எஸ்.ஜி.பிலிம் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிப்பில் ஆர்.நாகேந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘நீயெல்லாம் நல்லா வருவடா’.
கடந்த 20 வருடங்களில் சென்னையைத் தவிர மற்ற நகரங்களில் நட்புக்காக கொலை, ஜாதிக்காக கொலை, ரவுடியிசத்துக்காக கொலை, அரசியலுக்காக கொலை என பல நோக்கங்களுக்காக கூலிப் படையை ஏவி கொலை செய்கின்றனர்.
ஆனால், சென்னையில் பணத்துக்காக மட்டுமே கூலிப்படையினர் கொலை செய்கின்றனர். தான் யாரால் எதற்காகக் கொல்லப்படுகிறேன் என்று கொல்லப்படுபவனுக்கும், தான் எதற்காக இன்னொரு உயிரை பலி வாங்குகிறேன் என கொலை செய்பவனுக்கும் தெரிவதில்லை. இது மாதிரியான ஒரு கூலிப் படையினரைப் பற்றிய உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவரும் படமே இந்த ‘நீயெல்லாம் நல்லா வருவடா’.
விமல், சமுத்திரக்கனி, அமிர்தான், பார்பி ஹன்டா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவு என்.கே.ஏகாம்பரம், பாடல்களை முத்துக்குமார், சினேகன், லலிதானந்த் ஆகியோர் எழுதியிருக்கின்றனர். படத் தொகுப்பு பிரவீன் கே.எல். இப்படத்தின் இயக்குனர் ஆர்.நாகேந்திரன், ‘தம்பி, ‘வாழ்த்துகள்’, ‘திருட்டுப் பயலே’, ‘கந்தசாமி’, ‘ஷார்ட் கட் ரோமியோ(இந்தி)’ ஆகிய படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றியவர்.