நீ FOREVER – சினிமா விமர்சனம்
நடிகர்கள் :-
அஜய் – சுதர்சன் கோவிந்த்
மதி – அர்ச்சனா ரவி
ராக்கி – பிராது (பிரதோஷ்)
குக்கி – நோபல் ஜேம்ஸ்
ரேவதி -வித்யா
ஆறுமுகம் – ஒய் ஜி மகேந்திரன்
யோகி – நிழல்கள் ரவி
பிரபாகர்- எம்.ஜே.ஸ்ரீராம்
மகாலட்சுமி – ரெத்திகா ஸ்ரீனிவாஸ் மற்றும் பலர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:-
தயாரிப்பு நிறுவனம்: ஜென் ஸ்டுடியோஸ்
தயாரிப்பாளர்கள்: புகழ் மற்றும் ஈடன்
எழுத்து – இயக்கம்: அசோக்குமார் கலைவாணி
இசை: அஸ்வின் ஹேமந்த்
ஒளிப்பதிவாளர்: ராஜா பட்டாச்சார்ஜி
எடிட்டர்: எஸ்.ஏ.நாகார்ஜுன்
கலை இயக்குனர்: வர்ணாலயா ஜெகதீசன்
ஆடை வடிவமைப்பாளர்: சிந்துஜா அசோக்
ஒப்பனை: கலைவாணி பாலன்
பாடலாசிரியர்: கு.கார்த்திக்
ஒலி வடிவமைப்பு: ஏ.சதீஷ் குமார்
ஒலி கலவை: அரவிந்த் மேனன்
விஎஃப்எக்ஸ்: ஹொகஸ் ஃபோகஸ்
டப்பிங் – டிஐ: வேல்ஸ் டி ஸ்டுடியோஸ் போஸ்ட்
நடனம்: விஜிசதீஷ்
தயாரிப்பு நிர்வாகி: ராகேஷ்
டைரக்ஷன் டீம்: விக்னேஷ் குமார், பி.கே.தினேஷ் பாபு, கார்த்திகேயன், ஹரிஹரசுதன்
கமரா குழு: கௌதம் சேதுராமன், சதீஷ் குமார், சாய்
எடிட் டீம்: ஹரிஹரன்.வி, தனச்செழியன்.எஸ்
பத்திரிக்கை தொடர்பு : எய்ம் சதீஷ்.
போலியாக காதலிப்பது போல் நடிக்கும் இரண்டு பேர் அவர்களை அறியாமலேயே காதலில் விழுந்து எப்படி அந்த காதலை காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் மையக் கரு.
படத்தின் ஹீரோவான சுதர்சன் பொள்ளாச்சியில் இருந்து சென்னை வந்திருக்கிறார். அவருடைய தாத்தாவான ஒய்.ஜி.மகேந்திரன் காதலை கடுமையாக எதிர்ப்பவர். சுதர்சனின் அம்மா இளம் வயதில் காதல் போதையில் நிழல்கள் ரவியுடன் ஓடி போகிறார். ஆனால், அதன் பின்பு வயிற்றில் ஒரு குழந்தையுடனும் கையில் சுதர்சனை வைத்துக் கொண்டு அப்பாவின் வீட்டுக்கு திரும்பி வருந்திருக்கிறார்.
இதனால் அந்த வீட்டில் சுதர்சனின் தாத்தா ஒய்.ஜி.மகேந்திரன் வைத்ததுதான் சட்டம். வீட்டில் எது செய்தாலும் எனக்கு தெரியாமல் எதுவும் செய்யக் கூடாது என்பது தாத்தா ஒய்.ஜி.மகேந்திரனின் கட்டளை.
சுதர்சன் சென்னையில் சிறு மொபைல் அப்ளிகேஷனை உருவாக்கும் வேலையில் தீவிரமாக இருக்கிறார். மேட்ரிமோனி வெப்சைட்டுகள் பல இருந்தாலும் டேட்டிங் செய்வதற்கு என்று தனி அப்ளிகேஷன் இல்லை. அதனால் அது போல ஒன்றை தான் உருவாக்க இருப்பதாக தன்னுடைய நண்பர்களிடம் சொல்கிறார் சுதர்சன்.
அந்த டேட்டிங் அப்ளிகேஷன் எப்படி இருக்க வேண்டும் என்பது கொஞ்சம் குழப்பமாக இருக்க… இதைத் தெரிந்து கொள்வதற்காக யாராவது ஒரு பெண்ணை பார்த்து அவரிடம் காதலிப்பது போல் நடித்து, அவர்கள் என்னை எதிர்பார்க்கிறார்கள் என்பதை உடனே யூகித்துக் கொள்ளலாம். அதன் பின்பு இந்த அப்ளிகேஷனை தொடரலாம் என்று சுதர்சனின் நண்பர்கள் அவரை உசுப்பேற்றி விடுகிறார்கள்.
