61-வது தேசிய திரைப்பட விருதுகளை இன்று மாலை புதுடெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த வண்ணமயமான விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்ற நட்சத்திரங்களுக்கு வழங்கினார்.
சிறந்த மாநில மொழித் திரைப்படம், சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த பாடலாசிரியர் ஆகிய மூன்று பிரிவுகளில் ராம் இயக்கிய தங்கமீன்கள் படம் விருதுகளை வென்றது. தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமார், குழந்தை நட்சத்திரம் சாதனா, பாடலாசிரியர் நா.முத்துக்குமார் ஆகியோர் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.
சிறந்த மாநில மொழித் திரைப்படத்தை இயக்கியதற்கான விருதை இயக்குநர் ராம் பெற்றுக் கொண்டார். மேலும், தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தியதற்காக பாலுமகேந்திராவின் ‘தலைமுறைகள்’ படத்துக்குக் கிடைத்த விருதை அந்தப் படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சசிகுமார் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பாலுமகேந்திராவின் மனைவி அகிலாவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த படத்தொகுப்பிற்காக ‘வல்லினம்’ படத்தின் படத்தொகுப்பாளர் சாபு ஜோசப் விருதினை பெற்றுக் கொண்டார்.