full screen background image

நாரதன் – சினிமா விமர்சனம்

நாரதன் – சினிமா விமர்சனம்

‘நாரதன் கலகம் நன்மையில் முடியும்’ என்பார்களே.. அதுபோலத்தான் ஹீரோ ஒரு கலகம் செய்கிறார். அதனை விளைவை என்னவென்று படத்தில் பாருங்கள் என்றார்கள். பார்த்தோம். என்ன கலகம் என்று கடைசிவரையிலும் தெரியவே இல்லை.

சென்னையில் இருக்கும் தனது தாய் மாமன் ராதாரவி குடும்பத்தினரைப் பார்ப்பதற்காகவும், அப்படியே பாண்டிச்சேரியில் ஒரு நேர்முகத் தேர்வை சந்திப்பதற்காகவும் கோவையில் இருந்து ரயில் ஏறுகிறார் ஹீரோ நகுல்.

அதே ரயிலில் சில ரவுடிகளால் துரத்தப்படும் ஹீரோயின் நிகிஷா பட்டேலை பார்க்கிறார். அவர் மீது பரிதாபப்பட்டு அவருக்கு டிக்கெட் எடுத்து பத்திரமாக சென்னைக்கு அழைத்து வருகிறார். ஆனால் சென்னை வந்தடைந்தவுடன் நிகிஷா பட்டேல் எங்கோ சென்றிருக்க.. நகுல் அவரைத் தேடிப் பார்த்துவிட்டு ஏமாற்றமாகிறார்.

ராதாரவியின் மகளான இன்னொரு ஹீரோயின் ஸ்ருதி ராமகிருஷ்ணனை நகுல் திருமணம் செய்ய காத்திருக்கிறார். அவரும் அப்படியே.. ஒரு டூயட் பாட்டுக்கேற்றபடி திரைக்கதை அமைத்து குளிர வைக்கிறார்கள்.

ராதாரவி ஏற்கெனவே 2 திரைப்படங்களை தயாரித்து படு தோல்வியையும், நஷ்டத்தையும் சம்பாதித்தவர். ஆனாலும் அடுத்தப் படத்தை எடுக்கத் தயாராக இருக்கிறார். இவரிடத்தில் கதை சொல்ல வருகிறார் இயக்குநர் பிரேம்ஜி. இவர் கதை சொல்லச் சொல்ல, அது அப்படியே ராதாரவியின் அன்றைய வாழ்க்கைக் கதையாகவும் மாறுகிறது.

அன்றைக்கே கோவிலுக்கு செல்வதற்காக ஸ்ருதியும், நகுலும் போக.. கோவில் அருகில் மறுபடியும் நிகிஷா பட்டேல் ஓடுவதையும் அவரை சில ரவுடிகள் துரத்துவதையும் பார்க்கும் நகுல், நிகிஷாவை காப்பாற்றக் களத்தில் குதிக்கிறார். நிகிஷாவின் கையைப் பிடித்துக் கொண்டு இவர் ஓட.. இவரைப் பின் தொடர்ந்து ஸ்ருதியும், ராதாரவியின் ஆட்களான எம்.எஸ்.பாஸ்கரும், வையாபுரியும் ஓடத் தொடங்க.. ஏன்.. எதற்கு ஓடுகிறார்கள்.. என்பதையே சொல்லாமல் அப்படியொரு வெறித்தனமாக ஓடுகிறார்கள் அனைவரும்.

இதே சம்பவத்தைத்தான் பிரேம்ஜியும் ராதாரவியிடம் கதையாகச் சொல்கிறார். இந்த ஒற்றுமையைப் பார்த்து ராதாரவி குழப்பமாகிறார். கடைசியில் பிரேம்ஜியின் கதையாடலை வைத்தே தனது மருமகனை கண்டுபிடிக்க முனைகிறார் ராதாரவி. பிரேம்ஜிக்கும், நகுலுக்கும் என்ன தொடர்பு..? எப்படி இவர்கள் இருவரின் கதையும் ஒத்துப் போனது என்பதெல்லாம் திரையில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

இந்தப் படத்தில் இரண்டுவிதமான ஆச்சரியப்படத்தக்க திரைக்கதை முடிச்சுக்கள் இருக்கின்றன. ஒன்று பிரேம்ஜி சொல்லும் கதையும், அவர்களின் வாழ்க்கைக் கதையும் ஒன்றாக இருப்பது. இன்னொன்று ஏன், எதற்கு என்று தெரியாமலேயே ஹீரோவும், ஹீரோயினும் ஓடிக் கொண்டேயிருப்பது. இந்த இரண்டிற்கும் முடிச்சுப் போட்டு தன்னால் முடிந்த அளவுக்கான ஒரு திரைக்கதை அமைத்து படமாக்கியிருக்கிறார் இயக்குநர். ஆனால் இதில் சுவாரசியம் குறைவாக இருப்பதுதான், படத்தின் வெற்றிக்குத் தடையாக இருப்பதன் காரணம்.

ஒரு மிகப் பெரிய பணக்காரரின் மகன். தனக்காக ஒரு காதலி காத்திருக்கும் தருணத்தில் இன்னொரு பெண்ணுக்கு உதவுவதற்காக ஏன், எதற்கு என்பதைக்கூட கேட்காமல் ஓடிக் கொண்டேயிருப்பதெல்லாம் டூ மச்சாக இல்லையா இயக்குநரே..? காரணத்தைக் கேட்டுவிட்டு காப்பாற்ற துடித்து, அதைச் செயல்படுத்துபவராக இருந்தால் நிச்சயம் இதுவொரு ஹீரோயிஸ படம் என்றே கொள்ளலாம்..

