full screen background image

என்.ஜி.கே. (நந்த கோபாலன் குமரன்) – சினிமா விமர்சனம்

என்.ஜி.கே. (நந்த கோபாலன் குமரன்) – சினிமா விமர்சனம்

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனமும், ரிலையன்ஸ் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.

இந்தப் படத்தில் சூர்யா நாயகனாக நடித்திருக்கிறார். நாயகிகளாக சாய் பல்லவியும், ரகுல் ப்ரீத் சிங்கும் நடித்துள்ளனர். மேலும் பாலாசிங், உமா பத்மநாபன், நிழல்கள் ரவி, இளவரசு, பொன்வண்ணன், வேல.ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சிவக்குமார் விஜயன், இசை – யுவன் சங்கர் ராஜா, பாடல்கள் – கபிலன், விக்னேஷ் சிவன், உமாதேவி, படத் தொகுப்பு – கே.எல்.பிரவீன், கலை இயக்கம் – ஆர்.கே.விஜய் முருகன், சண்டை இயக்கம் – அனல் அரசு, நடன இயக்கம் – கல்யாண், உடைகள் வடிவமைப்பு – பெருமாள் செல்வம், உடை அலங்காரம் – நீரஜா கோனா, வி.எஃப்.எக்ஸ் – ஹரிஹரசுதன், ஒலிப்பதிவு வடிவமைப்பு – சச்சின், ஹரி, இறுதிக் கலவை – எம்.ஆர்.ராஜகிருஷ்ணன், கலரிஸ்ட் – ராஜசேகர், ஸ்டில்ஸ் – வி.சிற்றரசு, ஒப்பனை – வி.ராஜா, தயாரிப்பு நிர்வாகம் – பி.எஸ்.ராஜேந்திரன், இணை தயாரிப்பு – அரவிந்த்ராஜ் பாஸ்கரன், தயாரிப்பாளர்கள் – எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, எழுத்து, இயக்கம் – செல்வராகவன்.

நந்த கோபால குமரன் என்னும் சூர்யா திருவில்லிப்புத்தூரில் வசிக்கும் ஒரு சாமான்யர். ஐ.டி. துறையில் எம்.டெக். படித்து அதற்கும் மேல் டாக்டரேட்டும் செய்து மிகப் பெரிய நிறுவனத்தில் கை நிறைய காசை அள்ளிக் கொண்டிருந்தவர்.

திடீரென்று ஒரு நாள் அவருடைய அறிவு மேம்பட சொந்த ஊரில் வந்து விவசாயம் செய்யலாம் என்று நினைத்து லட்சங்களில் சம்பளம் கிடைத்த அந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு வந்துவிட்டார். காதல் மனைவி சாய் பல்லவி. அம்மா உமா பத்மநாபன், அப்பாவான ரிட்டையர்டு மிலிட்டரி கர்னலான நிழல்கள் ரவியுடன் கூட்டுக் குடித்தனம் நடத்தி வருகிறார்.

சூர்யா முன்னிறுத்தும் ஆர்கானிக் விவசாயத்தினால் அந்த ஊர் உர விற்பனையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அதோடு உரம் வாங்குவதற்காக கந்து வட்டிக்குப் பணம் கொடுத்து பிஸினஸ் செய்யும் சிறு தொழிலதிபர்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

இதனை சூர்யாவிடம் வந்து பக்குவாய் எடுத்துச் சொல்கிறார்கள். ஆனால் சூர்யா கேட்காமல் போக.. அவருடைய நண்பர்களின் வயல்வெளிகளை எரிக்கிறார்கள் கந்து வட்டிக்காரர்கள். நிலத்தில் பயிரிட்டவை தீயில் எரிந்து மடிகின்றன. சூர்யாவின் வீட்டையும் தாக்குகிறார்கள். அவருடைய நண்பர்களின் வீட்டையும் தாக்குகிறார்கள் குண்டர்கள்.

