full screen background image

“நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படம் ‘சென்னை 600028’ படம் போல தாக்கத்தை ஏற்படுத்தும்..” – இயக்குநரின் அதீத நம்பிக்கை..!

“நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படம் ‘சென்னை 600028’ படம் போல தாக்கத்தை ஏற்படுத்தும்..” – இயக்குநரின் அதீத நம்பிக்கை..!

மசாலா பாப்கார்ன் மற்றும் ஒயிட் ஃபெதர் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஐஸ்வர்யா.எம் மற்றும் சுதா.ஆர் இணைந்து தயாரிக்கும் திரைப்படம்  ‘நண்பன் ஒருவன் வந்த பிறகுதிரைப்படம்.

இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு வழங்குவதோடு, “இத்திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்கு தான் வழங்கும் பரிசு…” என்று இப்படத்தை குறிப்பிட்டுள்ளார்.

காரணம், அவர் இயக்கிய முதல் படமான ‘சென்னை 600028’ ரசிகர்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியதோ, அதைவிட அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இப்படத்தின் கதைக் களம் அமைந்திருப்பதுதான்.

ந்தப் படத்தில் இயக்குநர் ஆனந்த் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். மேலும் ஆர்.ஜே.விஜய், பவானிஸ்ரீ, இர்பான், வில்ஸ்பேட், தேவ், மோனிகா, கே.பி.ஒய் பாலா, ஆர்ஜே ஆனந்தி, சபரிஷ், குகன், ஃபென்னி ஆலிவர், தர்மா, வினோத் உள்ளிட்ட பல புதுமுகங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் லீலா, குமரவேல், விசாலினி போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களும் நடித்திருக்க, இவர்களுடன் தயாரிப்பாளர் ஐஸ்வர்யாவும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தமிழ்ச் செல்வன் ஒளிப்பதிவு செய்கிறார். ஃபென்னி ஆலிவர் படத் தொகுப்பு செய்ய, ராகுல் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.  டி..பொறுப்பை ஸ்ரீஜித் சாரங் ஏற்க, பூர்னேஷ் நிர்வாகத் தயாரிப்பாளராகப் பொறுப்பேற்றிருக்கிறார். உடையலங்காரத்தை ப்ரீத்தி நாராயணனும், நடனப் பயிற்சியை அஸாரும் கவனிக்கின்றனர். மொஹமத் அக்ரம் சி.ஜி. பணிகளை மேற்கொள்கிறார். தி மெட்ராஸ் டச், ராயல் தர்மா புகைப்படக் கலைஞராகப் பணியாற்ற, ராஜேஷ் கண்ணா, மோகன், ஷெரீஃப், ஜெரோம் ரெமிஜியஸ், ஆர்..சரத் மற்றும் ஜெகநாதன் ஆகியோர் இயக்குநர் குழுவில் இணைந்திருக்கின்றனர்.

இந்தப் படத்தை  ‘ஹிப் ஹாப்ஆதியின்மீசையை முறுக்குபடத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்து கவனம் ஈர்த்த ஆனந்த் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். இது இவரது முதல் படமாகும்.

இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவிருப்பதால் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா, இயக்குநர் மற்றும் நடிகரான ஆனந்த், இசையமைப்பாளர் ஏ.எச்.காஷீப், ஆர்.ஜே.விஜய் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது இத்திரைப்படம் குறித்துப் பேசிய இயக்குநர் ஆனந்த், “நான் பல படங்களில் சிறு, சிறு வேடங்களில் நடித்திருக்கிறேன். மீசையை முறுக்கு’ படத்தில் ஆதியின் தம்பியாக நடித்த வேடம் எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. ‘நாளைய இயக்குநர்கள்’ ஐந்தாவது சீசனில் கலந்து கொண்டு இறுதிப் போட்டிவரை பயணித்திருக்கிறேன். ‘நண்பன்’ என்ற குறும் படத்திற்காக விகடன் விருது பெற்றேன்.

பிறகு என் வாழ்க்கையில் ஒரு தரமான சம்பவம் நடந்தது. என் வாழ்க்கையில் மட்டும் அல்ல.. இது பலரது வாழ்க்கையில் நடந்திருக்கும். என் நண்பனுக்கு நடந்த அந்த சம்பவம் பற்றி எழுத ஆரம்பித்தேன். அதுதான் இந்த கதை. இந்தக் கதை அனைவரின் வாழ்விலும் நடந்திருக்கும். இந்த கதையை கேட்டவர்கள் அனைவரும், ”இது என் வாழ்க்கையில் நடந்த சம்பவம் போல இருக்கே” என்று சொன்னார்கள்.

