சின்னத்திரை வரலாற்றில் மிகப் பெரிய வெற்றியை பெற்று சாதனை படைத்து கொண்டிருக்கிறது ‘நந்தினி’ மெகா தொடர்.
சன் தொலைக்காட்சி நிறுவனம், இயக்குநர் சுந்தர்.சி-யின் அவனி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து இந்தத் தொடரை தயாரித்து வருகிறது.
இயக்குநர் சுந்தர்.சியின் கதைக்கு வெங்கட்ராகவன் திரைக்கதை அமைக்க.. பத்ரி கே.என். நடராஜன் வசனம் எழுத, யு.கே. செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த வெற்றி தொடரை பிரபல இயக்குநரும், நடிகருமான ராஜ்கபூர் இயக்கி வருகிறார்.
மெகா தொடர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வழக்கத்தை மாற்றி புதிய கால் தடத்தை பதித்த பெருமை ‘நந்தினி’ தொடரையே சேரும். இந்த தொடர் முழுக்க, முழுக்க சினிமா தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஆவிக்கும், பாம்புக்கும் போட்டி என்றால் விறுவிறுப்பாக இருக்கும். அதனை சுவாரசியமான கதை களத்தில் கொண்டு செல்கிறது இந்த ‘நந்தினி’ தொடர்.
தொடர் ஆரம்பித்த சில வாரங்களிலே நம்பர் ஒன் இடத்தை பிடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது. சின்னத்திரையில் குறுகிய காலத்தில் நந்தினி பெற்ற ஆதரவிற்கு முக்கிய காரணம். அதன் பிரம்மாண்டமும், சினிமா போல் எடுக்கப்பட்டிருக்கும்விதமும்தான்.
இன்று அனைவரும் ‘பாகுபலி’யை பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இரவு 9 மணி ஆகிவிட்டால் அனைவரின் கவனமும் ‘நந்தினி’ தொடரை மிஸ் செய்யாமல் பார்ப்பதில் திரும்பி விடுகிறது. அந்த அளவுக்கு ரசிகர்களை இந்த ‘நந்தினி’ தொடர் கவர்ந்துள்ளது.
இந்த ‘நந்தினி’ தொடருக்காக மலேசியா, மைசூர், கல்லிடைகுறிச்சி, பொள்ளாச்சி, ரிஷிகேஷ் போன்ற இடங்களில் ஷூட்டிங் எடுத்துள்ளனர்.
இப்போது ‘நந்தினி’ தனது 100-வது நாளை வெற்றிகரமாக தொட்டுள்ளது. இதற்காக இந்தத் தொடரில் நடிக்கும் அனைத்து கலைஞர்களும் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்கள்.
அப்போது ‘நந்தினி’ தொடரின் இயக்குநரான ராஜ்கபூர் பேசும்போது, “இந்த ‘நந்தினி’ என்ற பிரம்மாண்டத்தை இயக்குவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
இந்த ‘நந்தினி’ தொடர் இப்போது கன்னடம், தெலுங்கு. தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.
ஒரு எபிசோடு எடுக்க ஒரு வாரத்திற்கு முன்பே முடிவு செய்வோம். இது ஒரு நாளில் செய்யக் கூடியது இல்லை. இரண்டு குழுவாக செயல்பட்டு வருகிறோம். சினிமா போன்றே இங்கேயும் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்கிறார்கள்.
இதில் எங்களது கடுமையான உழைப்பு உள்ளது. மாதத்தில் 25 நாட்கள் வேலை இருக்கும். ஒரு மணி நேரத்தில் எடுத்த காட்சியை கூடுதலாக நேரம் ஒதுக்கி எடிட் செய்வேன்.
இந்தத் தொடரில் கிளாமர் அதிகமாக உள்ளது என்ற விமர்சனம் இருக்கிறது. இப்போதெல்லாம் அதைத்தான் ரசிகர்களும் விரும்புகிறார்கள். அதனால்தான் நாங்களும் கொஞ்சம் வளைந்து கொடுத்திருக்கிறோம். இதனாலேயே இன்றைய இளைஞர்களிடம் நந்தினி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தயாரிப்பாளரும், இயக்குநருமான சுந்தர்.சி தொடரை பார்த்துவிட்டு ஏதாவது மாற்றுக் கருத்து இருந்தால் சில திருத்தங்கள் சொல்வார்.
இந்தத் தொடர் எத்தனை எபிசோடுகள் நீளும் என்று சொல்ல முடியாது. அது ரசிகர்களின் வரவேற்பை பொறுத்தது.
நடிகை குஷ்பூ இந்த தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இன்னும் 2 வாரங்களில் அவருடைய போர்ஷன் துவங்கிவிடும். அதன் பின்பு ‘நந்தினி’ தொடர் இன்னும் பெரிய அளவுக்கு பேசப்படும் என்று நம்புகிறோம். இது மட்டுமில்லாமல் மற்றுமொரு பிரபலமும் இத்தொடரின் முக்கிய பகுதி ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.. அவர் யார் என்பது சஸ்பென்ஸ்..” என்றார்.
தொடரில் நந்தினியாக நடிக்கும் நித்யாராம் பேசும்போது, “முதலில் தமிழ் மற்றும் கன்னடத்தில் ஒரே நேரத்தில் நடிக்கும்போது தயக்கமாக இருந்தது. முதல் நாள் ஷூட்டிங்கில்கூட மிகவும் பயமாக இருந்தது. ஆனால், எந்த ஒரு பயமும் இல்லாமல் சகஜமான மனநிலை இப்போது வந்துவிட்டது.
எனது தாய்மொழி கன்னடம். தற்போது தமிழ் எனக்கு நன்கு பழகிவிட்டது. தற்போது எனக்கு என்னுடைய தாய் மொழியைவிட தமிழில் பேசி, நடிப்பது எனக்கு மிகவும் எளிதாக உள்ளது. இது சினிமாவில் நடிப்பது போன்ற உணர்வைத்தான் தருகிறது.
மேலும் எனது உடை மற்றும் சிகை அலங்காரம் அனைத்தையும் குஷ்பு மேடம்தான் தேர்வு செய்தார்கள். இங்கு வந்து நான் பல விஷயங்கள் கற்றுக்கொண்டேன்.
என்னிடம் பல நாடுகளில் இருந்தும் ரசிகர்கள் தொடர்பு கொண்டு நந்தினி தொடரை பற்றி பேசுகிறார்கள். அது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த புகழ் அனைத்தும் இயக்குநர் ராஜ்கபூர் சார் அவர்களையே சேரும். இந்த தொடரில் நடிப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்…” என்றார் பெருமையோடு..!