full screen background image

நாங்கள் – சினிமா விமர்சனம்

நாங்கள் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தில் அப்துல் ரஃபே, மி​துன்.வி, ரித்திக் மோகன், நிதின்.டி., பிரார்த்தனா ஸ்ரீகாந்த், சப் ஜான் எடத்தட்டில், ராக்ஸி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கம் அவினாஷ் பிரகாஷ், தயாரிப்பு ஜிவிஎஸ் ராஜு, இசை : வேத் சங்கர் சுகவனம், தயாரிப்பு வடிவமைப்பு விராஜ்பாலா.ஜே., ஒத்திசைவு ஒலி முகமது சாஜித், ஒலி வடிவமைப்பு சச்சின் சுதாகரன் (ஒத்திசைவு சினிமா), ஹரிஹரன்.எம்., ஒலிக்கலவை அரவிந்த் மேனன், கலர் கிரேடிங் யுகேந்திரா (கிராசஃப்ட்ஸ் ஒர்க்ஸ்), தயாரிப்பு நிர்வாகி கிருஷ்ண சேகர் டி.எஸ்., தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் .எம். சாதிக், பத்திரிக்கை தொடர்பு நிகில் முருகன்.

ஒரு சைக்கோ அப்பாவிடம் சிக்கி தவிக்கும் மூன்று பையன்களின் கதைதான் இந்த ‘நாங்கள்’ என்ற திரைப்படம்.

ஊட்டியில் மகாத்மா காந்தி பெயரில் ஒரு பள்ளியை நடத்தி வருகிறார் ராஜ்குமார். அவருடைய பொருளாதாரம் நிலைமை இப்போது மிகவும் சிக்கலாக இருக்கிறது பள்ளிக்கூடத்தில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு சம்பளம்கூட கொடுக்க முடியாமல் தவிக்கிறார் அதே நேரம் சிறிய அளவில் விவசாயம் செய்து வருவதால் அதை வைத்து கொஞ்சம் தன் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.

அவருடைய மனைவி பத்மாவுடன் இவருக்கு ஏதோ ஒரு பிரச்சனை என்பதால் மனைவியை அவருடைய அப்பா வீட்டிற்கு அனுப்பி விட்டு தன்னுடைய மூன்று பையன்களுடன் தன் வீட்டில் வசித்து வருகிறார். மின்சார கட்டணத்தைக்கூட கட்ட வழியில்லாமல் அந்த மூன்று பையன்களும் வீட்டில் அரிக்கன் விளக்கு வைத்து படித்து வருகிறார்கள்.

அதேசமயம் ராஜ்குமார் ஒரு மிகப் பெரிய சைக்கோ பேர்வழியாகவும் இருக்கிறார் படிக்கின்ற பையன்களிடம் எப்படி பேச வேண்டும்? நடந்து கொள்ள வேண்டும்? அவர்களை எப்படி நடத்த வேண்டும்? என்ற அடிப்படை அறிவுகூட இல்லாத இவர்தான் ஒரு பள்ளியின் தாளாளராம்.

தனது மகன்களை அடிமைபோல நடத்துகிறார் ராஜ்குமார். அந்தப் பையன்கள்தான் சமைக்க வேண்டும். அந்தப் பையன்கள் இவருக்கு எடுபுடி ஆட்கள்போல குளித்துவிட்டு வரும்போது சட்டை, பேண்ட்டை எடுத்து வைக்க வேண்டும். சாப்பாடு சமைக்க வேண்டும். டைனிங் டேபிளில் சாப்பாடு எடுத்து வைக்க வேண்டும். அதன் பிறகு ஷூக்கு பாலிஷ் போட்டு அதைக் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். இப்படியெல்லாம் ராஜ்குமாரின் ஆண்டான் அடிமை கலாச்சாரத்தில் அந்த சின்ன பையன்கள் பாவம் மாட்டிக் கொண்டு முழிக்கிறார்கள்.

அவருடைய மனைவி பத்மாவின் வீட்டுக்கு செல்லும் அந்தப் பையன்கள் அங்கேயே தங்கியிருந்து படிக்கலாம் என்று நினைக்கின்றபொழுது 40 ஆயிரம் ரூபாய் கட்ட முடியாத சூழலால் அந்த பையன்களை மறுபடியும் அவருடைய தாத்தா, அப்பாவிடமே அனுப்பி வைக்கிறார்.

மறுபடியும் அப்பாய் மகன்களை கொடுமைப்படுத்த ஆரம்பிக்கிறார். இந்த சூழலில் அவருடைய அம்மா மறுபடியும் இங்கே வந்து அவர்களுடன் இருக்கிறார். ஆனாலும் வந்தவரை மூன்று நாட்களில் அவருடைய அப்பா வெளியேற்றிவிட அந்தப் பையன்களுக்கு மிகப் பெரிய இடி விழுகிறது.

இதற்கு மேல் அந்த பையன்களின் கதி என்ன ஆனது?,, அந்த சைக்கோ ராஜ்குமாரின் நிலைமையும் என்ன ஆனது?.. என்பதுதான் இந்த நாங்கள் என்கின்ற படத்தின் திரைக்கதை.