இவர்களைச் சமாளிக்க லோக்கல் எம்.எல்.ஏ.வான இளவரசுவை அணுகுகிறார் சூர்யா. சூர்யாவுக்கு உதவி செய்யும் இளவரசு, பதிலுக்கு அவரையும், அவருடன் இருக்கும் 500 இளைஞர்களையும் தனது கட்சிக்கு அழைக்கிறார். சூர்யாவும் இதற்கு ஒத்துக் கொள்கிறார்.

ஒரே ஒரு போன் கால் மூலமாக ஒரு ரவுடித்தனத்தைத் தடுத்து நிறுத்த முடியுமென்றால் இனிமேல் நமக்கு அரசியல்தான் சரி என்று அரசியல் களத்தில் காலெடி எடுத்து வைக்கிறார் சூர்யா. முதலில் எம்.எல்.ஏ. இளவரசுவுக்கு எடுபுடியாய் தன் பணியைத் துவக்கும் சூர்யாவுக்கு அரசியல் நெளிவு, சுளிவுகளெல்லாம் கொஞ்சம், கொஞ்சமாய் தெரிய வருகிறது.

காலப்போக்கில் தன் கட்சியின் தலைமைக்கே சவால் விடும்வகையில் சூர்யாவின் அரசியல் நடவடிக்கைகள் அமைந்துவிட.. அவரையே தீர்த்துக் கட்டும் வேலைகளும் நடக்கின்றன. சூர்யா அதையும் மீறி முதலமைச்சர் பதவிக்குக் குறி வைக்கிறார். அது நிறைவேறியதா.. இல்லையா… என்பதுதான் இந்தப் படத்தின் மீதி திரைக்கதை.

சூர்யாவின் நடிப்புக்கு இது மிக, மிக வித்தியாசமான படம்தான். முற்றிலும் மாறுபட்ட இயக்கத்தில் சூர்யா நடித்திருப்பது அவர் வரும் காட்சிகளிலெல்லாம் தெரிகிறது.

இத்தனை கஷ்டப்பட்டு முகத்தில் நடிப்பை வரவழைத்து வசனங்களை கடித்துத் துப்பி, உச்சரிக்கும் புது ஸ்டைலில் நிறையவே கஷ்டப்பட்டிருக்கிறார் சூர்யா.

ராகுல் பிரீத் சிங்கை முதன்முதலாய் சந்திக்கும்போது சட்டென்று பணிவு காட்டுவதுபோல கைகளைக் கட்டிக் கொண்டு குனிந்து அவர் காட்டும் பவ்யம்தான் படத்தில் இருக்கும் ஒரேயொரு கைதட்டலை பெற்ற காட்சி. அக்மார்க் சூர்யாவின் மேனரிசம் அதுதான். படத்தில் இதையே கடைசிவரையிலும் கொண்டு போயிருக்கலாம்.

ஆனால், இடையிடையே சூர்யாவின் கேரக்டர் ஸ்கெட்ச்சை குழப்புவதுபோல திரைக்கதை அமைத்திருப்பதால் சூர்யாவின் நடிப்பை ரசிக்கும்படி வெளிக்கொணர முடியல்லை இயக்குநர் செல்வராகவனால்.

கிளைமாக்ஸில் மேடையில் அவர் காட்டும் ஆவேச நடிப்பினால்தான் படம் எதைப் பற்றியது என்பதை கொஞ்சமாவது பார்வையாளருக்கு உணர்த்தியது. மனைவியிடம் அவர் காட்டும் நெருக்கம். சாய் பல்லவி காட்டும் கோபத்தின்போது செய்யும் சமரசம்.. ராகுலிடம் மோதும் காட்சிகள் என்று சிலவற்றில் மட்டுமே பழைய சூர்யாவை ரசிக்கும்படி பார்க்க முடிந்திருக்கிறது. மற்றவைகள் செல்வராகவனுக்காக செய்திருக்கிறார் போலும்.