ஓடத் துவங்கும்போதே காரணத்தை சொல்லியிருக்கலாம். ஏனெனில் நிகிஷா பட்டேலின் துரத்தலுக்கான காரணம் தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் மனதைத் தொடும் ஒரு சம்பவத்தின் மூலமாகத்தான் நடந்தேறியிருக்கிறது. அந்தச் சம்பவத்தை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக கண்ணீர் வரவழைக்கும்படியாக உருவாக்கியிருந்தால்  படத்தின் இறுதியில் கைதட்டல்களையும் சம்பாதித்திருக்கும்.

நாயகி நிகிஷா பட்டேலின் கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு ஒரு சபாஷ். தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணக் கொள்ளையை வெளிப்படுத்த நினைத்திருக்கும் இயக்குநர் அதனை ஒரு காதல் படத்தில் சாதாரணமாக பயன்படுத்தியிருப்பதால் இது எந்தவிதத்திலும் பலனளிக்காமல் போய்விட்டது.

நகுலின் சாதாரணமான நடிப்புதான் இந்தப் படத்திலும், சண்டை காட்சிகளும், நடனக் காட்சிகளும் ஒரு ஹீரோவை ஒருபோதும் தொடர்ந்து நடிக்கவிடாது என்பதை இவர் எப்போது புரிந்து கொள்ளப் போகிறாரோ தெரியவில்லை.

நாயகிகளில் நிகிஷா பட்டேலுக்கு மெயின் ரோல் என்பதால் பார்க்க வைக்கிறார். ஆனாலும் நகுலுடன் ஒப்பிடுகையில் அக்கா, தம்பி போல் இருப்பதையும் சொல்லாமல் இருக்க முடியாது. இன்னொரு நாயகியான ஸ்ருதி ராமகிருஷ்ணனுக்கு ஸ்கோப் குறைவாக இருப்பதும், நடிக்கவே வாய்ப்பில்லாமல் இருப்பதும் அவரது துரதிருஷ்டம். டூயட்டுகளில் ரசிக்க வைக்கிறார். அவ்வளவே..!

படத்தை தாங்கி நிறுத்தியிருப்பவர்கள் ராதாரவியும், பிரேம்ஜியும்தான். ராதாரவியின் அனுபவப்பட்ட நடிப்புக்கு பிரேம்ஜி கொடுத்திருக்கும் கவுண்ட்டர் அட்டாக் டயலாக் டெலிவரிதான் பல இடங்களில் படத்தை ரசிக்க வைத்திருக்கிறது.

இடைவேளைக்கு பின்பு இவர்கள் சொல்லும் கதைதான் அடுத்து நடக்கப் போவது என்பது ஆடியன்ஸுக்கு தெரிந்துவிட்டது என்பதால் ஒவ்வொரு முடிச்சுக்கும் கொஞ்சம் இடைவெளிவிட்டு சஸ்பென்ஸுடன் அந்தந்த காட்சிகளை துவக்கியிருப்பதும், முடிப்பதும் இயக்குநரின் திரைக்கதை வித்தையைக் காட்டுகிறது. பாராட்டுக்கள் இயக்குநருக்கு.

எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரியின் தொடர் காமெடியுடன் பவர் ஸ்டார் சீனிவாசன், பாண்டு, மயில்சாமியும் சேர்ந்து கொண்டு அவ்வப்போது சிரிக்க வைத்திருக்கிறார்கள். இந்த பவர் ஸ்டாரை என்றைக்கு தமிழ் சினிமாவில் இருந்து தூக்கியெறியப் போகிறார்களோ தெரியவில்லை. இவரைவிட திறமைசாலிகள் பலர் இங்கேயிருக்கும்போது எதற்கு ச்சும்மா இது மாதிரியான வெத்து வேட்டெல்லாம்..?

கருப்பு வெள்ளை காலத்திலேயே ஒளிப்பதிவில் சாதனை படைத்திருக்கும் பி.எஸ். லோக்நாத்தின் மகனான சஞ்சய் லோக்நாத்துதான் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்திற்கு ஆறுதலான விஷயமும் அதுதான். தமிழகத்தில் எந்த ஊர் தியேட்டரில் பார்த்தாலும் அழகாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு தரமான ஒளிப்பதிவு.

மணிஷர்மாவின் இசையில் அதிகம் ஈர்ப்பில்லை. பாடல் காட்சிகளின் நேரத்தை முழுமையாக முடித்து வைக்கும் அளவுக்குத்தான் பாடல்கள் இருக்கின்றன. படத்தொகுப்பாளரின் கைவண்ணத்திற்கு ஒரு ஷொட்டு. ராதாரவி, பிரேம்ஜி சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் மிக அழகாகத் தொகுத்தளித்து ரசிக்க வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர்.

அருமையான இரண்டுவித திரைக்கதை சுவாரஸ்யங்கள் படத்தில் இருந்தும் எதை முன் வைத்து படத்தை கொண்டு போவது என்கிற குழப்பத்தில் இரண்டுக்கும் சரிசமமான அளவுக்கு பங்கு கொடுத்ததினால் படம் முழுமையாகவில்லை. இதற்கு ‘நாரதன்’ என்கிற தலைப்புகூட பொருத்தமில்லை. அப்படியென்ன நகுல் நாரதன் கலகம் செய்தார் என்பதும் தெரியவில்லை.

எப்படியிருந்தாலும் இடைவேளைக்கு பின்பு படம் பாயும் வேகத்தில், முன் பாதி சறுக்கலை தாங்கிக் கொண்டு முழுமையாக படத்தைப் பார்க்க அனுமதிக்கிறது நம் ரசிக மனம்..!

‘நாரதன்’ ஒரு முறை பார்க்கலாம் என்றுதான் சொல்ல வேண்டும்..!

Our Score