full screen background image

“நல்ல காதல் கதையோடு திரும்பி வந்துள்ளேன்” – ‘நேசிப்பாயா’ படம் பற்றி இயக்குநர் விஷ்ணுவர்த்தன்!

“நல்ல காதல் கதையோடு திரும்பி வந்துள்ளேன்” – ‘நேசிப்பாயா’ படம் பற்றி இயக்குநர் விஷ்ணுவர்த்தன்!

மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் மருமகனுமான ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் ‘நேசிப்பாயா’ படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார்.

ந்தப் படத்தில் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க, பிரபு, சரத்குமார், குஷ்பு, கல்கி கொச்சலின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்.எஸ்.சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இப்படத்தின் இணைத் தயாரிப்பாளராக சினேகா பிரிட்டோ பணியாற்றியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு பிரிட்டிஷ் ஒளிப்பதிவாளர் கேமரோன் பிரைசன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர்பிரசாத் படத் தொகுப்பு செய்ய, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஃபெட்ரிகோ கியூவா சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

இந்த நிலையில், ‘நேசிப்பாயா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.

ஆகாஷ் முரளியின் மனைவியும், தயாரிப்பாளருமான சினேகா பிரிட்டோ கூறுகையில், “ஆகாஷின் நீண்ட நாள் கனவு தான் நடிப்பு, அது எனக்கு ஆரம்பத்திலேயே தெரியும். அதற்காக அவர் நடிப்பு பயிற்சி உள்ளிட்டவைகளில் ஈடுபட்டு தன்னை தயார்ப்படுத்திக் கொண்டார். வேறு ஒரு நிறுவனத்திற்காக அவர் படம் பண்ணுவதாக இருந்தது. ஆனால், அவரை பிடித்துப் போனதால் என் அப்பா நம்ம நிறுவனத்திலேயே பண்ணலாம் என்று சொல்லிவிட்டார்.  நான் ஆகாஷை வைத்து படம் இயக்குவது எதிர்காலத்தில் நடக்கலாம்.” என்றார்.

நாயகன் ஆகாஷ் முரளி தனது முதல் படம் பற்றி கூறுகையில், “நான் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் திட்டம்தான். ஆனால், இடையில் கொரோனா பிரச்சனை வந்ததால், என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது. பிறகு என் திருமணம் நடந்தது. இதனால்தான் சற்று காலதாமதம் ஆனாது.

விஷ்ணு சார் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனக்கு ஆசைதான். ‘அறிந்தும் அறியாமலும்’ படம் போன்ற ஒரு படத்தின் மூலம் அறிமுகமாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், என்னை வைத்து விஷ்ணு சார் படம் பண்ணுவாரா? என்பது கேள்விக்குறியாக இருந்தது. எனக்கும் அது தெரியும். இருந்தாலும் அவரை ஒரு முறை சந்தித்து சாதாரணமாக பேச வேண்டும் என்று முயற்சித்தேன். அப்படித்தான் அவரை சந்தித்தேன், அப்போது என் ஆசையை அவரிடம் சாதாரணமாக சொன்னேன். அப்படித்தான் எங்கள் நட்பு ஆரம்பித்து. இன்று இந்த நேசிப்பாயா’ படம்வரை வந்துள்ளது.” என்றார்.

படத்தின் இயக்குநரான விஷ்ணுவர்தன் படம் குறித்துப் பேசும்போது, “நான் தமிழ்ப் படம் இயக்கி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. எங்கு சென்றாலும், எந்த மாதிரியான படம் இயக்கினாலும் தமிழ்ப் படம் செய்தால் மட்டுமே எனக்கு முழு திருப்தியாக இருக்கிறது, அந்த வகையில் நான் இப்போது இந்த ‘நேசிப்பாயா’ படம் மூலம் தமிழுக்குத் திரும்பி வந்ததில் திருப்தியாக இருக்கிறேன்.

நான் ‘ஷெர்ஷா’ படத்தின் டப்பிங் பணிகளில் பிஸியாக இருந்த போது, ஆகாஷ் மும்பைக்கு வந்து என்னை சந்தித்தார். அப்போது அவரை வைத்து படம் இயக்கும் ஐடியா என்னிடம் இல்லை. நட்பு ரீதியாகவே என்னை அவர் சந்தித்தார். மதிய உணவு சாப்பிட்டு விட்டு ஒரு மணி நேரம் பேசினோம். அந்தச் சந்திப்பை தொடர்ந்து அடிக்கடி அவரை சந்திக்க முடிந்தது. அப்போது அவரை எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது.

ஒருவரை வைத்து படம் இயக்கப் போகிறோம் என்பதையும் தாண்டி, அவருடன் பழகும்போது அவரை நமக்கு பிடித்துவிடும் அல்லவா., அதுபோல்தான் எனக்கு ஆகாஷுடன் பழகப் பழக அவரைப் பிடித்துவிட்டது. ஒரு கட்டத்தில் இவருக்காக ஒரு படம் பண்ணலாமே என்று எனக்கே தோன்றியது. அப்படித்தான் இந்த ‘நேசிப்பாயா’ படமும் துவங்கியது.

இது முழுக்க, முழுக்க காதல் கதை என்றாலும் காதலை மையமாக வைத்துக்கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தக் கூடிய ஒரு திரைக்கதையோடு நல்ல ட்ராமாவாகவும் இருக்கும்.

தற்போதைய காலக்கட்டத்தில் ரசிகர்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள். அவர்களை எண்டர்டெயின்மெண்ட் செய்யவில்லை என்றால், அடுத்ததை நோக்கி எளிதில் நகர்ந்துச் சென்றுவிடுவார்கள். அதனால், காதல் என்பதை ஒரு களமாக வைத்துக் கொண்டு, இளைஞர்களுக்கான ஒரு படமாக மட்டும் இன்றி சினிமா ரசிகர்களுக்கான விறுவிறுப்பான படமாகவும் கொடுத்திருக்கிறேன்.

