full screen background image

“எனக்கு நடிப்பே வராது…” – உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

“எனக்கு நடிப்பே வராது…” – உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

மூன்ஷாட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சந்தோஷ் T. குருவில்லா தயாரித்துள்ள திரைப்படம் ‘நிமிர்’.

மலையாளத்தில் சென்ற ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்த நிமிர் திரைப்படம்.

படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாகவும், நமீதா பிரமோத் மற்றும் பார்வதி நாயர் இருவரும் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். மேலும், சமுத்திரக்கனி, இயக்குநர் மகேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை பிரியதர்ஷன் இயக்கியிருக்கிறார்.

வரும் ஜனவரி 26-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா , இன்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் படத்தில் பங்கு கொண்ட கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

nimir audio function

விழாவில் நடிகர் ஜார்ஜ் பேசுகையில், “நான் நாடகத்தில் இருந்து வந்தவன். ‘காஞ்சிவரம்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நாடகத்தில் இருந்து வந்ததால் என் நடிப்பு கொஞ்சம் மிகையாகவும் இருந்தது, பிரியதர்ஷன் சார்தான் யதார்த்தமாக எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்தார்…” என்றார் ஜார்ஜ்.

நடிகை பார்வதி நாயர் பேசுகையில், “இயக்குநர் பிரியதர்ஷன் ஸார் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர். அவர் படத்தில் 2 நொடிகள் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் நடித்திருப்பேன். ஒரு பெரிய குடும்பத்தில் இருந்து வந்தும் இவ்வளவு சாதாரண மனிதராக இருக்கிறார் உதயநிதி. இந்த படத்தில் நான்தான் ஜூனியர், எல்லோருமே என்னைவிட  பெரிய  சாதனையாளர்கள்…” என்றார். 

IMG-20180118-WA0078

“தமிழில் ‘நிமிர்’ எனக்கு 3-வது படம். இந்த படத்தில் ‘எப்போதும் உன் மேல் ஞாபகம்’, ‘நெஞ்சில் மாமழை’ என இரண்டு பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறேன். நான் பிரியதர்ஷன் படத்துக்கு இசையமைக்கிறேன் என சொன்னதை யாருமே நம்பவில்லை…” என்றார் இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத்.

“சில சமயங்களில்’ படத்துக்கு பிறகு பிரியதர்ஷன் சாருடன் இது எனக்கு இரண்டாவது படம். மலையாளத்தில் ஒரிஜினல் படத்தை பார்த்திருந்தாலும், இந்த படத்தை பார்க்கும்போது புதுவிதமாக இருக்கும்” என்றார் நடிகர் சண்முகராஜன்.

IMG-20180118-WA0091

ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் பேசுகையில், “பிரியதர்ஷன் சாருடன் நான் வேலை செய்யும் 4-வது படம் இது. விஜய் நடித்த ‘சந்திரலேகா’ படத்தில் இருந்து நான் சினிமாவில் இருக்கிறேன். பிரியதர்ஷன் சாரின் ‘ஒப்பம்’ படத்தைவிட இன்னும் சிறப்பாக ஒளிப்பதிவு பண்ணனும்னு சார் சொன்னார். உதயநிதியின் தோற்றத்தை அழகாகக் கொண்டு வர நிறைய உழைத்திருக்கிறோம். அனைவருக்கும் அவரது தோற்றம் பிடிக்கும்…” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

“பிரியதர்ஷன் என்னுடைய ஃபேவரைட் இயக்குநர். அவர் இயக்கும் படத்தை தயாரித்தது என்னுடைய அதிர்ஷ்டம். சமுத்திரக்கனி, எம்.எஸ் பாஸ்கர், மகேந்திரன் சார் என எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கருணாகரன் மலையாள சினிமாவிலும் வந்து நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். நாங்கள் மட்டும்தான் சென்னையில் ஆபீஸே இல்லாமல் ஒரு படத்தை முடித்திருக்கிறோம். அந்தளவுக்கு ரெட் ஜெயண்டும், ஃபோர் பிரேம்ஸும் எங்களுக்கு நிறைய உதவி செய்தனர். இனி சென்னையிலும் ஆபீஸ் போட்டு நிறைய படங்களை தயாரிப்போம்…” என்றார் தயாரிப்பாளர் சந்தோஷ் குருவில்லா.

