full screen background image

மலைவாழ் மக்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் ‘நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க’..!

மலைவாழ் மக்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் ‘நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க’..!

புதுமுகங்களான சிவஹரி ஹீரோவாகவும், அமீதா ஹீரோயினாகவும் நடிக்கும் புதிய படம் ‘நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க’..!

ஒளிப்பதிவு – மஞ்சுநாத், இசை – லராய் C. சர்சன், இயக்கம் – சம்பத்குமார் – ராஜேந்திரன், தயாரிப்பு – சம்பத்குமார், சஞ்சய் காந்தி.

முதல் படம் இயக்கும் இயக்குநர்கள் பலரும் குறிவைப்பது கமர்ஷியலான வெற்றியை மட்டும்தான். ஆனால் வெகு சிலர் மட்டுமே தாங்கள் இத்தனை காலமாக மனதில் சுமந்து கொண்டிருந்த சமூக பாரத்தை, காலம் காலமாக தொடரும் சமூக அவலத்தை தம் முதல் படத்தின் மூலம் வெளியுலகிற்கு தெரிவித்துவிட மாட்டோமா என உள்ளுக்குள் நெருப்பாக கனன்று கொண்டு இருப்பார்கள்.

அப்படிப்பட்ட இரட்டையர்கள்தான் ‘நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் இயக்குநர்களான சம்பத்குமாரும் கோனூர் ராஜேந்திரனும்.

இதில் இயக்குநர் சம்பத்குமார் ‘வெங்காயம்’ படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவர். இவருடைய நண்பரான கோனூர் ராஜேந்திரன் இந்தப் படத்தில் இவருடன் இணைந்து இயக்குநராக மாறியுள்ளார்.

தனது கருத்தை சொல்வதற்கு குறுக்கீடுகள் எதுவும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்தப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் மாறியுள்ளார் இயக்குநர் சம்பத்குமார்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் சம்பத்குமார் பேசும்போது, “நாட்டில் சட்டங்களும் திட்டங்களும் இயற்றப்பட்டுத்தான் இருக்கின்றன. ஆனால் அதை செயல்படுத்துவதில்தான் சிக்கல் நீடிக்கிறது. இதற்கு அரசாங்கத்தை மட்டும் குறை கூறி பயனில்லை.  நாம் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள்தான் என்கிற கருத்தை அழுத்தமாக வலியுறுத்தும் படம் இது.

ஷங்கர் போன்ற இயக்குநர்கள் இந்த உலகின் பிரம்மாண்டத்தை எல்லாம் திரைப்படத்தில் கொண்டுவந்து மகுடம் சூட்டிவிட்டார்கள். அதேபோல சினிமாவின் அடித்தளமும் யதார்த்தமாக, அமையவேண்டும் என்பதுதான் என் விருப்பம். அதுமட்டுமல்ல, சினிமாவால் சமுதாய சீர்கேடுகளை நூறு சதவீதம் சரி செய்ய முடியும் என்பதை நான் ஆணித்தரமாக நம்புகிறேன். அதுதான் என்னுடைய முதல் படமாக இதை துணிந்து எடுக்க காரணம்.

இந்தப் படம் முழுக்க முழுக்க மலையும் மலை சார்ந்த பகுதிகளிலும் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒரு காரணமும் உண்டு. எவ்வளவோ நாகரிக வளர்ச்சிகள் வந்துவிட்டதாக நாம் பீற்றிக் கொண்டாலும்கூட, இன்னும் அடிப்படை வசதிகள்கூட சென்றடையாத மக்கள் எவ்வளவோ பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த மக்களின் அவலத்தைத்தான் அழகான காதல் கதை மூலம் சொல்ல முயற்சித்திருக்கிறோம்.

மலை மீது வசிக்கிறான் மாமன் மகன். மலை அடிவாரத்தில் வசிக்கிறாள் அத்தை மகள். இருவருக்கும் காதல். ஆனால் பெண்ணின் தகப்பனோ, மலை மீது இருக்கும் மாப்பிள்ளைக்கு பெண்ணை தர மாட்டேன் என்று, மலையடிவாரத்திலேயே வசதியான மாப்பிள்ளையாக பார்க்கிறார். இதை மீறி இந்த காதல் கை கூடுவதும், இயற்கை ரூபத்தில் விதி அவர்கள் வாழ்வில் விளையாடுவதும்தான் இந்தப்படத்தின் கதை. இது ஒரு உண்மை சம்பவமும்கூட.

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகாவை சேர்ந்த பாலமலை என்கிற பகுதியில்தான் சுமார் 60 நாட்களாக இதன் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம். அடிவாரத்தில் இருந்து மலையில் நடந்தே சென்று 14 கி.மீ. தூரத்தில் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள். தலைச் சுமையாக படக் குழுவினர் கொண்டுபோன உணவுப் பொருட்கள் வெகு சீக்கிரம் தீர்ந்துவிட்டன.. அதனால் அங்கே மலையில் வசிப்பவர்கள் சமைப்பதையே நாங்களும் சாப்பிட்டு படப்பிடிப்பை நடத்தியது உண்மையிலேயே எங்களுக்கு ஒரு புதுமையான அனுபவம்…” என்கிறார் சம்பத்குமார்.

இந்தப் படத்தில் இடம்பெறும் கிளைமாக்ஸ் பாடலில் இந்த பகுதி மக்கள் படும் அவலங்களை படமாக்கியுள்ளார்கள். இதனால் நெகிழ்ந்து போன அந்த பகுதி மக்கள், எங்களது இத்தனை வருட கஷ்டங்களை சினிமாவாக வெளிக்கொண்டு வருகிறீர்கள் என நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்ததோடு, படக் குழுவினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தாங்களே மனமுவந்து செய்து கொடுத்தார்களாம்.

தற்போது படம் சம்பந்தப்பட்ட வேலைகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். வரும் அக்டோபர் 21-ம் தேதி படத்தினை ரிலீஸ் செய்யும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

Our Score