இந்தக் கதை ஆகாஷ் முரளிக்காக எழுதப்பட்டது அல்ல. இப்படி ஒரு கரு என்னிடம் இருந்தது. வாய்ப்பு கிடைத்தால் இதைப் படமாக பண்ணலாம் என்று நினைத்திருந்தேன். ஆகாஷுக்காக படம் பண்ண முடிவானபோது, ஏன் இந்த கதையை ஆகாஷூக்குப் பண்ணக் கூடாது என்று தோன்றியது. அதனால்தான் இந்தக் கதையை தேர்வு செய்தேன்.

இதற்கு ஆகாஷ் முரளி மிக சரியாக இருந்ததோடு, அவரை எப்படி வேண்டுமானாலும் மாற்றம் செய்யலாம். அதனால் அவருடன் பணியாற்றுவது எனக்கு ஆர்வமாகவும் இருந்தது.

ஆறடி உயரம், கணீர் குரல் என்று அவரை பார்க்கும்போது ரொம்பவும் பர்சனாலிட்டியாக இருப்பார், அதுவே ஒரு நடிகருக்கான முதல் தகுதியாகும். ஆனால், அவருடன் பழகப் பழகத்தான் தெரிந்தது அவர் குழந்தை போன்றவர் என்று..! அது இந்த கதைக்கு ரொம்பவே பொருத்தமாக இருந்தது.

ஆனால், எதிர்காலத்தில் அவரை முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. அதற்கான கதை அமைந்தால் நிச்சயம் மீண்டும் ஆகாஷுடன் இணைவேன்.

‘பில்லா’வுக்குப் பிறகு அஜித் சாருடன் இரண்டு முறை படம் பண்ணுவதாக இருந்து, பண்ண முடியாமல் போய்விட்டது. அதற்காக பெரிய நடிகர்களுடன், பில்லா போன்ற கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே இயக்கினால் ஒரு இயக்குநராக எனக்கு எந்தவித ஆர்வமும் இருக்காது. புதியதாக செய்தால் மட்டுமே என்னால் ஆர்வமாக பணியாற்ற முடியும். அப்படித்தான் ‘ஷெர்ஷா’ படமும் அமைந்தது.

இதுவரையிலும் நான் ராணுவம் தொடர்பான படங்களை இயக்கியதில்லை. அதுவும் வேறு ஒரு மொழியில் அப்படிப்பட்ட படம் பண்ணும்போது எனக்கு அது புதிய அனுபவமாக இருந்தது. அந்த படத்திற்காக நான் மேற்கொண்ட ஆய்வு, படித்தது என அனைத்துமே புதிய அனுபவம். அப்படித்தான் இந்த ‘நேசிப்பாயா’ திரைப்படமும் எனக்கு புதிய அனுபவத்தை கொடுத்தது. அந்த அனுபவம் அப்படியே ரசிகர்களுக்கும் கிடைக்கும்.

இந்த ‘நேசிப்பாயா’ கதை தமிழ்நாட்டில் தொடங்கினாலும், 90 சதவீதம் கதை போர்ச்சுக்கல் நாட்டில்தான் நடக்கிறது. கதைப்படி மொழி தெரியாத ஒரு நாடு தேவை. போர்ச்சுக்கல் நாட்டை இதுவரை யாரும் திரைப்படங்களில் பெரிய அளவில் காட்டவில்லை. அதே சமயம் எங்கள் கதைக்கும், அந்த நாடு சரியாக இருந்ததால், அந்த நாட்டை தேர்வு செய்தோம்.

அதேபோல், ஒளிப்பதிவாளர், ஆக்‌ஷன் இயக்குநர் ஆகியோரது தேதிகள் எனக்கு மொத்தமாகத் தேவைப்பட்டது. ஆரம்பத்தில் ஓம்பிரகாஷ்தான் ஒளிப்பதிவு செய்தார். ஆனால் அவரது தேதிகள் மொத்தமாக கிடைக்காத சூழல் அமைந்ததால், பிரிட்டிஷ் ஒளிப்பதிவாளரான கேமரோன் பிரைசன், ஸ்டண்ட் இயக்குநர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஃபெட்ரிகோ கியூவா ஆகியோர் எங்களுக்கு பக்கத்தில் இருந்ததாலும், நான் எதிர்பார்த்ததுபோல் அவர்களுடைய தேதி மொத்தமாக கிடைத்ததாலும்தான் அவர்களை ஒப்பந்தம் செய்தேன். அவர்களுடைய பணிகள் நிச்சயம் பேசும் வகையில் இருக்கும்.

இந்தப் படத்தில் நடிகை கல்கி கொச்சலின் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்தை எழுதும்போதே அவரை மனதில் வைத்துதான் எழுதினேன். சரத்குமார், பிரபு, குஷ்பு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

சினிமாத்தனம் சுத்தமாக இல்லாதவராக இருந்ததால்தான் அதிதி ஷங்கரை நாயகியாக தேர்வு செய்தேன். மேக்கப் இல்லாமல் அவர் மிகவும் அழகாக இருப்பார். அவருடைய உடல்மொழி, நடிப்பு என அனைத்தும் ஒரு நடிகையாக அல்லாமல் எளிமையான பெண் போல் இருக்கும். அந்த விசயம் படத்திற்கு நன்றாக இருக்கும் என்பதால் அவரை நாயகியாக நடிக்க வைத்தேன்..” என்றார்.

படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

Our Score