udhayanidhi - samuthirakani

படத்தில் மிக முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் இயக்குநர் சமுத்திரக்கனி பேசுகையில், “இந்த படத்துக்கு பத்து நடிகர்கள் பெயரை பிரியதர்ஷன் சாரிடம் பரிந்துரைத்தேன். அவர்கள் எல்லோரையும் அவர் ‘வேண்டாம்’ என்று மறுத்து விட்டார். ஒரு நாள் அவரே ‘உதயநிதி எப்படி இருப்பார்?’ என்று கேட்டார். அத்தோடு நானும் படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னார். வசனமும் என்னை எழுத சொன்னார். ஆனால் வசனம் நான்  எழுதவில்லை. அவர்தான் உண்மையில் எழுதியிருக்கிறார். பெருந்தன்மையாக என் பெயரை போட்டிருக்கிறார்.

பாலச்சந்தர் மறைவிற்கு பிறகு இன்னொரு குருநாதர் எனக்கு கிடைத்திருக்கிறார். சண்டை காட்சிகளில் ராஜசேகர் மாஸ்டர் என்னையும், உதயநிதியையும் ரொம்பவே கஷ்டப்படுத்தி விட்டார்…” என்றார் சமுத்திரகனி.

நாயகன் உதயநிதி பேசுகையில், “நான் நடித்த படங்கள் எதையும் பிரியதர்ஷன் சார் பார்த்ததில்லை. ஒரு நாள் திடீரென என்னை அழைத்து, ‘நீதான் இந்தப் படத்துல நடிக்கிற…’ என்றார். எனக்கே கொஞ்சம் ஷாக்.

udhayanidhi stalin

இந்தப் படத்தில் பிரியதர்ஷன் சார் சொன்னதை அப்படியே செய்திருக்கிறேன். மகேந்திரன் சார் நான் நடித்த படங்களை பார்த்திருக்கிறேன் என்று சொன்னதும், ‘நிமிர்’ படத்தில் அவருடன் இணைந்து நடித்ததும் எனக்கு பெருமை. ‘தெறி’ படத்துக்கு பிறகு பல படங்களில் நடிக்க அழைத்தும் மறுத்து விட்ட மகேந்திரன் சார், பிரியதர்ஷன் படத்தில் நடித்தே தீருவேன் என நடிக்க வந்தார்.

சமுத்திரக்கனி சாருடன் 3 நாட்கள் ரொம்ப கஷ்டப்பட்டு புரண்டு சண்டை போட்டது மறக்க முடியாத அனுபவம். யாரையெல்லாம் நடிக்க வைக்கலாம் என பிரியதர்ஷன் சாருக்கு உதவியாக இருந்தார் சமுத்திரக்கனி. அவரே வசனமும் எழுதியிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் எனக்கு ரொம்ப ஆதரவாக இருந்தார். நான் நடித்த படங்களிலேயே மிகவும் அழகான  காட்சியமைப்புகள் இந்த படத்தில்தான். எனக்ககு நடிப்ருபே வராது. படத்தில் எனக்கும் கருணாகரனுக்கும்தான் நடிப்பில் போட்டி. எம்.எஸ்.பாஸ்கர் இயக்குநர் போதும் என்றாலும் ஒன் மோர் கேட்பவர். அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

படம் முடிந்த பிறகு முதல் காட்சியை பார்த்துவிட்டு, ‘அடுத்த படத்தில் ஒரு கேரக்டர் ரோல் இருந்தால்கூட கூப்பிடுங்க ஸார். கண்டிப்பா நடிக்க வரேன்’ என்று அவரிடம் சொன்னேன்…” என்றார் நாயகன் உதயநிதி ஸ்டாலின்.

priyadarshan

இயக்குநர் பிரியதர்ஷன் பேசுகையில், “தமிழில் இது என்னுடைய 7-வது படம். 36 நாட்களில் படத்தை ஒரே கட்டமாக முடித்து விட்டோம், படம் சிறப்பாக வந்திருக்கிறது…” என்றார் இயக்குநர் பிரியதர்ஷன்.

விழாவில் ரெட் ஜெயண்ட் அர்ஜூன் துரை, நடிகர்கள் கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், நாயகி நமீதா பிரமோத், சண்டை பயிற்சியாளர் ராஜசேகர், சோனி மியூசிக் அசோக் பர்வாணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

Our Score