full screen background image

இரு மடங்கு சம்பள உயர்வோடு 6 புதிய படங்களில் ஒப்பந்தம் – நயன்தாராவின் புதிய சாதனை..!

இரு மடங்கு சம்பள உயர்வோடு 6 புதிய படங்களில் ஒப்பந்தம் – நயன்தாராவின் புதிய சாதனை..!

தமிழ்ச் சினிமாவில் நயன்தாராவின் இடத்தைப் பிடிப்பதற்கும், அவரது சம்பள சாதனையை முறியடிப்பதற்கும் கண்ணுக்கெட்டிய தூரம்வரையிலும் ஒரு நடிகைகூட இல்லை என்பதுதான் உண்மை.

2003-ம் ஆண்டு மலையாளத்தில் அறிமுகமாகி 2005-ம் ஆண்டு ‘ஐயா’ என்ற தமிழ்ப் படத்தில் தமிழிலும் அறிமுகமான நயன்தாரா இந்த 18 வருட காலத்தில் ஒரு முறைகூட தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் இறக்கத்தைத் தொடவேயில்லை. எப்போதும் அவருடைய திரையுலக வாழ்க்கை முன்னேற்றத்தில்தான் இருந்து வருகிறது.

இப்போதுவரையிலும் படத்திற்கு 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி மற்றைய நடிகைகள் யாரும் பக்கத்திலேயே வர முடியாத அளவுக்கு உச்சத்தில் இருந்தார் நயன்தாரா. தற்போது அதையும் தாண்டி அவரது சம்பளம் 10 கோடியைத் தொட்டுவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதற்குக் காரணம் ஓடிடி தளத்தில் அவருடைய ‘நெற்றிக்கண்’ திரைப்படம் நினைத்துக்கூட பார்க்காத விலைக்கு விற்பனையாகியிருப்பதுதான்.

கொரிய படமான ‘பிளைண்ட்’என்ற படத்தை தமிழில் ‘நெற்றிக்கண்’ என்ற பெயரில் ரீமேக் செய்திருக்கிறார்கள். இந்தப் படம் கொரோனா லாக் டவுன் காரணமாக தியேட்டருக்கு வராத சூழலில் கடைசியாக ஓடிடியில் போய் நின்றது.

பல ஓடிடி தளங்கள் இந்தப் படத்தை வாங்க ஆர்வம் காட்டியும் படத்தின் தயாரிப்பாளரான நயன்தாரா கேட்ட தொகையைப் பார்த்தவுடன் ஜகா வாங்கிவிட்டன. ஆனாலும் மனம் தளராமல் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பேச்சுவார்த்தை நடத்தி 25 கோடிக்கு படத்தை விற்றிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

எப்படியிருந்தாலும் இந்தப் படத்தின் மூலமாக நயன்தாராவுக்கு 20 கோடி ரூபாய் லாபம் கிடைத்திருக்கிறது. இந்தச் செய்தியை வழக்கம்போல திரையுலகத்திற்குள் கசியவிட.. நயன்தாராவுக்கு 5 கோடி சம்பளம்.. தயாரிப்புச் செலவு 3 கோடி என்று 8 கோடியில் படம் எடுத்து 25 கோடிக்கு விற்றுவிடலாமே என்ற கணக்கில் பல பெரும் முதலாளி தயாரிப்பாளர்கள் நயன்தாராவை உடனடியாக புக் செய்ய ஓடி வந்திருக்கிறார்கள்.

வந்தவர்களிடம் தனது சம்பளம் இப்போது 10 கோடி என்று ஒரே போடாக போட்டுவிட்டாராம் நயன்தாரா. ஒரே படத்தின் மூலம் தனது சம்பளத்தை டபுளாக்கியிருந்தாலும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஓடிடியிலேயே போட்ட முதலீட்டைவிடவும் லாபம் அதிகமாகவே கிடைக்கும் என்பதால் உடனேயே ஓகே சொல்லிவிட்டார்களாம் அந்தத் தயாரிப்பாளர்கள்.

ஒரு படத்திற்கு அல்ல.. அவர்கள் தயாரிக்கும் 2 படங்களுக்கும் தலையாட்டியிருக்கிறார் நயன்தாரா. இதன்படி 3 தயாரிப்பாளர்கள், 2 படங்கள்.. ஆக மொத்தம் 6 திரைப்படங்கள்.. இந்த 6 படங்களுக்கான முன் தொகையாக சம்பளத்தில் பாதியையே இப்போதே பெற்றுவிட்டாராம் நயன்தாரா.

அபிஷேக் பிலிம்ஸ் அபிஷேக், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, தயாரிப்பாளர் ஐசரி வேலன் ஆகியோர்தான் அந்த கோடிகளைக் கொட்டிய தயாரிப்பாளர்கள் என்கிறது திரையுலக வட்டாரம்.

ஆக மொத்தத்தில் 2023-ம் ஆண்டுவரையிலும் நயன்தாராவின் கால்ஷீட் டைரி புல்லாகிவிட்டது. அவரது வங்கி அக்கவுண்ட்டும் நிரம்பி வழிகிறது..!

Our Score