சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து குறித்து நடிகரும் சமந்தாவின் மாமனாருமான நாகர்ஜூனா உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ளார்.
நடிகை சமந்தா தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் கிறிஸ்துவ, இந்து முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது.
4 ஆண்டுகள் கழித்து சில மாதங்களுக்கு முன்பு சமந்தாவுக்கும், அவரது கணவரான நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், அவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது.
இந்த நிலையில் தாங்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் நேற்று தங்கள் சமூக வலைதளத்தில் அறிவித்து இருந்தனர். ஆனால், அதில் என்ன காரணத்திற்காக இருவரும் பிரிகின்றனர் என்பதை இருவருமே சொல்லவே இல்லை.
மாறாக தாங்கள் இருவரும் நண்பர்களாக தொடருவோம் என்றும் தங்களின் இந்த முடிவுக்கு நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் மீடியா என அனைவருமே தங்களின் இந்த முடிவுக்கும் எங்களின் பிரைவசிக்கும் மதிப்பு கொடுங்கள் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
வரும் 7-ம் தேதி இவர்களின் 4-வது திருமண நாள் கொண்டாடப்பட இருந்த நிலையில் இருவரும் பிரிந்துவிட்டதாக அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சமந்தா மற்றும் தனது மகனின் விவாகரத்து குறித்து நடிகர் நாகர்ஜுனா மிகவும் முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து பதிவிட்டுள்ள அவர், “மிகவும் கனத்த இதயத்துடன் இதை நான் சொல்கிறேன். சமந்தாவிற்கும், சைத்தன்யாவிற்கும் இடையே நடந்தது ஒரு எதிர்பாராத விஷயம். ஒரு கணவன் மனைவிக்குள் நடக்கும் விஷயம் மிகவும் தனிப்பட்ட ஒரு விஷயம். சமந்தா மற்றும் சைதன்யா இருவரையுமே எனக்கு மிகவும் பிடிக்கும். என்னுடைய குடும்பம் சமந்தா உடன் இருந்த அழகான தருணங்களை என்றும் நினைவில் கொள்ளும். இருவரையும் கடவுள் ஆசீர்வதித்து அவர்களுக்கு வலிமையை கொடுக்கட்டும்..” என்று பதிவிட்டுள்ளார்.