். 

இயக்குநர் ஆனந்த், என்னை சந்தித்து கதையை சொன்னார். அப்போது நான் தொடர்ந்து இடைவிடாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் திரைக்கதையை கவனித்து கேட்க முடியவில்லை. பிறகு அவரிடம் ‘இந்தக் கதையை வேறு ஒரு சமயத்தில் கேட்கிறேன்’ என்று சொன்னேன். பிறகு சற்று ஒய்வு கிடைத்தவுடன் இந்த கதையை முழுமையாக கேட்டேன். அற்புதமாக இருந்தது. எனக்கு ஏற்ற கதையாகவும் இருந்தது. அதனால் நடிக்க ஒப்புக் கொண்டேன். 

இந்த சமயத்தில் உங்களிடத்தில் ஒரேயொரு வாக்குறுதியை அளிக்கிறேன். இந்த படத்திற்கு நானே தமிழில் டப்பிங் பேசுவேன். அதற்குள் நான் தமிழை கற்றுக் கொள்வேன். என்னுடைய நடிப்பை என்னுடைய குரலில்தான் பார்ப்பீர்கள். தமிழ் ரசிகர்களுக்கு வாழ்த்துகள்…” என்றார்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

Our Score