சுதர்சனும் இதனை நம்பி யாராவது ஒரு பெண்ணை காதலிப்பது போல் நடிக்கலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறார்.
இதே நேரம் ஹீரோயின் அர்ச்சனா ரவி சினிமாவில் துணை இயக்குநர். புதிய படத்திற்குக் கதை சொல்வதற்காக தயாரிப்பாளரை சந்திக்கிறார். அந்த தயாரிப்பாளர் அர்ச்சனாவிடம் “வித்தியாசமான காதல் கதை இருந்தால் சொல்லுங்கள். வேறு எதுவும் வேண்டாம்” என்கிறார்.
“காதலிப்பது போல் நடித்தால் ஹீரோயின் உணர்வுகள் எப்படி இருக்கும்? ஒரு ஆண் நிஜமாக காதலிக்க தொடங்கினால் என்னென்ன செய்வான்? பேசுவான்? எப்படி நடந்து கொள்வான்? என்பதையெல்லாம் கவனித்து அதை தன்னுடைய திரைக்கதையில் எழுதலாம்” என்று நினைக்கிறார் அர்ச்சனா ரவி.
போலியாக காதலிக்கலாம் என்று ஹீரோவும், ஹீரோயினும் காத்துக் கொண்டிருக்க அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திப்பு நிகழ்ந்து அதற்குப் பிறகு காதலும் வளர்கிறது.
உண்மையாகவே அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் உண்மையாக காதலிக்கிறார்களா இல்லையா என்பது படம் பார்க்கும் நமக்கு கடைசிவரையில் தெரியாத அளவுக்கு திரைக்கதை எழுதி இருக்கிறார் இயக்குநர்.
இறுதியில் என்ன நடந்தது? இவர்கள் உண்மையாக காதலித்தார்களா? திருமணம் செய்தார்களா?.. இல்லையா?.. என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
புதுமுகமான சுதர்சன் ஆறடியில் ஆஜானபாகுமான உடலுடன் படத்தில் நடித்திருக்கிறார். புதுமுக நடிகர் என்பதால் அவருடைய நடிப்பை நாம் இங்கே கொத்து புரோட்டா போட தேவையில்லை. இயக்குநரின் கவனிப்பில் தன்னால் முடிந்த அளவுக்கான ஒரு நடிப்பை காண்பித்து இருக்கிறார் ஹீரோ.
படத்தின் துவக்கத்தில் ஒரு அப்பாவியாக காட்சி அளிக்கும் சுதர்சன் போகப் போக தன்னுடைய ப்ரொபஷனலாக இந்த அப்ளிகேஷனை உருவாக்கிவிட வேண்டும் என்று துடிக்கிறார். ஆனால் இறுதியாக தன்னை அறியாமலேயே தான் ஹீரோயினின் காதலில் விழுந்துவிட்டதை அவர் உணரும் தருணத்தில் அவருடைய நடிப்பு சிறப்பாகவே இருக்கிறது. இயக்குநரின் சிறப்பான இயக்கத்தினால் இது நடந்திருக்கிறது என்பதால் இயக்குநரை நம் பாராட்டுவோம்.
ஹீரோயின் அர்ச்சனா ரவியும் தன் பங்குக்கு சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார். முதல் பாதியில் காதல் உண்மையா பொய்யா என்பதுகூட தெரியாமல் ஹீரோவை அலைய விடுவதும் இடைவேளைக்கு பின்பு தான் காதலில் விழுந்துவிட்டதை அவரை உணர்ந்து நாயகனிடம் அதை சொல்லும் பொழுது நமக்கும் ஒரு ஜெர்க்கை தந்திருக்கிறார். அர்ச்சனா ரவி பாடல் காட்சிகளிலும் கொஞ்சம் அழகாக காட்டப்பட்டு இருக்கிறார்.
ஹீரோவின் அம்மாவாக நடித்திருக்கும் ரேவதி, தோல்வி அடைந்த திருமணத்தில் சிக்கிக் கொண்ட ஒரு அவலைப் பெண் கதாபாத்திரத்தை அழகுபட செய்திருக்கிறார். தன்னை அடிக்கடி கிண்டல் செய்யும், குத்திக் காட்டும் தன்னுடைய அப்பாவின் வார்த்தைகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அவர் தவிக்கும் போதும், தன் மகனாவது நன்றாக இருக்கட்டும் என்று நினைத்து மகன் மீது கொட்டுகின்ற பாசத்தின் போதும் ஒரு நல்லதொரு அம்மாவை பார்த்த திருப்தி கிடைத்திருக்கிறது.
