‘பட்டதாரி’ ஜோடி மீண்டும் இணையும் ‘நாங்க வேலைக்கு போயிட்டா… ஊரை யார் பாத்துக்கிறது’

‘பட்டதாரி’ ஜோடி மீண்டும் இணையும் ‘நாங்க வேலைக்கு போயிட்டா… ஊரை யார் பாத்துக்கிறது’

இன்றைய தேதியில் ஒரு படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறவேண்டும் என்றால் அதற்கு முதல் தேவை நல்ல டைட்டில்தான். அது புதுமுகங்களோ, அல்லது ஓரளவு தெரிந்த முகங்களோ என்றாலும்கூட டைட்டில் கவனம் ஈர்க்க வேண்டும். அப்படி உருவாக இருக்கும் படம்தான் ‘நாங்க வேலைக்கு போயிட்டா.. ஊரை யார் பாத்துக்கிறது?’.

எவர்கிரீன் என்டர்டெயினர்ஸ் நிறுவனம் சார்பில் M.விஜயகாந்த் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ஆதி நடித்த ‘அய்யனார்’ படத்தை இயக்கிய S.S.ராஜமித்ரன் இந்தப் படத்தை இயக்குவதுடன் இணை தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்றுள்ளார். கன்னடத்திலும்கூட ஒரு படத்தை இயக்கியுள்ள இவர் இயக்கும் மூன்றாவது படம் இது.

ரவுடியிசம் தலைவிரித்தாடும் பகுதியில் வசிக்கும் இளைஞன் ஒருவன், கல்விதான் வாழ்க்கையில் முன்னேற்றம் தரும் என்கிற நம்பிக்கையுடன் கல்லூரியில் படித்து கோல்டு மெடல் வாங்குகிறான். ஆனால் காலம் அவனையும் ரவுடியாக மாற்ற முயற்சிக்கிறது. அவன் ரவுடியாக மாறினானா..? அல்லது தான் கற்ற கல்வியை வைத்து பிரச்சனைகளை சாதுர்யமாக எதிர்கொண்டானா என்பதுதான் படத்தின் கதைக் கரு. இதை காதல், காமெடி கலந்து சொல்ல இருக்கிறார்கள்.

சமீபத்தில் வெளியான ‘பட்டதாரி’ படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த அபி சரவணன்-அதிதி இருவரும் இந்தப்படத்தின் மூலம் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த காமெடி வசனங்களுக்கு சொந்தக்காரரான எழிச்சூர் அரவிந்தன்தான் இந்தப் படத்தின் வசனங்களை எழுதுகிறார்.

பார்த்திபனின் ‘குடைக்குள் மழை’ மற்றும் பா.விஜய் நடித்த ‘இளைஞன்’ உட்பட பல படங்களில் பணியாற்றிய சஞ்சய் இந்தப் படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க, ‘சாலையோரம்’ படத்திற்கு இசையமைத்த சேதுராஜா.S இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

‘மொழி’, ‘அபியும் நானும்’, சமீபத்தில் வெளியான ‘மாவீரன் கிட்டு’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய படத்தொகுப்பாளர் காசி விஸ்வநாதன் இந்தப் படத்தின் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். பாடல்களை யுகபாரதி எழுதுகிறார். சண்டை காட்சிகளை சூப்பர் சுப்பராயன் வடிவமைக்கிறார்.

வரும் ஜனவரி முதல் வாரத்தில் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

 

Our Score