சாய் பல்லவியை வைத்து அழகான காதலைக் கொடுக்க நினைக்காமல் குடும்பக் காவியமாக மாற்றியிருக்கிறார் செல்வா. சென்ட் வாடை பிடித்து அவர் சந்தேகப்படும் காட்சியும், ராகுல் ப்ரீத் சிங்கிடம் அவர் போடும் சக்களத்தி சண்டை காட்சியும் திரைக்கதைக்கு தேவையில்லாதது என்பதோடு ஓவர் ஆக்ட்டிங் வகையில் இருப்பதால் ரசிக்கவே முடியவில்லை. சாய் பல்லவிக்கு இத்திரைப்படம் ஒரு கரும் புள்ளிதான்.

ராகுலின் அறிமுகக் காட்சியே ஜோர். அத்தனை ஸ்டைலாக அமர்ந்து கொண்டு இளவரசுவை வாட்டி வதைக்கின்ற காட்சியில் நிஜமாகவே ஸ்கோர் செய்திருக்கிறார். தான் ஒரு கார்ப்பரேட் சூறாவளி என்பதை கடைசிவரையிலும் தன்னுடைய உடல் மொழியிலேயே காட்டுகிறார் ராகுல்.

இந்த ஈர்ப்பினாலேயே சூர்யா மீது அவருக்குள் ஏற்படும் காதலை நாசூக்காகச் சொல்வது இயல்பாக இருந்தாலும், அதற்கும் ஒரு டூயட் வைத்து கொதி நீர் ஊற்றி அணைத்துவிட்டார் இயக்குநர் செல்வா.

செல்வாவுக்கு என்னதான் ஆச்சு என்று விசாரிக்கும் அளவுக்கு இருக்கிறது அவருடைய இயக்கத் திறமை. அனைத்து கதாபாத்திரங்களையுமே ஏதோ நடிக்கத் தெரியாதவர்கள் என்று நினைத்து வேலை வாங்கியிருப்பதால், மற்ற அனைவரின் நடிப்பும் ஏதோ வலிந்து வரவழைக்கப்பட்டது போலவே தெரிவது நமது துரதிருஷ்டம்தான்.

இத்தனை டைட் குளோஸப் ஷாட்டுக்களை சீரியல்களில்கூட அதிகமாக பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் செல்வா இத்திரைப்படத்தில் தொடர்ச்சியாக அனைத்து கதாபாத்திரங்களுக்கும் பயன்படுத்தியிருக்கிறார். இதுவே கொடுமையாக இருக்கிறது.

உமா பத்மநாபன் நல்ல நடிகைதான். அவரை இயல்பாக நடிக்க வைத்திருந்தாலே மிக அழகாக இருந்திருக்கும். ஆனால் தனது ஸ்டைலில் இருக்க வேண்டும் என்று சொல்லி இயக்குநர் அவரை வறுத்தெடுத்திருக்கிறார் போலும்..! முடியலை… சில காட்சிகளில் அவருடைய அழுகைக்கான காரணமே இல்லை. ஆனால் தேவையில்லாமல் அழுக வைத்து, அந்தக் காட்சிகளே சிதைந்து போயிருக்கிறது.

இதேபோல்தான் இளவரசுவின் நடிப்பும். மனிதர் இயல்பாகவே வெள்ளந்தியாக பேசக் கூடியவர். இவரையும் தன் ஸ்டைலில் பேச வைத்து இழுத்து, இழுத்து கொடுமைப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

பாலாசிங்கின் கேரக்டர் ஸ்கெட்ச் உண்மையானது. ஒரு அப்பாவியான தொண்டனின் கதையைச் சொல்லும் இவரையும் தனது பாணி இயக்கத்திற்குள் தள்ளிவிட்டதால் இவரையும் ரசிக்க முடியாமல்போய்விட்டது.