ஹீரோவின் அக்காவாக நடித்தவரும், அக்கா கணவராக நடித்தவரும் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
சிறந்த குணச்சித்திர நடிப்பை தன்னுடைய நடிப்பில் கொடுத்திருக்கிறார் தாத்தாவாக நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன். கண்டிப்பான அப்பாவாக இருந்தும் தன்னுடைய மகள் ஓடிப் போனதை ஜீரணிக்க முடியாமல் இருப்பவர் மகள் திரும்பி வந்த பின்பு தான் நினைத்தது நடந்து விட்டது என்ற கர்வத்தில் இனிமேல் இந்த வீட்டில் நான்தான் கிங் என்று சொல்லாமல் சொல்வது போல அவ்வப்பொழுது தன் மகளை திட்டிக் கொண்டே இருக்கும் ஒரு ஆணாதிக்க தன்மையான கேரக்டரை மிகவும் அலட்சியமாக தன்னுடைய பல நீண்ட வருட கால நாடக நடிப்பின் துணையோடு சிறப்பாக நடித்திருக்கிறார் ஒய்.ஜி.மகேந்திரன். அவருக்கு நம்முடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.
இன்னொரு பக்கம் வெறுமனே ஈகோ பிரச்சனையால் பிரிந்து போகும் ஸ்ரீராமும், ரித்திகா ஸ்ரீனிவாசனும் கடைசியில் தங்களுடைய தவறை உணர்ந்து இணையும் இடத்தில் ஒரு அழகான கவிதை போல அவர்களுடைய வாழ்க்கையை திரையில் காட்டி இருக்கிறார் இயக்குநர். இவர்களுடைய நடிப்பும் இந்தப் படத்துக்கு ஒரு பிளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது.
ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜியின் ஒளிப்பதிவு மிகத் தரமாக உள்ளது. படத்தின் முதல் கட்சியிலிருந்து இறுதிவரையிலும் ஒளிப்பதிவில் சிறு பிசிறு தட்டாமல் அட்டகாசமாக படமாக்கி இருக்கிறார்கள். அதோடு பல இடங்களில் கேமரா கோணங்கள் வைத்த விதமும் அருமை. இதனாலேயே படத்தில் நடித்தவர்களின் அருமையான நடிப்பை நம்மால் பார்க்க முடிந்திருக்கிறது.
அஸ்வின் ஹேமந்தின் இசையில் பாடல்கள் திரையில் ஒலித்தன. பாடல் காட்சிகள் வந்து போயின. பின்னணி இசையும் ஒலித்தது. அவ்வளவுதான் மேற்கொண்டு ஸ்பெஷலாக எதுவும் இல்லாதது நமக்கு வருத்தமே!
எடிட்டர் நாகார்ஜுன் கச்சிதமாக படத் தொகுப்பினை செய்து இருக்கிறார். எங்கேயும் அதிகப்படியான காட்சிகளும், நீளமான வசனங்களும் இல்லாமல் இந்தக் கதைக்கும், திரைக்கதைக்கு போதுமான அளவுக்கான படத்தின் நீளம் இருக்கிறது. அந்த வகையில் அழகாக படத்தொகுப்பினை செய்து இருக்கிறார்.
இன்றைய நவீன உலகில் வாழும் இளம் பெண்களின் வாழ்க்கையைக் காட்டுகிறோம் என்ற நினைப்பில் பெண்களும் சிகரெட் பிடிக்கலாம் என்பது போல காட்சிகளை வைத்திருப்பது நிச்சயமாக கண்டிக்கத்தக்கது. இது ஆண்களை போலவே நாமும் வாழ்வோம். இதிலென்ன தவறு என்று கேட்டு வளர்ந்து வரும் பெண் சமூகத்தையும் கெடுப்பதுபோல இருக்கிறது. இதற்காக இயக்குநருக்கு நமது கண்டனங்கள்.
போலியாக காதலித்தாலும் காதல் என்ற உணர்வு அவர்களை அறியாமலேயே அவருடைய மனதில் ஒட்டி விட்டால் அதுதான் உண்மையான காதல் என்பதை இயக்குநர் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்.
அதேபோல் காதல்தான் இந்தப் படத்தின் மையக் கரு என்பதால் அந்தக் காதலை வைத்து அவருடைய குடும்பத்தினர் அனைவரின் பாசத்தையும், அன்பையும், கோபத்தையும் சம்பாதிப்பதுபோல திரைக்கதையை அமைத்து நம் ரசிப்பது போல படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
காதலுக்காக.. காதலர்களுக்காக.. காதலை வாழ வைப்பதற்காக… நல்லதொரு கதையாக்கத்தில் இந்தப் படத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
ஒரு கட்டத்தில் தாத்தாவே இறங்கி வந்து காதலர்களை சேர்த்து வைக்கும்விதமாய் ஏற்றுக் கொள்வதாக சொல்லும் பொழுது உண்மையாக இந்தப் படம் சொல்ல வந்த்தை சொல்லியிருக்கிறது.
அந்த வகையில் காதலர்களுக்காக எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்தால் அவரவர் மனதில் இருக்கும் காதலுக்கான எதிர்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையலாம்.
RATING : 3.5 / 5