ஒரு நல்ல கதை தனக்கானதை தானாகவே தேடிக் கொள்ளும் என்று சொல்வார்கள். ‘சென்னை 600028’ போன்ற படங்களுக்கு அப்படித்தான் நடந்ததாக சொன்னார்கள். அதுபோலத்தான் இந்தப் படத்திற்கான அனைத்து விசயங்களும் தானாகவே நடந்தது.

இயக்குநர் வெங்கட் பிரபு சாரிடம் இந்தக் கதையை சொன்னபோது, ”‘சென்னை 600028’ மூன்றாம் பாகத்திற்கான ஐடியாவாக இருக்கே..?” என்று சொன்னது மட்டுமின்றி, தன்னுடைய பங்களிப்பும் இதில் இருக்க வேண்டும் என்பதற்காக, இந்தப் படத்தை அவர் வழங்குகிறார்.

நட்பு என்பது மகிழ்ச்சிக்கானது மட்டுமல்ல, அது நிபந்தனையற்ற பந்தம். ஒவ்வொருவரிடமும், குறிப்பாக பதின்ம பருவத்தினரிடையே நேர்மறை பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. நாங்கள் ஏற்கெனவே வாழ்வின் பகுதி என்று டேக் லைனில் குறிப்பிட்டதைப்போல், இந்தப் படம் ஒவ்வொருவரையும் நட்பை நினைக்கச் செய்து மகிழ்ச்சியூட்டும்.

இது ஏதோ நண்பர்களுக்கான படம் என்பதால் இளைஞர்களுக்கான படம் என்று நினைக்க வேண்டாம். 60 வயதுடையவர்கள்கூட இந்தக் கதையுடன் தங்களை தொடர்புப்படுத்திக் கொள்வார்கள். அவர்களது வாழ்க்கையிலும் இதுபோன்ற சம்பவங்கள் நிச்சயமாக நடந்திருக்கும். அதனால், இந்தக் கதை அனைத்து வயதினரையும் நிச்சயம் பாதிக்கும்.

‘சென்னை 600028’, ‘அட்ட கத்தி’ போன்ற படங்கள் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதோ, அதுபோல் எங்களுடைய இந்த ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படமும் ரசிகர்களிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்…” என்றார்.

தயாரிப்பாளர் ஐஸ்வர்யா படம் பற்றிப் பேசும்போது, “நான் ஊடகத் துறை சம்பந்தமாக படித்து, அத்துறையில் பல தளங்களில் பணியாற்றினேன். பிறகு என் நண்பர் வெங்கட் பிரபு ஆரம்பித்த பிளாக் டிக்கெட் நிறுவனத்திலும் பணியாற்றினேன். அதன் பிறகு என்ன செய்யலாம் என்றால் திரைப்பட தயாரிப்புதான் என் நினைவுக்கு வந்தது. ஆனால் “திரைப்பட தயாரிப்பு சாதாரணமல்ல.. அதில் எப்படிப்பட்ட சிக்கல்கள் இருக்கிறது..” என்பதை என் நண்பர்கள் எனக்குப் புரிய வைத்தார்கள்.

அந்த சமயத்தில்தான் இந்தப் படத்தில் நடிப்பதற்காக என்னை அணுகினார் ஆனந்த். நான் ஏற்கெனவே விளம்பர படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், திரைப்படத்தில் பெரிய கதாபாத்திரம் என்பது எனக்கு புதிதுதான். அதனால், அவரிடம், “நான்தான் அந்த வேடத்தில் நடிக்கணுமா..?  நன்றாக யோசித்து சொல்லுங்கள்..” என்றேன்.

தற்குப் பிறகு அவரிடமிருந்து எனக்கு போன் எதுவும் வரவில்லை. அதே சமயம், அவர் சொன்ன கதை எனக்குள் ஒருவித பாதிப்பை ஏற்படுத்தியது. நம் வாழ்க்கைக்கு நெருக்கமான கதையாக இது இருக்கிறதே என்று எனக்குத் தோன்றியது. அப்போதுதான் இப்படி ஒரு கதை மூலமாகத்தான் தயாரிப்பாளராக வேண்டும் என்று முடிவு செய்தேன்.