மூன்று மகன்களாக நடித்தவர்களும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதிலும் மூத்த பையனாக நடித்தவன் கொஞ்சம் பொறுப்பை உணர்ந்தவனாக நடித்திருக்கிறான். கடைசி  மகன் அந்த வயதுக்குரிய ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தாலும் அப்பாவின் டார்ச்சரைத் தாங்க முடியாமல் தவிக்கின்ற அந்த இன்னசெண்ட் நடிப்பை நமக்கு காட்டி மொத்த பரிதாபத்தையும் வரவழைத்துக் கொள்கிறான்.

பொதுவாக பள்ளிக்குச் செல்லும் பையன்களின் சந்தோசமும், குதூகலமும் எந்த அளவுக்கு இருக்குமோ அதற்கு நேர் மாறாக இத்திரைப்படத்தில் இப்படி எல்லாம் ஒரு வீட்டில் ஒரு பையன்கள் இருந்தால் அவர்கள் எதிர்காலத்தில் என்ன ஆவார்கள் என்று நம்மால் கற்பனைக்கூட பண்ணி பார்க்க முடியாத அளவுக்கு ஒரு மெண்டல் டார்ச்சர் அனுபவிக்கும் இந்த மூன்று பையன்கள் சுமத்தப்பட்ட காட்சிகள் நிச்சயம் திரையரங்கில் படம் பார்க்கும் அத்தனை பேரையும் பாதிக்கும்.

அதோடு திரையரங்கில் அவர்களை ஒத்த வயதுடையவர்கள் படம் பார்த்தாலும் அவர்களுடைய மனதையும் வெகுவாக பாதிக்கும். அந்த அளவுக்கு இயக்குநர் இந்த சின்ன பையன்கள் டார்ச்சர் பெறுவதை வலுக்கட்டாயமாக பார்க்க வைத்திருக்கிறார்.

சைக்கோ அப்பாவாக நடித்த ராஜ்குமார் ஆக நடித்திருக்கும் அப்துல் ரஃபேக் இயக்குநர் என்ன சொன்னாரோ அதை மட்டும் செய்திருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் அவருடைய கதாபாத்திர வடிவமைப்பு இப்படித்தான் என்பதால் தன்னுடைய சைக்கோத்தனமான கேரக்டரை விரும்பி ரசித்து செய்திருக்கிறார்.

அம்மா பத்மாவாக நடித்திருக்கும் பிரார்த்தனா சங்கர் இருந்த சில காட்சிகளில் நம் மனதை கவர்ந்திருக்கிறார். அவருடைய சமையலை சாப்பிட்டு விட்டு நன்றாக இருக்கிறதா என்று ரகசியமாக கேட்டு பயன்களின் அந்த பதிலில் அவர் பூரிப்படையும் அந்த காட்சியில் அவருடைய முகம் காட்டும் நடிப்பு அசத்தல்.

அதே சமயம் அவர் வீட்டை விட்டு கிளம்பும்பொழுது அட.. இன்னும் கொஞ்ச நாள் இருக்கக் கூடாதா?.. கணவருடன் ஏன் சண்டை போடக்கூடாது..? என்று நம்மையே கேட்க வைப்பதுபோல் அவருடைய நடிப்பு அமைந்திருப்பது பாராட்டுக்குரியது.

மற்றும் அந்த படத்தில் நடித்திருக்கும் அந்த பையன்களின் தாத்தா, பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர், மற்ற ஆசிரியர்கள் அனைவருமே சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

படம் சைக்கோத்தனமான திரைப்படம் என்பதால் ஒளிப்பதிவாளர் இருன்மை தன்மையோடு இருட்டின் நிகழ்வுகளை அதிகமாக கொண்டு காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். அதிகப்படியான இருட்டையும் கொடுத்து நம் மனதையும் வெகுவாக பாதிக்க வைத்திருக்கிறார்.

இன்னொரு பக்கம் எப்படி எல்லாம் கோணங்கள் வைக்கப்பட கூடாதோ அப்படி எல்லாம் கேமரா கோணத்தை வைத்து நம்முடைய பொறுமையையும் ரொம்பவே சோதித்து இருக்கிறார் இயக்குநர்.

சைக்கோ ராஜகுமாரின் அறிமுக கட்சியில் அவருடைய முதுகுக்கு பின்னாலே கேமராவை வைத்து ஒரு பத்து நிமிடம் நம்மை அல்லாட வைத்திருக்கிறார். இது மாதிரியான ஒரு முட்டாள்தனமான கேமரா கோணத்தை வேறு எந்த படத்திலும் நீங்கள் பார்த்திருக்கவே முடியாது.

படம் நடைபெறும் இடம் ஊட்டி என்பதால் ஊட்டியின் அழகை காட்டுவார்கள் என்ற எதிர்பார்த்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள். ஒரு வீடு, ஒரு பள்ளிக்கூடம், அதிகபட்சம் ஒரு சாலை இதை மட்டுமே காண்பித்து இதுதான் ஊட்டி என்று நம்மை நம்ப வைத்திருக்கிறார்கள்.

