full screen background image

“இந்தப் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழா..?” ஆச்சரியப்பட வைக்கும் திரைப்படம்..!

“இந்தப் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழா..?” ஆச்சரியப்பட வைக்கும் திரைப்படம்..!

‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ என்ற நல்ல தலைப்புடன் உருவாகியிருக்கும் ஒரு படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியிருப்பது ஆச்சரியமாக இருப்பதோடு, அப்படத்தின் மீது எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

சித்தார்த் நடிப்பில் வெளியான ‘எனக்குள் ஒருவன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரசாத் ராமர் இயக்கியிருக்கும் இந்த ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ படத்தை பூர்வா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான பிரதீப் குமார், தயாரித்து இசையமைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் செந்தூர் பாண்டியனுக்கு இதுதான் முதல் படம். அவர் ஆடிசன் மூலம் தேர்வானாலும், இந்தப் படத்திற்காக விசேஷமாக சில பயிற்சிகளையும் மேற்கொண்டு நடித்திருக்கிறார். அவரது நண்பராக முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் சுரேஷ் மதியழகன் என்பவரும் ஆடிசன் மூலம் தேர்வாகி அசத்தலாக நடித்திருக்கிறாராம். இவர்கள் மட்டும் இன்றி மற்ற வேடங்களில் நடித்திருக்கும் இளைஞர்கள் அனைவரும் புதியவர்கள் என்றாலும், படம் பார்ப்பவர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருக்கிறார்களாம்.

படத்தின் நாயகி ப்ரீத்தி கரன், பிரபல மாடல் மற்றும் முறையாக நடிப்பு பயின்றவர் மட்டும் இன்றி ஏற்கனவே ‘கட்டுமரம்’ என்ற படத்தில் நடித்திருப்பதோடு, ‘தங்கலான்’ மற்றும் ‘ட்ரைன்’ படங்களிலும் நடித்து வருகிறாராம். ஆனால், அவர் இந்தப் படத்தில் நடித்தபோது ஆரம்பத்தில் சிரமப்பட்டாலும், பிறகு கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறாராம். 

இந்த ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ படம் வரும் மார்ச் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையொட்டி இந்தப் படக் குழுவினர் நமக்குப் பேட்டியளித்தனர். அப்போது படத்தின் இயக்குநரான பிரசாத் ராமர் படம் குறித்துப் பேசும்போது, “மதுரையிலிருந்து தஞ்சை, புதுக்கோட்டை, கும்பகோணம் வழியாக மாயவரத்தை அடைகிறார்கள் இரண்டு இளைஞர்கள். பூம்புகார் செல்வதற்கு முன்பு அவர்களுடன் அந்தப் பயணத்தில் ஒரு பெண்ணும் இணைகிறாள். அந்த இளைஞர்களின் நோக்கம் ஒன்றாக இருக்க, அந்த பெண்னின் எதிர்பார்ப்பு வேறாக இருக்கிறது.

இறுதியில் இருவரது எண்ணங்கள் மற்றும் புரிதல் எப்படி இருக்கிறது.. அவர்கள் மீதான சமூகத்தின் புரிதல் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றித்தான் இந்தப் படம் பேசுகிறது.

இந்த படத்தில் எந்தவித மெசஜையும் சொல்லவில்லை. இது சரி, அது தவறு என்று அறிவுரையையும் சொல்லவில்லை, எந்த ஒரு தீர்வையும் சொல்லவில்லை. இப்படிப்பட்ட விசயங்களை இளைஞர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை பற்றி மட்டுமே பேசியிருக்கிறோம், அதை திரையில் பார்க்கும்போது பார்வையாளர்களுக்குள் பல கேள்விகள் எழும். 

இந்த படத்தை வழக்கமான சினிமா பாணியில் எடுக்காமல் நிஜ வாழ்க்கை பயணமாக இருக்க வேண்டும் என்று நினைத்து எடுத்திருக்கிறோம். அதற்காகத்தான் ஈஸ்தட்டிக்ஸ் கலர் போன்ற விசயங்களை தவிர்த்திருக்கிறோம்.

அதேபோல், மதுரை உள்ளிட்ட பகுதிகளை காட்டும்போது வழக்கமாக காட்டப்படும் லொக்கேஷன்களை காட்டாமல், இதுவரை திரைப்படங்களில் பார்க்காத மதுரை பகுதிகளில் காட்சிகளை படமாக்கினோம். அதற்கு காரணம், அப்பகுதிகளில் இருப்பவர்கள் படத்துடன் தங்களை தொடர்புபடுத்திக் கொள்வதற்காகத்தான். தஞ்சை, புதுக்கோட்டை, கும்பகோணம் என்று அனைத்து பகுதிகளையும் இப்படித்தான் கையாண்டிருக்கிறோம்.

இந்தப் படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியிருக்கிறது. அதற்காக,  ஆபாசமான காட்சிகள் மூலம் ரசிகர்களை திரையரங்கிற்கு அழைக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. இந்த சமூகத்தில் இளைஞர்கள் மீதான பார்வை எப்படி இருக்கிறது, சமூகத்தை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள், என்பதை சொல்லும் வகையில்தான் இந்த படத்தின் கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இதன் திரைக்கதை ஒரு ரோட் டிராவல் பாணியிலும் இருக்கும். கதைக்காக படத்தில் முத்தக் காட்சிகள் வைத்திருக்கிறோம், அதற்குக்கூட தணிக்கை குழு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், வேறு சில விசயங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அப்படிப்பட்ட விசயங்களை நீக்கிவிட்டோம்.

இருந்தாலும், நாங்கள் தொட்டிருக்கும் சம்பவங்களுக்காக ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். அதே சமயம், அக்காட்சிகளை எடுக்கும்போது சம்மந்தப்பட்ட நடிகர், நடிகைகளுக்கு விரிவாக புரிய வைத்துதான் எடுத்திருக்கிறோம். அந்த காட்சிகளை திரையில் பார்க்கும்போது ரசிகர்களுக்கு எந்தவிதத்திலும் நெருடலாக இருக்காது. படத்தை பார்க்கும்போது அதை நீங்களும் உணர்வீர்கள்...” என்றார்.

தயாரிப்பாளர் பிரதீப் குமார் பேசும்போது, “’எனக்குள் ஒருவன்’ படத்தின்போதே இயக்குநர் பிரசாத் ராமரை எனக்குத் தெரியும். அன்று முதல் நாங்கள் நண்பர்களாகவே பழகி வருகிறோம்.

எனக்கு தயாரிப்பாளராக வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. ஒரு முறை அவர் இந்தக் கதையை என்னிடம் சொன்னபோது, புதிதாகவும், பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த ஜாலியான கதையாகவும் இருந்தது. அதனால் உடனேயே ஆரம்பித்து விடலாம் என்று சொன்னேன். பிறகுதான் தெரிந்தது நான்தான் படத்தின் தயாரிப்பாளர் என்று. நான் மட்டும் தயாரிக்கவில்லை. எனக்காக என் குடும்பமே ஒன்று சேர்ந்து இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

படம் நன்றாக வந்திருக்கிறது. படத்தை பார்த்தவர்கள் அனைவரும் படத்தில் நடித்த நடிகர், நடிகைகளைப் பற்றித்தான் அதிகம் பேசுகிறார்கள், அவர்களை நடிக்க வைத்திருக்கும்விதம் பற்றியும் பேசுகிறார்கள். படம் அனைவருக்கும் பிடித்திருக்கிறது. நிச்சயம் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம்…” என்றார்.

 

Our Score