படத்தில் ஆறுதலான ஒரே விஷயம் சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவுதான். துவக்கக் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் அவருடைய திறமையினால் ஏதோ ஒரு மாயவுலக படத்தைப் பார்க்கும் அனுபவத்தை இத்திரைப்படம் கொடுத்திருக்கிறது. பாத்ரூமில் நடக்கும் சண்டை காட்சியை படமாக்கியிருக்கும்விதம் அழகோ அழகு. சண்டை இயக்குநருக்கு ஒரு சபாஷ் போடலாம்.

யுவனின் இசையில் பாடல் வரிகள் தெறிக்கின்றன. தெளிவாகக் கேட்கின்றன. என்றாலும் பின்னணி இசைதான் அத்தனை சத்தங்களை கொடுத்து காதைக் கிழித்திருக்கிறது.

முதலமைச்சர் வேடத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி போலவே இருக்க வேண்டும் என்றெண்ணி கன்னட தேவராஜை தேடிப் பிடித்து அழைத்து வந்திருக்கிறார். அமைச்சர் ஜெயக்குமாரின் குழந்தை பிறப்பு காமெடியை வைத்து ஒரு டிராஜடி செய்திருக்கிறார்கள். எம்.எல்.ஏ.க்கள் ரயில் பயணத்தில் செய்யும் அலம்பல்களையும் அப்பட்டமாக்கியிருக்கிறார்கள். ஆளும் கட்சி, எதிர்க்கட்சியின் ரகசியக் கூட்டணியையும் சொல்லியிருக்கிறார்கள்.

படத்தின் பிற்பாதியில் எடுக்கப்பட்ட பல காட்சிகளை இணைக்காமல் விட்டதினால் படத்தின் முடிவு சட்டென்று புரியவில்லை. மிக வேகமாக முடிவதைப் போலாகிவிட்டது. பொன்வண்ணன், வேல.ராமமூர்த்தி அண்ட் கோ சூர்யாவுக்கு எதிராக செய்யும் சதி வேலையை தெளிவாகச் சொல்லாமல் விட்டுவிட்டார் இயக்குநர். சில, பல லாஜிக் எல்லை மீறல்களையும் கண்டு கொள்ளாமல் விட்டிருக்கிறார் இயக்குநர் செல்வா.

படத் தொகுப்பாளர் தன்னுடைய டேபிளில் கொடுக்கப்பட்ட வைகளை வைத்து ஏதோ கச்சிதமாக ஒன்றை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் அவருக்கு ஒரு நன்றி.

இதுவரையிலும் எத்தனையோ அரசியல் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அனைத்துமே மிக எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில்தான் தங்களது கருத்தைச் சொல்லியிருக்கின்றன. இதற்கு சமீபத்தில் வெளியான ‘எல்.கே.ஜி.’ படமும் ஒரு உதாரணம்.

ஆனால் செல்வா இந்தத் தளத்திற்குப் புதியவர் என்பதாலும், தன்னுடைய ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்று நினைத்ததாலும் திரைக்கதையில் கோட்டைவிட்டுவிட்டார். சொல்ல வேண்டிய அரசியல் அதிகாரம் பற்றிய விஷயங்களை மேம்போக்காக பேசியிருக்கிறார். சதித் திட்டங்களையும் வெளிப்படையாகப் பேசவில்லை. ஆனால் அரசியல் களத்தில்தான் திரைக்கதை அமைத்திருக்கிறார்.

இருந்தும், இதற்குத் தீர்வாக அவர் சொல்ல வந்த விஷயத்தை சொல்லாமலேயே புதிதாக ஒரு தலைவன் எப்படி உருவாகுகிறான் என்பதை மட்டும் சொல்லியிருக்கிறார்.

ஆக, இதுவொரு அரசியல் படமாகவும் இல்லை.. நாயகனுடைய படமாகவும் இல்லை.. இயக்குநர் செல்வராகவனின் படமாகவும் இல்லை என்பதுதான் சோகமான விஷயம்.

Our Score