full screen background image

நந்தன் – சினிமா விமர்சனம்

நந்தன் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை இரா எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் இரா.சரவணன் தயாரித்துள்ளார்.

படத்தில் சசிகுமார், ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல், ஜி.எம்.குமார், சமுத்திரக்கனி, மாதேஷ், மிதுன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஆர்.வி.சரண், இசை – ஜிப்ரான், படத்தொகுப்பு – நெல்சன் ஆண்டனி, எழுத்து, இயக்கம் – இரா.சரவணன்.

“இந்த நாட்டில் ஆள்வதற்குத்தான் அதிகாரம் தேவைன்னு நினைச்சோம். ஆனால் இப்ப வாழ்றதுக்கே அதிகாரம் தேவைன்றதை உணர்ந்துக்கிட்டேன்”

இது படத்தின் நாயகனான தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்த ‘அம்பேத்குமார்’ என்ற சசிகுமார் படத்தின் இறுதியில் சொல்லும் வசனம். இதுதான் இத்திரைப்படம் சொல்லும் நீதியுமாகும்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் கந்தர்வக்கோட்டை அருகில் இருக்கும் ‘வணங்கான்முடி’ என்ற ஊர்தான் இந்தப் படத்தின் கதைக் களம். இந்த ‘வணங்கான்முடி’ ஊரை உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியத்திற்கு தந்தை, பெரியப்பா, சித்தப்பா, மகன் என்று பரம்பரை, பரம்பரையாக தலைவராக இருப்பது தற்போதைய தலைவரான ‘கோப்புலிங்க’த்தின் குடும்பத்தினர்தான்.

இந்தக் கோப்புலிங்கத்தின் வீட்டில் அடிமையைப் போல எடுபுடி வேலை செய்து வருபவர் ‘கூழ்பானை’ என்ற அம்பேத்குமார். இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். ‘அம்பேத்குமார்’ என்று அழைத்தால் அம்பேத்கரை அழைப்பது போலாகுமே என்பதால் இவருக்குக் ‘கூழ் பானை’ என்று பட்டப் பெயர் வைத்து அழைக்கிறார்கள் அந்த ஊரில் வசிக்கும் மேல் சாதியினர்.

அந்த வருடம் அந்த ஊராட்சிக்குத் தேர்தல் வரவிருப்பதால் யார் அடுத்த்த் தலைவராவது என்று கோப்புலிங்கத்தின் ஜாதியினருக்குள்ளேயே போட்டிகள் நடந்து கடைசியில் குலுக்கல் முறையில் ஊரையே ஏமாற்றி கோப்புலிங்கமே மீண்டும் போட்டியிடுவதாக செட்டப் செய்யப்பட்டுவிட்டது.

இந்த நேரத்தில் அந்த ஊராட்சி ஒன்றியத்தை ரிசர்வ் தொகுதியாக்கி மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்க, கோப்புலிங்கமும் அவரைச் சார்ந்தோரும் ஏமாற்றமடைகிறார்கள்.

அந்த ஊரில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களில் தன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அடிமைபோல வேலை பார்க்க யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று கோப்புலிங்கம் யோசித்து கடைசியில் தன் வீட்டில் வேலை செய்யும் கூழ்பானையையே நிறுத்தி வைத்து தலைவராக்குகிறார்.

கூழ்பானை தான் தலைவராகிவிட்டதாக குதூகலித்தாலும் ஒரு சதவிகிதம்கூட அவருக்கு அந்தச் சந்தோஷத்தைக் கொடுக்காமல் தானே ஆக்டிவ் தலைவராகத் தொடர்கிறார் கோப்புலிங்கம்.

வழக்கம்போல ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் தடுப்பது, வீட்டு வேலை செய்ய வைப்பது.. சுதந்திர தினத்தன்று கொடியேற்ற விடாமல் தடுப்பது என்று பல தடுப்பணைகளைப் போட்டு கூழ்பானையை அவமானப்படுத்துகிறார் கோப்புலிங்கம்.

இந்த நேரத்தில் கூழ்பானையின் தாயார் இறந்துவிட, அவரைப் பொது மயானத்தில் புதைக்கக்கூட விடாமல் தடுக்கிறார் கோப்புலிங்கம். இதனால் பெருத்த அவமானத்தையும், சோகத்தையும் சந்திக்கும் கூழ்பானை, மாவட்ட வளர்ச்சி அலுவலரை சந்தித்து தங்கள் ஊரில் தங்களுக்கென்று தனியாக ஒரு சுடுகாடு வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.

இந்தக் கோரிக்கையை ஏற்ற பிடிஓ, அந்த ஊரில் அரசு பொறம்போக்கு நிலத்தை சுடுகாடாக மாற்றிக் கொடுக்கிறார். இதைப் பார்த்து கோபப்படும் கோப்புலிங்கம், கூழ்பானையின் சமூக மக்கள் குடியிருக்கும் இடம் முழுவதும் தனது சொந்த நிலம் என்பதால் அந்தப் பகுதியிலிருந்து அனைவரும் 2 நாட்களுக்குள் காலி செய்து கொடுக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறார்.