பின்னணி இசையில் அதிகப்படியாக நம் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஒரு சோக காவியத்தை படம் நெடுகிலும் ஒழிக்கவிட்டு நம் மனதை பிசைய வைத்திருக்கிறார் இசையமைப்பாளர். ஆனால் பாடல் காட்சிகள் மாண்டேஜ் சாட்சிகளாக வருவதால்.. ஒரு முறை கேட்கலாம் போலத்தான் இருக்கிறது.

படத்தில் நமக்கு மிகவும் பிரச்சினையாக இருப்பது சைக்கோ ராஜ்குமாரின் கேரக்டர் ஸ்கெட்ச்சுதான். பள்ளிக்குச் செல்லும் பையன்களிடம் எப்படி பேச வேண்டும்..? பழக வேண்டும்? நடந்து கொள்ள வேண்டும் என்பதே தெரியாத ஒரு சைக்கோவாக அவர் இருந்து கொண்டு பொருளாதாரச் சுமையைச் சமாளிக்க முடியாமல்.. தாங்க முடியாமல்தான் இப்படி சைக்கோவாக இருக்கிறார் என்று சொல்வதை என்பதை நம்மால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

குழந்தைகளிடம் எப்படி பேசுவது? நடந்து கொள்வது.. என்பது அவருடைய தனிப்பட்ட குணங்களை பொறுத்தது. ஆனால் ஒரு தோல்வியால் ஏற்படுகின்ற மன மாற்றம் அப்போதைக்கு அப்போது மாறும். அதை வைத்து இதனால்தான் அவரது கேரக்டர் இப்படி மாறியது என்று சொல்லிவிட முடியாது.

இந்தப் படத்தில் இயக்குநர் செய்திருக்கும் தவறும் அதுதான். ஒரு சைக்கோகாரனிடம் பிள்ளைகள் மாட்டிக் கொண்டு முழிப்பதுதான் படத்தின் கதை என்று சொல்ல வந்தால் அதுதான் அவரது கேரக்டர் ஸ்கெட்ச்.. குணாதிசயம் என்று பதில் சொல்லி கதையை மாற்றுகிறார். இது சமூகம், மனிதர்களின் குண நலன்கள், கதாப்பாத்திர வார்ப்பு ஆகியவை பற்றி இயக்குநரின் புரிதல் இன்மையையே காட்டுகிறது.

தொழிலில் நஷ்டம். பள்ளிக்கூடத்தை நடத்த முடியவில்லை என்றால் எப்போதோ, யாரிடமோ விற்றுவிட்டு போயிருக்கலாமே..! ஆனால் அதற்காக தன்னுடைய பெற்ற பிள்ளைகளையே வேலைக்காரனை போல் வேலை வாங்குவதும், அடிமைத்தனமாக நடந்து கொள்வதும் எந்த வகையில் நியாயம்..

இது சாதாரண நல்ல மனநிலையில் உள்ள ஒருவன் செய்யக் கூடிய செயல் அல்ல. மேலும் சைக்கோத்தனமான குணாதிசயம் உள்ள ஒருவன் எப்படி ஒரு பள்ளியின் தாளளராக இருக்க முடியும்..? எப்படி ஒரு பள்ளியை திறம்பட நடத்த முடியும்…? அவன் எப்படி ஒரு பிள்ளைகளிடம் பேசி அந்த பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்து மேலே கொண்டு வர முடியும்.? தன்னுடைய சொந்த பிள்ளைகளிடம்கூட அன்பாக பேசி பழக முடியாதவன் எப்படி வெளியுலகத்தில் ஒரு நேர்மையானவனாக, நல்லவனாக இருக்க முடியும்..?

இவ்வளவையும் செய்துவிட்டு அவருடைய வீட்டில் வேலை செய்தவர்கள்.. தோட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு பணம் கொடுத்து அனுப்பிவிட்டு ஒரு ஓரமாக சென்று கதறி அழுகிறாராம்.. தன்னுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டது என்று..! நம்பக் கூடியதாகவா இருக்கிறது..? நல்லா சாவுடா என்றுதான் நம்முடைய வாயில் வருகிறது. அப்புறம் எப்படி இந்த சைக்கோ மீது நமக்கு ஒரு பரிதாப உணர்வு வரும்.

இந்தப் படத்தை தியேட்டரில் அந்த மூன்று சிறுவர்களின் வயதை ஒத்த சிறுவர்கள் பார்த்தால் நிச்சயமாக அவர் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். நிச்சயம் இந்தப் படம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம் அல்ல.

படத்தை பார்க்க விரும்புபவர்கள் தனியாக சென்று பாருங்கள். தயவு செய்து குழந்தைகளை மட்டும் அழைத்துச் சென்று விடாதீர்கள். அது உங்கள் தலையில் நீங்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வது போல் ஆகிவிடும்.

இது நிச்சயமாக சிறுவர், சிறுமிகளின் மனதில் மிகப் பெரும் தப்பிதத்தையும் ஒரு பயத்தையும் உருவாக்கி விடும். எச்சரிக்கிறோம்..!

RATING : 2 / 5

Our Score