இயக்குநர் சொன்னதுபோல் இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் அனைவரும் கதையோடு தங்களை தொடர்புபடுத்திக் கொள்வார்கள். இத்திரைப்படம் சினிமாத்தனம் இன்றி, ஒரு எதார்த்தமான வாழ்வியலாக இருக்கும்.” என்றார்.

நடிகர் ஆர்.ஜே.விஜய் இந்தப் படத்தில் நடித்தது பற்றிப் பேசும்போது, “இந்தப் படத்தில் நான் இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறேன். அதில் ஒரு பாடலை தனுஷ் சாரும், மற்றொன்றை ஜி.வி.பிரகாஷ் சாரும் பாடியிருக்கிறார்கள். இது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

இந்தப் படத்தில் பாடல் எழுதுவதற்காகத்தான் இயக்குநர் என்னை அனுகினார். பிறகு இதன் கதையைப் பற்றி என்னிடம் சொன்னபோது, நானும் இதில் நடிக்கலாமே.. அதற்கான வாய்ப்பு இருக்கிறதே என்று எனக்குத் தோன்றியது. ஆனால், அதை எப்படி இயக்குநரிடம் கேட்பது என்று தயங்கினேன். ஆனால், இயக்குநரும் என்னை நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார். ஒரு வழியாக இருவரும் எங்களது விருப்பத்தை வெளிப்படுத்தினோம். அப்படித்தான் இந்தப் படத்தில் நான் நடிக்க வந்தேன்.

இயக்குநர் சொன்னதுபோல் இந்தப் படம் அனைத்து வயதினருக்குமான படம். இந்தக் கதை எல்லோருடைய வாழ்விலும் நடந்திருக்கும். கதையை ஆனந்த் மிக அழகாக எழுதியிருக்கிறார்..” என்றார்.

இசையமைப்பாளர் ஏ.எச்.காஷீப் பேசும்போது, “’காற்றின் மொழி’ போன்ற படங்களில் பணியாற்றிய பிறகு நல்லதொரு கதையில் பணியாற்ற வேண்டும் என்று நினைத்தேன். அப்போதுதான் இந்த கதை என்னிடம் வந்தது.

ஆனந்த் என்னிடம் இந்தப் படத்தின் கதையை சொன்னபோதே, நான் இந்தப் படத்தின் இசையைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். நான் ஏ.ஆர்.ரஹ்மான் சாரிடம்தான் பணியாற்றி வருகிறேன். அதனால், இந்தக் கதையைப் பற்றி அவரிடம் சொல்லி, “முஸ்தபா பாடலை பயன்படுத்த உள்ளோம்..” என்பதை சொன்னதோடு, “உங்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தப் படம் இருக்கும்..” என்றேன். அவரும் எங்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்தப் படத்தின் பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருப்பதோடு, படத்திற்கான அடையாளமாக மாறியிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது…” என்றார்.

நடிகர் தேவ் கூறுகையில், “நான் திரைப்பட தயாரிப்பில் பணியாற்றி வந்தாலும், நடிப்பதில்தான் எனக்கு ஆர்வம். சில படங்களில் சிறு, சிறு வேடங்களில் நடித்திருக்கிறேன். இந்தக் கதையில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறேன். படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.

யூ டியுப் பிரபலமான வில்ஸ்பேட் கூறுகையில், “நான் மொபைல் போன் மூலம் அவ்வப்போது வீடியோக்களை எடுத்து வெளியிட்டு வருவேன். எனக்கும் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை. செல்போனில் வீடியோ எடுத்து வெளியிடும் நமக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்றெல்லாம் யோசித்தேன்.

அப்போதுதான் இந்தப் படத்தின் இயக்குநர் ஆனந்த்கிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. “உங்க வீடியோ நன்றாக இருக்கிறது. ஒரு படம் பண்ண போறோம். அதில் உங்களுக்கு ஒரு வேடம் இருக்கிறது” என்று அழைத்தார். எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த அவருக்கு நன்றி. படத்தில் நடிக்கும்போதே நாங்கள் நிஜமான நண்பர்களாகத்தான் இருந்தோம். படம் சிறப்பாக வந்திருக்கிறது. படமும் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்..” என்றார்.

Our Score