இது தொடர்பாக நடக்கும் பஞ்சாயத்தில் கூழ்பானை தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோப்புலிங்கம் நிபந்தனை விதிக்கிறார்.

இந்த நிபந்தனையை கூழ்பானை ஏற்றுக் கொண்டாரா..? இல்லையா..? இறுதியில் என்னவானது..? என்பதுதான் இந்த ‘நந்தன்’ படத்தின் திரைக்கதை.

இந்தப் படத்தில் ‘கூழ்பானை’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தமைக்காக நடிகர் சசிகுமாருக்கு தமிழ்த் திரையுலகம் என்றென்றும் நன்றிக் கடன்பட்டுள்ளது. வேறு எந்த நடிகரும் இந்தக் கதாப்பாத்திரத்தில் நடிக்க முன் வந்திருக்க மாட்டார்கள் என்பது உறுதி.

தான் ஒரு அடிமை என்பதை உணராமலேயே படம் நெடுகிலும் வலம் வரும் அடிமைத்தனமான கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார் ச்சிகுமார். வெத்தலை போட்டு சிவந்திருக்கும் நாக்கும், ஈறு தேய சிவப்பாகிப் போயிருக்கும் பற்களும், குளித்தே பல நாட்கள் ஆனதுபோன்று பரட்டைத் தலையும், அழுக்கு உடையுமாய் பார்த்தாலே ஒதுங்கிப்போக நினைக்கும் ஒரு தோற்றத்தில் தன்னுடைய நடிப்பை தன்னுடைய உடல் மொழியால் காண்பித்திருக்கிறார் ச்சிகுமார்.

வேறு எவரும் நடிக்க முன் வராத ஒரு காட்சியாக நிர்வாணக் கோலத்திலும் நடித்து நம்மையும் பதைபதைக்க வைத்திருக்கிறார் சசிகுமார். கோப்புலிங்கத்தின் ஆட்களின் வெறியாட்டத்தில் தன்னை அடித்துத் துவைத்தும்கூட தன் குணம் மாறாமல் கடைசியில் சத்தமேயில்லாமல் பதிலடி கொடுக்கும்விதத்திலும் நம்மைப் பெரிதும் கவர்ந்திழுக்கிறார் சசிகுமார். வெல்டன் சசி ஸார்..!

கோப்புலிங்கமாய்.. உடல் முழுக்க ஜாதி வெறிபிடித்தவராய்.. படம் நெடுகிலும் ஊர்க்காரர்களுக்கு பயத்தைக் கொடுத்திருக்கிறார் பாலாஜி சக்திவேல். இதற்கு இவரது உருவமும், தோற்றமும், வசன உச்சரிப்பும், நடிப்பும் கை கொடுக்க.. மிக நீண்ட நாட்கள் கழித்து அசத்தலான கிராமத்து வில்லனை இந்தப் படம் நமக்குக் காண்பித்துள்ளது.

பிக்பாஸ் ஸ்ருதி பெரியசாமிக்கு நிச்சயமாக இந்தப் படம் ஒரு ஜாக்பாட்தான். அவருடைய வாழ்நாள் முழுமைக்கும் சேர்த்து வைத்து இந்தப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அவருடைய எளிமையான, கருத்த தோற்றம் இந்தக் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்தியுள்ளது.

படுத்தப் படுக்கையாகி படுக்கையிலேயே காலத்தைக் கழித்துவரும் நிலையில் தனது சாதி வெறியைக் காட்டும் ஜி.எம்.குமாரின் வசனங்களைப் பார்க்கும்போது இந்த சாதியை ஒழிக்க எந்த சாமி எந்த அவதாரமெடுத்து வரப் போகிறதோ என்று கேட்கத் தோன்றுகிறது.

சில காட்சிகளே என்றாலும் வட்டார வளர்ச்சி அலுவலராக நடித்திருக்கும் சமுத்திரக்கனி, ஒரு நேர்மையான அரசு அலுவலர் எப்படியிருக்க வேண்டும் என்பதைக் காண்பித்திருக்கிறார். இவரைப் போலவே அனைத்து அரசு அதிகாரிகளும் இருந்து, வழி தெரியாதவர்களுக்கு வழியைக் காட்டினால் அதுவே நமது சமூகத்திற்கு நல்லதொரு துவக்கமாகவும் இருக்கும்.

சாதி வெறியர்களாக நடித்திருக்கும் அனைத்து ஆண்டை ஆண்களும், சாதி அடிமைகளாய் நடித்திருக்கும் அனைத்து அடிமை ஆண்கள், பெண்களும் சிறப்பாய் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் நான்குமே சிறப்பாய் இருக்கும்பட்சத்தில் மற்றவை அதிகம் எதிர்பார்க்கப்படாதவை என்பதை இந்தப் படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்கள் முறியடித்துள்ளார்கள்.

