full screen background image

நகர்வலம் – சினிமா விமர்சனம்

நகர்வலம் – சினிமா விமர்சனம்

சென்னையில் தண்ணீர் லாரி ஓட்டி வருகிறார் நாயகன் பாலாஜி.  பாலாஜிக்கு துணையாக பால சரவணன் வருகிறார். இன்னொரு டிரைவரான யோகி பாபு தண்ணீர் சப்ளை செய்யும் இடத்தில் வசித்து வரும் நாயகி தீக்‌ஷிதா மாணிக்கம் ப்ளஸ் டூ படிக்கும் மாணவி. இசை பிரியர். இளையராஜா பாடல்கள் என்றால் நாயகிக்கு அவ்வளவு உயிர்.

ஒருநாள் யோகி பாபு வெளியூர் சென்றுவிட அவருக்கு பதிலாக அந்த ஏரியாவுக்கு தண்ணீர் சப்ளை செய்ய தனது லாரியுடன் செல்கிறார் பாலாஜி.

போன இடத்தில் தீக்சிதாவை சந்திக்கிறார். லாரியில் ஒலிக்கும் இளையராஜாவின் இசை நாயகியைக் கவர்கிறது. இதனால் டிரைவரான பாலாஜியும் நாயகியின் கவனத்துக்கு வருகிறார்.

நாயகியைப் பார்த்த பாலாஜிக்கும் அவள் மீது ஈர்ப்பு வர தினமும் அதே பகுதிக்கு வந்து தண்ணீர் சப்ளை செய்கிறார். தினமும் இளையராஜா பாடல்களையே போடுவதால் பாலாஜி மீது தீக்ஷிதாவுக்கு காதல் ஏற்படுகிறது. நாயகி படிக்கும் பள்ளிக்கு தண்ணீர் சப்ளை செய்ய போன இடத்திலும் இளையராஜாவின் பாடல்களை போட.. காதல் ஸ்டார்ட் ஆகிறது.

தொடர்ந்து தனது கல்லூரி படிப்பை தொடங்கும் நாயகி தீக்ஷிதா தனது காதலை ஹீரோ பாலாஜியிடம் கூற, அவரும் நாயகியை காதலிப்பதாக கூறுகிறார். 

இந்நிலையில், இவர்களது காதல் தீக்‌ஷிதாவின் வீட்டிற்கு தெரிய வர, நாயகியின் தந்தையான மாரிமுத்து, இவரது தம்பியான ரவி மற்றும் அண்ணன் முத்துக்குமார் ஆகியோர் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இதில் பாலாஜி தங்களது ஜாதியைச் சேர்ந்தவன் இல்லை என்பதால் தீக்‌ஷிதாவை விட்டு பிரிய சொல்லி மிரட்டுகின்றனர். ஆனால் ஹீரோவோ மறுக்கிறார். இதனால் பாலாஜியை ஆள் வைத்து அடித்து உதைக்கிறார் நாயகியின் அண்ணன்.

இப்படியும் முடியாமல் போகவே, பாலாஜியை கொலை செய்ய சித்தப்பா ரவி முடிவு செய்கிறார். அதற்காக முத்துக்குமாரை அனுப்புகிறார். தனது சித்தப்பா சொல்லுக்கு கட்டுப்பட்டு அவர் சொல்வதை அப்படியே செய்யும் முத்துக்குமார், தனது அடியாளான  பாலாஜியை கொன்றாரா..? அல்லது தனது தங்கையுடன் பாலாஜியை சேர்த்து வைத்தாரா..? இறுதியில் என்ன நடந்தது? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

மறுபடியும் ஒரு தவறான காதல் படம். பிளஸ்டூ படிக்கும் மாணவியில் துவங்கி காதல் என்றால் என்னவென்றே தெரியாத பருவத்தில் நடக்கும் காதலை உண்மையான காதல் போல் வழக்கமான படமாகவே உருவாக்கியிருக்கிறார்கள்.

இளையராஜாவின் இசையினாலேயே காதலனை காதலிப்பதாக காதலி சொல்வதெல்லாம் பத்தாம்பசலித்தனம். இதுக்குப் பெயர்தான் காதலா..? ஏற்கவே முடியவில்லை. காதலிக்காக இவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் காதல் வந்துவிட்டது. நடிப்பும் சுமாராகத்தான் செய்திருக்கிறார்.

ஒரேயொரு காட்சியில் அத்தனை அடி வாங்கியும் திரும்பவும் காதலியின் அண்ணனிடமே வந்து சவால்விட்டுப் போகும் காட்சியில் மட்டுமே நெகிழ வைத்திருக்கிறார். அவ்வளவே..!

பள்ளி மாணவியாகவும், கல்லூரி மாணவியாகவும் நடித்திருக்கும் நாயகி தீக்‌ஷிதா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இன்னும் நடிக்க வேண்டும்மா.. யோகி பாபுவின் கேரக்டர் ஸ்கெட்ச் மட்டுமே சில நேரங்களில் சிரிக்க வைத்திருக்கிறது. தமிழ் உச்சரிப்பு சரியாக வராமல் ட போட வேண்டிய இடங்களிலெல்லாம் த போட்டு பேசும் கலாட்டாவும் ஒரு காமெடியாகத்தான் இருக்கிறது. யோகி பாபுவை கலாய்த்தெடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பால சரவணனும் நன்று..!

முத்துக்குமார் நாயகியின் அண்ணனாகவும், வில்லனாகவும் வந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். முதல் பாதியில் வில்லனாக வந்தாலும், இரண்டாவது பாதியில் தனது தங்கையின் மீது உள்ள பாசத்தில் பொறுப்பான முடிவை எடுக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். மாரிமுத்து, நமோ நாராயணன் உள்ளிட்டோரும் அவர்களது கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். 

நடிகர் பசுபதி கெஸ்ட் ரோலில் வந்து ஒரு பாட்டுக்கு ஆடி விட்டுப் போகிறார். அந்தப் பாடல் சென்னையின் பூர்வகுடிகளுக்கு இழைக்கப்படும் துரோகங்களை பற்றிப் பேசுவது ஆச்சரியமானது.

முத்துக்குமாரின் கதாபாத்திரம் மட்டுமே சிறப்பு. சில இடங்களில் அப்பாவான மாரிமுத்துவின் பதட்டமும், தவிப்பும் சிறப்பாக காட்டப்பட்டிருக்கிறது. இயக்குநரின் இயக்கத் திறமை சில இடங்களில் தெரிந்தாலும் நல்ல கதையாக இல்லாமல் இருப்பதால் மற்றதெல்லாம் வீணாகிவிட்டது.

படம் நெடுகிடும் விட்டுவிட்டு இளையராஜாவின் பாடல்களும், இசையுமே வருவதால் இசையமைப்பாளர் பவன் கார்த்திக்கின் இசை பெரிதாக இல்லை.  ஆர். தமிழ் தென்றலின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. 

ஒரு படத்தின் வெற்றிக்கு அழுத்தமான கதை, சுவாரஸ்யமான திரைக்கதை இரண்டுமே சம அளவில் தேவைப்படுகிறது. கிளைமாக்ஸ் வித்தியாசமாக இருப்பது மட்டும் போதுமானதல்ல. அதுவே படத்தின் கதைக்கும், கதை சொல்ல வரும் நீதிக்கும் ஏற்புடையதாகவும் இருக்க வேண்டும்..!

இங்கே நகர்வலம் துவங்கியது.. ஆனால் திக்கில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது..!

Our Score