full screen background image

“புதிய இயக்குநர்கள் என்னை அணுகலாம்..” – நடிகர் யோகிபாபு அழைப்பு

“புதிய இயக்குநர்கள் என்னை அணுகலாம்..” – நடிகர் யோகிபாபு அழைப்பு

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘பொம்மை நாயகி’.

நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை கதை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் ஷான். கதாநாயகியாக சுபத்ரா நடிக்க, யோகிபாபுவின் மகளாக குழந்தை நட்சத்திரம் ஸ்ரீமதி நடித்துள்ளார்.

இவர்களுடன் ஜி.எம்.குமார், அருள்தாஸ், ‘மெட்ராஸ் ஜானி’ ஹரிகிருஷ்ணன், கே.பி.ஒய்.ஜெயச்சந்திரன், இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி, லில்லி ஜான், ராக்ஸ்டார் ரமணியம்மா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இந்த படத்திற்கு அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கே.செல்வா படத் தொகுப்பை கவனித்துள்ளார். கபிலன், இளைய கம்பன், ஜெயமூர்த்தி, அறிவு ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

வரும் பிப்ரவரி-3-ம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக் குழுவினருடன் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான பா.ரஞ்சித், படத்தின் நாயகன் யோகிபாபு, சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் மாரி செல்வராஜ், அதியன் ஆதிரை, பிராங்க்ளின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் படத்தின் நாயகனான யோகிபாபு பேசும்போது, “இந்தப் படத்தில் இயக்குநர் ஷான் என்னை காமெடி பண்ணவே விடலை. பா.ரஞ்சித்தின் அட்டக்கத்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த சமயத்தில் திடீரென இருபது நாட்கள் கால்ஷீட் கேட்டார்கள். அந்த சமயத்தில் நான் சுந்தர்.சியின் கலகலப்பு படத்திற்காக தேதிகள் கொடுத்திருந்ததால் அந்த வாய்ப்பு மிஸ் ஆனது.

ஆனால் ‘பரியேறும் பெருமாள்’ படம் மூலமாக நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிக்கும் வாய்ப்பை என்னை அழைத்து தந்த இயக்குநர் மாரி செல்வராஜுக்கு நன்றி.

ஒரு அப்பாவின் வலி என்ன என்பதை உணர்த்தும்விதமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக ஒரு அப்பாவாக நானும் அதை உணர்கிறேன். இந்தப் படத்திற்காக இயக்குநர் ஷான் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார்.

சினிமாவில் ஆரம்ப காலத்திலிருந்து எவ்வளவோ அவமானங்களை தாண்டித்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்.. நான் எப்போதுமே காமெடி நடிகன்தான். அதேசமயம் இந்த முகத்தில்கூட ஏதோ ஒன்று தெரிகிறதே என நினைத்து என்னை நம்பி அழைத்தால் நடிக்க தயாராக இருக்கிறேன். தாராளமாக வாங்க…” என்று இளம் படைப்பாளிகளுக்கு அழைப்பு விடுத்தார் யோகிபாபு.

இயக்குநர் ஷான் பேசும்போது, “இந்தப் படத்தின் கதையை எழுதியவுடன் நிறைய பேரிடம் சொல்லவில்லை. சிலரிடம் மட்டும்தான் சொன்னேன். கதையைக் கேட்ட பலரும் இந்த கதையை நீலம் புரொடக்சன்ஸ் மட்டுமே தயாரிக்க முடியும் என்று கூறினார்கள்.

அந்த சமயத்தில்தான் இயக்குநர் பா.ரஞ்சித் தனது உதவி இயக்குனர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிப்பதற்காக தயாரிப்பு நிறுவனம் துவங்கி அதில் பரியேறும் பெருமாள் என்கிற திரைப்படத்தை தயாரித்து வந்தார்.

அப்போதிருந்து அவரை சந்திக்க முயற்சித்து பல வருட காத்திருப்புக்கு பின் ஒரு வழியாக அவரிடம் எனது கதையை கொண்டு சேர்த்தேன். கதையைப் படித்தவர் முதலில் எனது உதவி இயக்குநர்களுக்குத்தான் முன்னுரிமை தருகிறேன். அதனால் வேறு தயாரிப்பாளர்களிடமும்கூட இதை கூறுமாறு என்னிடம் சொன்னார். தேவைப்பட்டால் என்னுடைய உதவி இயக்குநர் என்றுகூட நீ சொல்லிக் கொள் என்று அனுமதியும் அளித்தார்.

அதைக் கேட்டு எனக்கு அவரிடம் பணிபுரியும் உதவி இயக்குநர்கள் மீது பொறாமையாக இருந்தது. இவரிடமே உதவி இயக்குனராக வேலை பார்த்திருக்கலாமோ என்று கூட நினைத்தேன். அவரிடம் அப்போதைக்கு சரி என்று சொன்னாலும் இந்தப் படத்தை நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில்தான் பண்ண வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். ஒருவழியாக என்னுடைய கதையை தயாரிக்க முன் வந்தார் இயக்குநர் பா.ரஞ்சித்.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக யாரை அணுகலாம் என நினைத்தபோது, பரியேறும் பெருமாள் படத்தில் யோகிபாபுவின் நடிப்பை பார்த்துவிட்டு அவரை ஒப்பந்தம் செய்யலாம் என பா.ரஞ்சித்திடம் கூறினேன். யோகிபாபுவை ஒப்பந்தம் செய்யும் பொறுப்பை அவர் என்னிடமே ஒப்படைத்து விட்டார்.