சரணின் ஒளிப்பதிவும், ஜிப்ரானின் இசையும், நெல்சன் ஆண்டனியின் படத் தொகுப்பும் படத்திற்கு மிகப் பெரிய பலத்தைக் கொடுத்திருக்கின்றன. படம் நெடுகிலும் இசைக்கும் பின்னணி இசை சாதியம் என்னும் பேயை நமக்குப் பயமுறுத்தலுடன் சொல்லிக் கொண்டேயிருக்கிறது.

சுடுகாட்டு காட்சியிலும், சசிகுமாரை அடித்து, உதைக்கும் காட்சியிலும் ஒளிப்பதிவாளரின் பணி சிறப்பானது. அந்தக் காட்சியின் கோரத்தை உணர்த்தும்விதமாய் படப்பதிவு அமைந்திருப்பது சிறப்பு.

தொடர்ச்சியாக பல வருடங்களாக சாதியக் கொடுமைகளைப் பற்றிய திரைப்படங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. அந்த வரிசையில் இத்திரைப்படமும் வந்திருந்தாலும் இதுவொரு புதிய கதையை தியேட்டர் ரசிகர்களுக்குக் கொடுத்திருக்கிறது.

இப்படியெல்லாம் நடக்குமா..? நடந்திருக்கிறதா..? என்று இன்றைய  இளைய சமுதாயத்தினரிடையே கேள்வியையும் எழுப்பியிருக்கிறது இத்திரைப்படம். “சந்தேகமிருந்தால் என்னுடன் வாருங்கள். கையைப் பிடித்து அழைத்துச் சென்று காண்பிக்கிறேன்” என்று இயக்குநர் படத்தின் துவக்கத்திலேயே ஆணித்தரமாகச் சொல்லி ஸ்லைடும் போட்டுக் காண்பித்திருப்பதால் நாம் எந்த மாதிரியான உலகத்தில் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிற பயத்தை இத்திரைப்படம் உண்டு செய்துள்ளது.

அரசுகளின் பாராமுகம், அரசு அதிகாரிகளிடையேயும் இருக்கும் சாதிய எண்ணம், மக்களிடையே இருக்கும் சாதியப் பாகுபாடுகள் இவை அனைத்துமே ஒன்று சேர்ந்துதான் அந்த அப்பாவி தாழ்த்தப்பட்ட மக்களை அவர்களது உரிமையைப் பெறுவதற்கே போராட வைத்திருக்கிறது.

மதம் என்ற ஒன்றைச் சொல்லி, பிராமணர்கள் என்ற பிரிவினரைக் காட்டி இதுநாள்வரையிலும் மக்களிடையே பிரிவினையை உண்டு செய்து சமூகத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ள ஆதிக்க சாதியினரின் வாக்குகளால் ஆட்சியைப் பிடித்து தொடர்ந்து மாறி, மாறி ஆட்சி நடத்தி வரும் திராவிடிய அரசுகள் இந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்மையில் செய்த நன்மைகள்தான் என்னவென்பது கேள்விக்குரியது.

உண்மையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளைக் கொடுக்காமல் அவர்களை அடிமையாக்கி, கொடுமைப்படுத்துவது மதமோ, பிராமண சமுதாயமோ இல்லை.. இடைநிலை சாதியினர் என்றழைக்கப்படும் ஆதிக்க மற்றும் மேல் சாதியினரின் திமிர்தானே ஒழிய வேறில்லை என்பதை இந்தப் படமும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. இந்த உண்மையை நமது இப்போதைய தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டியது நமது கடமை.

புராணக் கதையில் சிவபெருமானை காண கோவிலுக்கு வரும் நந்தன், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்பதால் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வாசலிலேயே நின்று சிவனை வணங்க முற்படுகிறான்.

அப்படி வாசலில் நிற்கும் நந்தனுக்கு நந்தி பகவான் இடையில் மறித்து நிற்க.. சிவபெருமானே நந்தி பகவானை “சற்றே தள்ளியிரும் பிள்ளாய்” என்று தள்ளி நிற்கச் சொல்லி நந்தனுக்குக் காட்சியளித்தார் என்பது வரலாறு.

ஆனால் சிவபெருமான் நந்தியை தள்ளி நிற்கச் சொன்னதைவிடவும் “உள்ளே வா நந்தா” என்று சொல்லி நந்தனை தன்னருகில் அழைத்திருப்பதுதானே நியாயம் என்ற உணர்வு இன்றைக்கு சிவனின் பக்தர்களிடையேகூட கேள்வியாய் எழும்பிக் கொண்டிருக்கிறது.

இந்த நந்தனின் பெயரை இந்தப் படத்துக்கு தலைப்பாய் வைத்திருப்பது சாலப் பொருத்தம்தான்.  

இப்படியொரு உண்மைக் கதையை தானே சொந்தமாகத் தயாரித்து உண்மைக்கு மிக நெருக்கமான வகையில் சிறப்பான முறையில் கொடுத்திருக்கும் இயக்குநர் இரா.சரவணனுக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள்..!

நந்தன் – குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம்..!

RATING : 4.5 / 5

Our Score