இயக்குநர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் ஜெயம்ரவியின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நிமிர்ந்து நில்’ திரைப்படத்தின் காலை காட்சி தமிழகத்தில் எந்தத் தியேட்டரிலும் இன்னமும் திரையிடப்படவில்லை. தெலுங்கிலும் வெளியாகவில்லையாம்.
சினிமா வியாபார நுணக்கங்களினால் ஏற்பட்ட கடைசி நேரச் சிக்கல்கள்தான் இதற்குக் காரணம் என்கிறார்கள். படத்தின் தயாரிப்பாளரான கே.எஸ்.சீனிவாசன் பிலிம் சேம்பரின் பொருளாளர். பெரிய தயாரிப்பாளர். அவருடைய படத்துக்கே இந்த நிலைமையா என்கிறார்கள் திரையுலகத்தினர்.
படத்தின் தயாரிப்புச் செலவு 20 கோடி என்றும் இதில் பட விநியோகம் மூலமாகக் கிடைத்துள்ள தொகை 16 கோடிதான் என்பதாலும், 4 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் சூழலில் படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்க தயாரிப்பாளர் தரப்பு திடீரென்று சுணக்கம் காட்டுவதாகவும் விநியோகஸ்தர்கள் தரப்பு சொல்கிறது.
“தமிழில் சுமார் 300 ஸ்கிரீன்களிலும், தெலுங்கில் 400 ஸ்கிரீன்களிலும் இந்தப் படத்தைத் திரையிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில்.. அனைத்து தியேட்டர்களும் படத்துக்காகக் ஆவலுடன் காத்திருக்கும் சூழலில் இப்படி பட வெளியீடு முன் அறிவிப்பின்றி தள்ளி வைக்கப்பட்டிருப்பதால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது” என்கிறார் பிரபல விநியோகஸ்தர் ராமானுஜம்.
படத்தை ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகளில் தயாரிப்பாளர் தரப்பும், விநியோகஸ்தர்கள் தரப்பும் கடும் முயற்சிகள் எடுத்து வருவதாகவும் இன்று இல்லையென்றால், நிச்சயம் நாளை ரிலீஸாகிவிடும் என்று உறுதியாகச் சொல்கிறார்கள் தயாரிப்பாளர் தரப்பினர்.