அந்த சமயத்தில் தென்காசியில் ‘கர்ணன்’ படப்பிடிப்பில் இருந்த யோகிபாபுவை நேரில் சந்தித்து இந்த கதையை கூற முயற்சித்தேன். யோகிபாபுவிடம் நான் கதை சொல்ல வேண்டும் என்பதற்காகவே இயக்குநர் மாரி செல்வராஜ், அவருக்கான காட்சிகளை படமாக்காமல் தள்ளி வைத்து யோகிபாபுவின் பொன்னான 3 மணி நேரத்தை எனக்காக ஒதுக்கி தந்தார்.

அதேசமயம் இந்தக் கதையை யோகிபாபுவிடம் சொல்லும்போது நீங்கள்தான் கதையின் நாயகன் என சொன்னதும் முதலில் அவர் தயங்கினார்.. என்னுடைய நல்ல நேரமோ என்னவோ அவரது உதவியாளர், இவர் வைத்திருப்பது சீரியசான கதை என்று சொன்னதுமே ஆர்வமாகி உடனே கதை கேட்டு நடிக்கவும் ஒப்புக் கொண்டார்.

படம் முடிந்துவிட்டாலும் படத்தை பார்க்காமலேயே அதன் மீது யோகிபாபு வைத்திருக்கும் நம்பிக்கைதான் அவர் இந்த நிகழ்வில் தனது பிஸியான நேரத்தையும் ஒதுக்கி கலந்து கொண்டு பொறுமையாக அமர்ந்திருப்பதற்கான காரணம்.

இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க நாங்கள் சரியான ஒருவரை தேடிக் கொண்டிருந்தபோது சூப்பர் சிங்கரில் பாடிக் கொண்டிருந்த ஸ்ரீமதி எங்கள் கண்களில் பட்டார். அவரது தந்தையிடம் சென்று படத்தில் நடிக்க அனுமதி கேட்டோம். முதலில் மறுத்தவர் பின்னர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் என்றதும் உடனடியாக ஒப்புக் கொண்டு தனது மகளை நடிக்க சம்மதித்தார்.

சென்சாரில் இந்தப்  படத்தை பார்த்த அதிகாரிகள் இந்தக் கதையை சரியாக கையாண்டு உள்ளீர்கள் என பாராட்டினார்கள். ஒரு தயாரிப்பாளராக பா.ரஞ்சித்தை பொருத்தவரை பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான விஷயங்கள் படத்தில் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். அப்படி இருந்தால் சென்சாருக்கு முன்பாக அவரே அதையெல்லாம் நீக்கிவிடுவார்…” என்றார்.

தயாரிப்பாளரும், இயக்குநருமான பா.ரஞ்சித் பேசும்போது, “இந்தப் படத்திற்கு யோகிபாபுவை அழைத்து நடிக்க வைக்கலாம் என இயக்குநர் ஷான் என்னிடம் கூறியபோது முதலில் தயங்கினேன். காரணம் எனக்கு யோகிபாபுவை பரியேறும் பெருமாள் படம் பார்த்ததிலிருந்து ரொம்பவே பிடித்திருந்தது.

அதேசமயம் பிசியான நடிகர்களின் பின்னால் போய் நிற்பது எனக்கு கொஞ்சம் டென்ஷனான விஷயம். அதனால் யோகிபாபுவிடம் நான் பேச மாட்டேன். அவர் இந்த கதை பிடித்து சம்மதித்து வந்தால் எனக்கு எந்த மறுப்பும் இல்லை என்று ஷானிடம் கூறினேன்.

பரியேறும் பெருமாள் படத்தில் பார்த்த யோகிபாபு கதாபாத்திரத்தின் நீட்சியாகத்தான் இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது. இந்தப் படத்திலும் அதே போல நன்றாக நடித்துள்ளார் யோகிபாபு.

இந்தக் கதையை படிக்க சொன்னபோது பலரும் இந்த படம் குறித்து நெகட்டிவ் ஆகவே என்னிடம் கூறினார்கள். அப்போதே இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்துவிட்டேன்.

இந்தப் படத்தில் முக்கியமான ஒரு பிரச்சனையை கூறினாலும் அதைக் கழிவிரக்கத்துடன் கூறுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. கழிவிரக்கம் பேசாத படமாக இது இருக்க வேண்டும் என விரும்பினேன்.

இரண்டரை வருடங்களுக்கு முன்பு சின்ன படங்களுக்கு ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன. ஆனால், இப்போது சின்ன பட்ஜெட் படங்களை அவ்வளவு எளிதில் ஓடிடியில் விற்க முடியாது. பெரிய படங்களைத்தான் அவர்கள் வாங்குகிறார்கள். எனக்கு கொஞ்சம் பின்புலம் இருப்பதால் ஒடிடியில் வெளியிடுவது எளிதுதான்.

அதேசமயம் நிலைமை அப்படியே மாறி தியேட்டரில் வெளியிடுவதை விட ஓடிடியில் படங்களை வெளியிடுவது கஷ்டம் என ஆகிவிட்டது. அதேபோல சிறிய படங்களுக்கும் மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவதில்லை. ஒடிடியில் வரட்டும் பார்த்து கொள்ளலாம் என்கிற மனப்பான்மை உருவாகிவிட்டது..” என்று கூறினார்.

Our Score